Saturday, August 30, 2014

ஐந்திணை ஐம்பது - 1 முதல் 10 வரை



பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான் ஐந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.பாலை ஆகிய ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றமையால் ஐந்திணை ஐம்பது என பெயர் பெற்றது.நூலின் இறுதியில் பாயிரச் செய்யுள் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது.இந்நூலாசிரியர் மாறன் பொறையனார்.(இப்பெயரில் மாறன் என்பது பாண்டியனையும், பொறையன் என்பது சேரனையும் குறிப்பதாய் உள்ளது ஆதலால் இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புள்ளவராய் இருந்திருக்கலாம்.)பொறையனார் இவர் இயற்பெயரும், மாறன் இவர் தந்தை பெயர் என்றும் கொள்ளலாம்.

இனி பாடல்கள்=

முதல் பாடல்-
   
(தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது)

மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்! -
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்!

     "(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.

பாடல் - 2


அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து, - பணிமொழி! -
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள்.


     "மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

பாடல் - 3


மின்னும், முழக்கும், இடியும், மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய, - முல்லை
முகை வென்ற பல்லினாய்! - இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்?


     "தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.

பாடல்-4

உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார்.


     "ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.

பாடல்-5

கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண்.


என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.

பாடல்-6

முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.


மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.

பாடல்-7

தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.


 கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.

பாடல்-8

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?

வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

பாடல்-9

வருவர் - வயங்கிழாய்! - வாள் ஒண் கண் நீர் கொண்டு,
உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
பைங்கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
வம்ப மழை உரறக் கேட்டு.


    "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.

பாடல்-10


நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள்மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம்.


     "கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.

Friday, August 29, 2014

களவழிநாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்- 31

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.


  சோழன் பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.

பாடல் - 32

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.


 சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில், குற்றம் இல்லாத உடலைப் பெற்ற நிலம் என்னும் நன்மைகள் தரும் பெண்ணானவள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வதைப் போல வீரர்கள் சிந்திய இரத்தம் எங்கும் பரவியது.

பாடல் - 33

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே-
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.


வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.

பாடல் - 34

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து.

     அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.

பாடல் - 35

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து.



     சோழ வேந்தனின் வேல்கள் பாய்ந்தமையால் எதிர்த்த அரசனும் வீழ்கிறான். அவன் ஏறி வந்த பட்டத்து யானையும் வீழ்கிறது. அக்காட்சியானது சிவந்த மலை மீது இடி வீழ்ந்தமையால் மலையோடு சிங்கமும் சிதறுண்டு கிடக்கும் காட்சி போல் உள்ளது.

பாடல் - 36

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,-
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.


     சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.

பாடல் = 37

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.



     சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.

பாடல் - 38

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.



     பொன்னால் ஆகிய மாலையினையும், கழலினையும் அணிந்து பகைவர்களை வென்ற போர்க்களத்தில் புண்பட்ட பருத்த உடலையும் கழுத்தையும் உடைய யானைகள் வலி தாங்க முடியாமல் தவிக்கும். இடியின் ஒலியைக் கேட்டுப் பாம்புகள் உருள்வன போல இருபக்கங்களிலும் புரண்டு துடிக்கும்.

பாடல்-39

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.


 சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.

பாடல் - 40

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.



     சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.

பாடல் - 41

வேல் நிறத்து இயங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.


     அருவி பாயும் நீர் நாடன் இடி முரசு போன்று கொடியவர்களை வென்ற போர்க்களத்தில், வேல்களால் மார்பில் குத்தப்பட்டுத் தளர்ந்துபோன யானைகள் கலக்கம் அடைந்து ஒரு பக்கக் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்தன. அக்காட்சி, நிலமகள் கூறும் அறக்கருத்துகளை யானைகள் பணிவோடு கேட்கும் நிலைபோல் தோன்றியது.

மிகைப் பாடல்

படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும் - செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.



     பாண்டியன் கண்கள் சிவந்தது போன்று சிவந்த போர்க்களத்தில், போருக்கு உரிய மாலைகளை அணிந்து போரிட்டு மாண்ட மன்னர்களின் பருத்த குடல்களைத் தின்ற நரிகள், வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகளின் அருகே தூங்குவது முழு நிலாவிற்கு அருகில் உள்ள முயல் வடிவக் களங்கம் போன்று இருந்தது.

