Thursday, July 31, 2014

இன்னா நாற்பது - 1-2-3-

               

பாடல்: 01 (பந்தம்...)
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.


சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பாடல்: 02 (பார்ப்பார்...)
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

பாடல்: 03 (கொடுங்கோல்)
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

1 - இன்னா நாற்பது



உள்ளே புகுமுன்...

தமிழில், தமிழையும், புலவர்களின் பாடல்களையும் சுவைக்க பல நூல்கள் உள்ளன.அவற்றில், என்னால் முடிந்தவற்றை அனைவரும் ரசிக்கும் வகையில், ருசிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ.

இதில் நான் பதியும் பாடல்களை படியுங்கள், ரசியுங்கள்...

முதலில்  "இன்னா நாற்பது:

நாற்பது என்னும் எண் தொகையில் குறிக்கப் பெறும் நூல்கள் நான்கு.. அவை...

கார் நாற்பது,களவழி நாற்பது,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை.இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும், இன்பம் தரும் செயல்களையும் உரைக்கின்றன.

இன்னா நாற்பதில், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, அவை இன்னா எனக் கூறுதலால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

இந்நூல் ஆசிரியர் கபில தேவர்

கடவுள் வாழ்த்தில், சிவபெருமான், பலராமன்,திருமால், முருகன் என அனைத்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளது சிறப்பு..

இனி கடவுள் வாழ்த்து...

கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.



முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

இனி அடுத்த பாடல்கள் அடுத்த பதிவில்.