Thursday, August 28, 2014

களவழிநாற்பது - 21 முதல் 30 வரை



பாடல் - 21

இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற - செங் கண்
சின மால் பொருத களத்து.


     சோழன் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகளின் கழுத்துக்குக் கீழ் மார்புப் பகுதிகளில் ஒரே அளவான வேல்கள் பாய்ந்து புண்களை உண்டாக்கின. அதற்கு முன் தைத்த அம்புகள் வலியை ஏற்படுத்தின. இந்த நிலையில் பாகர்கள் துணையில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு உடல் நடுங்கச் சோர்வோடு நின்ற யானைகள் நிலையாக நிலங்களில் இடம்பெற்ற மலைகள் போன்று இருந்தன.

பாடல்- 22

இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
கூடாரை அட்ட களத்து.


    சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத வீரர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில் வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது

பாடல்- 23.

எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே-
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.



     வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால் பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப் படர்ந்த மேகம் போல் இருந்தன.

பாடல்-24

திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.



     சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.

பாடல்-25

மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.



     சோழ மன்னன் பகைவரை அழித்த போர்க்களத்தில் மலைகள் நடுங்க மலைகள் வந்து மோதுவன போல யானைகள் யானைகளுடன் மோதின. அப்போது யானைகள் மீது கட்டப்பட்டிருந்த கொடிகள், வானத்தில் பட்ட இரத்தக் கறைகளைத் துடைப்பன போல் நிமிர்ந்து பறந்து ஆடின.

பாடல்-26

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும் - புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து.



     சோழ வீரர்கள் போரில் எதிரிகளின் கைகளைத் துண்டாக்கிக் கீழே விழச் செய்தனர். சிவந்த காதுகளை உடைய ஆண் கழுகுகள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வானில் பறந்தன. அக்காட்சி பாம்பினை வாயில் தூக்கிச் சென்ற கருடன் வானில் பறப்பது போல் தோன்றியது.

பாடல்-27

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.


     சோழ மன்னன் தன்னை அடையாதவர்களை (பகைவர்களை) வென்ற களத்தில், இரத்தச் சேற்றில் முன்னும் பின்னுமாக நடந்து யானைகள் கோபத்தினால் மிதித்தலால் உண்டான குழிகளில் வீரர்களின் சிவந்த கண்களோடு புதிய இரத்தமானது திரண்டு தேங்கியது. அது சிவந்த மலர்களைக் கொண்ட நீரினைக் கொண்ட அகன்ற சால்களைப் போன்று இருந்தது.

பாடல்-28

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.


     சோழன் பகைவர்களை வென்ற களத்தில், பெருமிதத்தோடு போரிட்ட போர்க்களத்தில் வீரர்கள் பகைவர்தம் கைகளை ஏந்திய கேடயத்தோடு அறுபட்டு வீழுமாறு வெட்டினர். அக்கைகளை நரிகள் கவ்விக் கொண்டு ஓடின. அந்தத் தோற்றம் தம் முகங்களைக் கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதர்களைப் போல அந்நரிகள் பக்கத்தில் நிற்பவர்களுக்குக் காட்சி தந்தன.

பாடல்- 29

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப - செங் கண்
சின மால் பொருத களத்து.



     சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர்.

பாடல்-30

மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்-
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து.


     சோழன், அடங்காத வீரர்களைச் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட போர்க்களத்தில் பொங்கி ஓடும் இரத்த வெள்ளமானது கொல்லப்பட்ட யானைகளின் உடல்களை இழுத்துக்கொண்டு செல்வது, மலைகளோடு மலைகள் மோதுமாறு மலைகளைத் தூக்கி எறிந்தும் உருட்டியும் இழுத்துக் கொண்டு ஓடும் வெள்ளம் போல் இருந்தது.

Wednesday, August 27, 2014

களவழி நாற்பது - 11 முதல் 20 வரை



பாடல்- 11

கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும் - அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து.


     கொடிய போர்க்களத்தில் வீரர்கள் விட்டொழித்த போர் முரசம், குருதி வெள்ளத்தில் மிதந்து வர, போரில் கண்ணிழந்த யானை முரசை உதைக்க, மேகக்கூட்டம் முழங்குவதுபோல் ஒலி தரும்படி சோழன் போர்க்களம் காட்சி தந்தது.

பாடல்- 11

ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம்
தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப்
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே-
காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக்
கூடாரை அட்ட களத்து.



     காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.

பாடல்- 13

நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானைக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து.



     முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது.

பாடல்- 14

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும் - புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து.


     சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானைகளின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டதால் அவற்றிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. அந்தக் காட்சி பைகளில் இருந்து பவளங்கள் இடைவிடாது கொட்டுவது போல் இருந்தது.

பாடல்-15

கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே - செங் கண்
சின மால் பொருத களத்து.


     சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகள் எல்லா இடங்களிலும் பாய்ந்தமையால் சிதைக்கப்பட்ட வெண்கொற்றக் குடைகளும் பிணங்களும் எங்கும் காணப்பட்டன. அக்காட்சி, தச்சுத் தொழில் வல்லவர், தச்சுத் தொழிலைச் செய்தும் பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகின்ற தொழிற்பள்ளிக்கூடம் போல் இருந்தது.

பாடல்-16

பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து.


     சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.

பாடல் - 17

ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.


    போர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.

பாடல்-18

நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து.


     போர்க்களத்தில் வீரர்களின் பிணங்களை, அங்கே பொங்கி வழியும் இரத்த வெள்ளமானது இழுத்துச் செல்லும். அக்காட்சி, கடற்கரை ஓரத்தில் கட்டுமரங்களை அலைகள் இழுத்துச் செல்வது போல் தோன்றியது.

பாடல்-19

இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.


     வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.

பாடல்- 20

இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.


   கழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.

Tuesday, August 26, 2014

களவழி நாற்பது - 1 முதல் 10 வரை





பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் கூறும் ஒரே நூல் களவழி நாற்பது.சோழ மன்னன் கோச்செங்கணானுக்கும், சேரமான் கணக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னால் எழுதப்பட்டது.இந்நூல் ஆசிரியர் பொய்கையார்.இவர் சேர மன்னனின் நண்பர்.போரில் சேரன் தோற்று கைதி ஆகிறான்.அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பெற்றது இந்நூல்...இதில் உள்ள நாற்பது பாடல்களும்..அக்கால போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படையினரும் புரிந்த வீரப்போர் பற்றியதையும் கவி நயத்துடன் கூறப்பட்டுள்ளன.யானைப்படையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகின்றன பாடல்கள்.
அனைத்து பாடல்களும் "களத்து" என முடிவது சிறப்பு.

இனி பாடல்களைப் பார்ப்போம்

பாடல் -1


நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து.



     சோழன் குற்றங்கள் செய்த பகைவரை வீழ்த்திய போர்க்களத்தில் சூரியன் தோன்றிய இளங்காலையில் பகைவர் மீது வாள் ஆழமாகப் பதிந்தது. அதனால் வழிந்த இரத்தத்தைப் போர்க்கள யானைகளின் கால்கள் கலக்கின. முற்பகலில் குழம்பைப் போன்ற சேறாக மாறியது. பிற்பகலில் வெயில் காய்ந்து யானைகளால் தூளாகிப் பிறகு பவளப் புழுதி போல் எங்கும் பறந்தும், பரவியும் இருக்கும்.


பாடல்- 2

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப்
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி,
கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ்
நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.



     சோழன் ஆராவாரித்துப் போரிட்ட போர்க்களத்தில் தரை மீது கிடந்த யானையின் கீழே, மூடுதுணியும் இல்லாத போர்முரசு சிக்கிக் கொண்டது. அந்த முரசின் உள்ளே புகுந்த யானையின் இரத்தம் வெளியே வருகிறது. அவை மழைநீர் நிரம்பிய நீர்க்குளத்தின் கரையின் கீழே உள்ள மதகுகள் சிறிது சிறிதாகத் தண்ணீரை உமிழ்ந்து வெளிப்படுத்துவன போல் இருந்தது.

பாடல் - 3

ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து.


     இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.

பாடல் - 4

உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப்
பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில்
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால்
புல்லாரை அட்ட களத்து.


     திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது.

பாடல் - 5

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்
தப்பியார் அட்ட களத்து.


     சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின. செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின. மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.

பாடல் - 6

நால் நால் - திசையும் பிணம் பிறங்க, யானை
அடுக்குபு பெற்றிக் கிடந்த - இடித்து உரறி,
அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும்
பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண்
ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன்
வேந்தரை அட்ட களத்து.


     அருமையான மணிகள் கோர்த்த மாலையை மார்பிலே அணிந்தவனும் திண்ணிய தோள்களை உடையவனுமான சோழன் வேந்தர்களை வென்ற போர்க்களத்தில், பிணங்கள் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டன. யானைகள் கொல்லப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டன. இது மலைமீது விழுந்த இடியினால் பிய்த்தெறியப்பட்ட புதர்கள் மலை மீது சிதறிக் கிடப்பன போல இருந்தன.

பாடல் - 7

அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங் கண்
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து.



     சிவந்த கண்களை உடைய வரால் மீன் விளையாடும் காவிரி பாயும் நாட்டினை உடைய சோழனது பொருந்திய படைகளை உடைய போர்க்களத்தில், கரிய மலையைப் போன்ற யானையானது, போரிட்டு இரத்தக் குளியல் நடத்தியதால் சிவந்த உடலைப் பெற்றுச் சாதிலிங்க மலை என்னும் சிவந்த மலையைப் போல காட்சி அளித்தது.

பாடல் - 8

யானைமேல் யானை நெரிதர, ஆனாது
கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும்
எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே-
பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.


     முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது.

பாடல் - 9

மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள்
நீலச் சுறாப் பிறழ்வ போன்ற - புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.



     சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.

பாடல் - 10

பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது
ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின்
செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.

  சோழன் பகைவர்களை வென்ற களத்தில், உடல் முழுமையும் அம்புகள் பாய்ந்து இரத்தத்தைப் போர்வையாக்கிக் கொண்டு மேலே தொடர முடியாமல் அசையாமல் உள்ள காட்சி, தொன்று தொட்டே செம்மை நிறம் படிந்து வரும் சிறப்பினைப் பெற்ற செம்மலை போல் தோன்றும்.

Monday, August 25, 2014

கார்நாற்பது - 36 முதல் 40வரை



பாடல் 36

சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

குளிர்ச்சிமிக்க செம்முல்லைப் பூக்கள் மீன் குத்திக் குருவியின் வாய் போலும் அழகுடையவனாகி வரிசை பொருந்த அரும்பின.(ஆதலினால் இப்போது)செல்வத்தையுடைய மழைபோல குளிர்ந்த மதர்த்த கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய காதலியது ஊரானது நமக்கு நல்ல விருந்தாகுமிடமாகட்டும்


பாடல் -37



கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர்.

கரிய கடலின் நீரைக் குடித்த , நிறைந்த சூலினையுடைய மேகம் இரு பெரிய கற்களையுடைய பக்க மலையின் மேல் ஏறியிருந்து நீரைச் சொரியும் மிக்க செவ்வியையுடைய காலத்தும் அரசனது போர்த்தொழில் வாய்க்கப்பெற்ற நம் தலைவர் வாராதிருப்பாரோ!


பாடல் - 38

புகர்முகம் பூழிப்1 புரள வுயர்நிலைய2
வெஞ்சின் வேழம் பிடி யோ டிசைந்தாடுந்3
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒன்டொடி யூடு நிலை.

உயர்ந்த நிலையினையுடைய கடுங்கோபம் கொண்ட ஆண் யானைகள் புள்ளிமையுடைய முகம் புழுதியில் புரளும் வகையில் பெண் யானைகளுடன் கூடி விளையாடும் குளிர்ந்த செவ்வியையுடைய காலத்திலும் தலைவர் வரவில்லை (ஆதலால்) ஒள்ளிய தொடியினையுடையாளே அவருக்காக ஊடல் கொள்வதில் பயன் என்ன?


பாடல் - 39


அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

வண்டின் கண்ணினை ஒப்ப அரும்பினை ஈன்று, பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியினது பழைய தழையைச் சூடிக் கொண்டு , பெரிய புனங்களை உழவர் புதிதாக ஏர் விழுக்கத் தொடங்கினார்கள் (ஆதலால்) நம் ஊரின் கண் நம் தலைவர்க்கு பெரிய அலராயிற்று.



பாடல்-40.

வந்ததன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் 2கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.


மெல்லிய பேதையே!  தலைவர் செய்த குறிகள் வந்து விட்டன. அவர் வரமாட்டார் என வருத்தப்பட்ட ஒருத்தியாகிய உனக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி, அழகிய முகில் ஈந்தின் கனியின் நிறம் போல கொண்டது உன் நுதல் இனி ஒளி வரப் பெறும். (என தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறினாள்))




சிறப்புப் பாயிரம்

முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.


     முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.

Sunday, August 24, 2014

கார்நாற்பது - 31 முதல் 35 வரை



பாடல் 31

கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி.

உரை- எருமையினது எழுச்சியையுடைய ஆண் மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு போரின்கண் மறமிக்க வீரரைப்போல இறுமாந்திருக்கும் காலமே அழகிய நெற்றியுடையாளுக்கு நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்.(ஆகவே விரைந்து தேரைச் செலுத்துவாய்)

பாடல் - 32

கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு.

அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனதைப்போல , கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள் காட்டின்கண் பிடவமாகிய பெருந்தகையாளிடத்து நன்றாக இசைப்பாட்டினை பாடா நிற்கும்.பாகனே..மேகம் ஓடுதலைக் கண்டு தேரை விரைவாகச் செலுத்துவாயாக.

 (பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாட்டிசைப்பவர்கள் பரிசில் கருதிப் பாடுவது போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின எனப்பட்டது)

பாடல் - 33

கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்1
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட.

கடலினிது நீரை முகர்ந்த , நிறைந்த சூலினையுடைய மேகம், மேற்கு மலையிடத்து தான் கொண்ட நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினையுடைய மொழியை உடையவளது வருத்தம் நீங்க குறி செய்தேம்( ஆதலால் தேரினை விரந்து செலுத்துக)

பாடல் -34


விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணிந்த
ஒண்ணுதல் மாதர் திறத்து.

மிக்க பெருமையையுடைய மேகம் விரித்த அலையையுடைய கடலினிது நீரை நிறைய உண்டு பெரிய மலையை அடையா நிற்கும்.
மழை சூழ்ந்து கொள்ளும் கார் காலத்தை தெய்வ உத்தியென்னும் தலைக்கோலத்தை(ஒருவித தலையணி) அணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய காதலியினிடத்து (தான் மீண்டும் வரும் காலமாக) தலைவன் குறிப்பிட்டான்.


பாடல் - 35 .

சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு.

விதியினால் பிரிந்து சென்ற தலைவன் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென நினைத்து பசலை நோயுடனே , பலதுன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியினையுடைய மேகம் வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப்போல வானில் இருந்தும் இரங்கா நிற்கும்.

Friday, August 22, 2014

கார் நாற்பது - 26 முதல் 30 வரை


பாடல் - 26

.நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சில மொழி1
தூதொடு வந்த மழை.

சிலவாகிய மொழியினையுடையாய்..தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி இடமெல்லாம் பூத்தன.மழையும் தூதுடனே வந்தது.

(கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது)

பாடல் - 27

முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்1
பள்ளியுட் பாயும் பசப்பு.

மேகம் குறிஞ்சிப் பறைபோல முழங்குதலைச் செய்ய, காட்டில் குருக்கத்தியிலை விரிந்தன.(நம் காதலர்கள்) பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, நாம் ஊடுதலைப் பாராட்டுவதால் பசலை நோய் படுக்கையிடத்தில் பரவும்.

பாடல் - 28

இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்2
பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.

ஒலிக்கும் இசையினையுடைய வானம் முழங்குதலைச் செய்ய குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப்பட்ட குழை போல கொத்துக்களாய் தொங்க, மனமே ,,நம் காதலியின் ஊருக்கு அலர்கெடும் வகை நாம் செல்வதற்கு காடுகள் குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின.

(அலர் _ஊரார் கூறும் பழிசொல்)



பாடல்- 29

.

பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய சுரம்.

சோலைகளெல்லாம் பக்கங்களில் பூத்தன.காட்டின் கண்ணே தங்குதலின்றித் திரியும் அழகையுடைய வண்டுகள் இசைப்பாட்டைப் பாடா நின்றன.பகைத்தெழுந்த மேகம் எல்லாத் திசைகளிலும் வந்தது.காடுகளும் தட்பமுடையவாயின.(ஆதலால்)நாம் செல்லக் கடவேம்.



பாடல் - 30

.வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநற1
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து.

மலைகள் வளம் நிறைய வானம் சிறப்பெய்த பெரிய பூமியைய் துளிகளால் ஊடறுத்து இனிய மழை விழாமல் நிற்க, நறுமணம் கமழா நிற்க உதைக் காற்றனாது காதலியின் தலைவன் வரமாட்டான் என கருதி வருந்தியிருக்கும் அறியாமையை நமக்குத் தெரிவித்து, நறிய குளிர்ந்த சோலையில் அசையாமல் நிற்கும்.(ஆதலால்) நீ விரைவில் செல்வாயாக.

Wednesday, August 20, 2014

கார்நாற்பது - 21 முதல் 25



பாடல் - 21

 பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து.

எந்திரச் செய்கைகளான மாட்சிமைப் பட்ட ,அலங்கரிக்கப் பட்ட திண்ணிய தேர் வந்த வழியிதே! சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம் கூர்மையுற்று செவ்விய அழகிய நெற்றியையும், வளப்பான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும். சிலவாகிய மொழியினையுமுடைய மடவாளது வாயின்கண் உள்ள கூறிய பற்களை ஒவ்வா நிற்கும்.

பாடல் - 22

 இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு.

சேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க , தலையாட்டம் அணிந்து .புல்லினை உண்ட மனஞ்செருக்கிய குதிரையையும், தேருடன் பூட்டுதலைச் செய்ய .காடுகள் நற்குணமுடைய மகளிரின் இளமைச் செவ்விபோல அழகுற்று வருவாயுடையாரது செல்வம் போல பொலிவுற்றன.

பாடல் - 23

 கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை.

ஒள்ளிய வளையல்களை அணிந்தவளே! காடெங்கும் இடந்திரண்ட மேனி திரண்டமுத்தத்தை யொப்ப குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் மேகம் மழைபொழிந்து கொண்டு, அழகினையுடைய வானத்திடத்தையெல்லாம் கொண்டது



பாடல் - 24

 எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந் தோன்றும் பெயல்.

மலைகள் உயர்ந்த காடுகள் யானையின் மதம் நாறா நிற்கும், கரிய வானத்திங்கண் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும்.(ஆதலால்) பலவாகிய கரிய கூந்தலையுடையவள் ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்.மனமே! எல்லா தொழில்களும் ஒழிந்து நிற்க.நீ போதற்கு ஒருப்படு.


(பருவங்கண் டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது)

பாடல்- 25

 கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு.

குளிர்ச்சி மிக்க காட்டில், கரிய தாளினையுடைய வரகினது பொரியைப்போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன.(தலைவன்)செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்கு பசலை அதிகரித்தது.

Tuesday, August 19, 2014

கார்நாற்பது - 16 முதல் 20 வரை


பாடல் - 16

சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள.

பெரிய தோளினையுடையாய்! அசோகினது இளந்தளிர் போன்ற இன் உடம்பினது பசலையானது, மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் செயலற்று துன்பமுறவும் , பெரிய மயில்கள் களித்து ஆடவும்..பெரிய ஒலியையுடைய மேகங்கள் முழங்காமல் நிற்கும்.
(தலைவன் வருகைக் கண்டு தலைவி மகிழ்ச்சியை அடைய)



பாடல் - 17

அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.

பேதையே! மேகமானது கடல் நீரைக் குடித்து, பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புகளை வருத்தி பாறை கற்களையுடைய பக்க மலையின் மேல் நீரைச் சொரிந்து இருளை மிக்கது.(ஆதாலினால்) உனது நெற்றி பிறை மதியின் அழகை கொண்டதே!


.பாடல் - 18


கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.

மலைநெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் ,  வந்த பொழுதே மேகங்கள் மிக்க ஒலியையுடைய உருமேற்றுடனே நடுவு நின்று எங்கும் பெய்தலால் வறுமையுற்றார் உடம்புபோல முன்பு பொலிவிழந்த  காடுகள் பொருளுடையார் மனம் போல அழகைத் தந்தன.


பாடல் - 19


நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.

கலப்பைப்படை வெற்றியையுடையவனது வெண்ணிறம் போல பூங்கொம்பினையும், செவ்விய தாளினையுமுடைய வெண்கடம்புகள் மலர்ந்தன.ஆதலால்..என் மனம், பசுமையாகிய திரண்ட வளைகள் விளங்குகின்ற முன்னங்கையை உடையவளின் தோள்கள்  துணையாக வேண்டி நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது.

(கலப்பப்படை வென்றவன் - பலராமன்)



பாடல் - 20

வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.

சிறப்பமைந்த அரசனுடைய போர்த்தொழில்களும் முற்றுப் பெற்றன.செவ்வியினியவாயின மேகங்கள்.அரிய மணியையுடைய பாம்புகள் வருந்தும் வகை உருமேற்றுடனே போர்புரியும் வேந்தரின்சேனை போல் செல்லா நிற்கும் (ஆதலால் நாமே செல்லக்கடவேம்)

Monday, August 18, 2014

கார்நாற்பது- 14,15




 செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

விளங்காநின்ற அணிகளையுடையாய், முல்லைக்கொடிகள் விளங்குகின்ற ,மகளிரின் பற்களைப் போல அரும்பு ஈனும்வகை.
 நல்ல குளிர்ந்த மேகம் ,மெல்ல இனியவாக மின்னா நின்றன (ஆதலால்) பொருள் தேடிக் கொள்ள சென்ற நமது தலைவர் விரைந்து வருதலை தெளிய அறிந்ததாம்.



 திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.

திருந்திய அணிகளையுடையாய்! குருந்த மரத்தின் குவிந்த பூக்களின் உள்ளிடமே தமக்கு உறைவிடமாக இருந்து ,திருந்திய இனிய இளியென்னும் பண்ணை வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில் நம் தலவர் நீங்கியிருப்பார் அல்லர்.

Sunday, August 17, 2014

கார்நாற்பது - 12 - 13

  பாடல் - 12

மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்1
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.

உரை -

கருமையும் அழகும் பொருந்திய, மையுண்ட கண்களையுடைய , மயில் போலும் சாயலினியுடையாய், எண்ணெய் பூசப்பட்ட யானைகளைப்போல கரிய மேகங்கள், நாடோறும் வலமாக எழா நின்றன. (ஆகவே) ஐயந்தீர்ந்த அறிவினையுடைய நம் தலைவன் மீளவருதல் உண்மை.

  பாடல் - 13

 ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி
ஒளிறுபு மின்னு மழை.

உரை-

 பருவமிகு அழகினையுடையாய்...தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினிது அழகுபோல மழை பெய்ய
அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியினையுடைய வாளினைப்போல கண்களைக் கவர்ந்து ஒளிவிட்டு மின்னா நின்றது...

Friday, August 15, 2014

கார் நாற்பது - 11



புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
     வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
     அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
     பூங்குலை யீன்ற புறவு.

குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடையவளே! மேனோக்கி எழும் பாம்பு எடுக்கும் படம் போல பொருந்திய வெண்காந்தள்கள் பூங்கொத்துகளை ஈன்ற  இம்மை மறுமையின்பங்கள் பொருந்துதலையுடைய காடுகள். பொருளை கொண்டுவர உன்னை பிரிந்து சென்ற தலைவர் இரைந்து திரும்புவதை கூறாமல் கூறி நிற்கின்றன.

(ஐம்பால் என கூந்தலைக் கூறுவது.. கூந்தல் ஐந்து பகுப்பினை உடையதைக் கூறுகிறது.அவை, கொண்டை,சுருள்,பனிச்சை,குழல்,முடி)

Thursday, August 14, 2014

கார் நாற்பது - 1 முதல் 10 வரை




     அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார்.

(முதல் பாடல்)

(தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது)

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?


    கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 2

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!-
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.

     வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 3

(பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது)

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.


   வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.

பாடல் - 4

(தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது)

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!-
வாடும் பசலை மருந்து.



     கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.

பாடல் - 5

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு.


  அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பறக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.

பாடல் - 6

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;-
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று.

    மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.

பாடல் - 7

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!-
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை.

   தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.

பாடல் - 8

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்-
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு.

     பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.

பாடல் - 9

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.

     கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.

பாடல் - 10

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!-
மேனி தளிர்ப்ப, வரும்.


   என் தோழியே! வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.

இனியவை நாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்: 31 (அடைந்தார்...)

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது.


தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.

பாடல்: 32 (கற்றறிந்தார்...)

கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
பத்திமையின் பாங்கு இனியது இல்.


கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

பாடல்: 33 (ஊர்முனியா...)

ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது.


ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.

பாடல்: 34 (எல்லிப்...)

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.


இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

பாடல்: 35 (ஒற்றினான்...)

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது.


வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.

பாடல்: 36 (அவ்வித்து...)

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது.


மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

பாடல்: 37 (இளமையை...)

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது.


தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

பாடல்: 38 (சிற்றாள்...)

சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து.


ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.


பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

பாடல்: 40 (பத்து...)

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.


பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

இனியவை நாற்பது முற்றும்.

Wednesday, August 13, 2014

இனியவை நாற்பது - 21 முதல் 30 வரை




பாடல்: 21 (பிறன்கை...)[

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது.


பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

பாடல்: 22 (வருவாய்...)

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது.


தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.

பாடல்: 23 (காவொடு...)

காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.


சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.

பாடல்: 24 (வெல்வது...)

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.


மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

பாடல்: 25 (ஐவாய...)

ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.


ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.

பாடல்: 26 (நச்சி...)

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல்.


ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.

பாடல்: 27 (தானம்...)

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.


அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

பாடல்: 28 (ஆற்றானை...)

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்.


ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

பாடல்: 29 (கயவரை...)

கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது.


கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.

பாடல்: 30 (நன்றி...)

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல்.


ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

Tuesday, August 12, 2014

இனியவை நாற்பது - 4 முதல் 12 வரை



பாடல்: 05 (கொல்லாமை...)

கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு.


கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.

பாடல்: 06 (ஆற்றும்...)

ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.

கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.

பாடல்: 07 (அந்தணர்...)

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது.


பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.

பாடல்: 08 (ஊரும் கலிமா...)

ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது.


வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.

பாடல்: 09 (தங்கண்...)

தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது.


தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.

பாடல்: 10 (கடம்உண்டு...)

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு.


கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

பாடல்: 11 (அதர்...)

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல்.


தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

பாடல்: 12 (குழவிபிணி...)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது.


குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.

Monday, August 11, 2014

இனியவை நாற்பது



பதினென்கீழ் கணக்கில் உள்ள 'நாற்பது" என முடியும் நான்கு நூல்களில்..இனியவை நாற்பது இரண்டாவதாகும்.இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகன் பூதஞ்சேந்தனார் எனப்படுபவர்.இவர் தந்தையார் மதுரை தமிழாசிரியர் பூதன் ஆவார்.இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு.சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்கமுள்ளவராய் இவர் இருக்க வேண்டும்.கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தையவர் என்பதோடு இன்னா நாற்பதின் பல கருத்துகளை அப்படியே எடுத்துத் தருவதால் அந்நூல் ஆசிரியருக்கு பிந்தையவர் என்பது சரியாகவே இருக்கலாம்.

இந்நூலில், கடவுள் வாழ்த்து நீங்களாக 40 செய்யுள்கள் உள்ளன.இந்நூலில் நான்கு இனிய பொருள்களைக் கூறும் பாடல்கள் நான்குதான்.அவை முதல்பாடல், மூன்றாம் பாடல்,நான்காம் பாடல், ஐந்தாம் பாடல்கள் ஆகும்.மற்றவை மூன்று இனிய பொருள்களையே சுட்டிக்காட்டுகிறது.

வாழ்வில் நன்மை தரும் கருத்துகளை சொல்வதால் இது 'இனியவை நாற்பது' எனப்பட்டது.

இனி பாடல்களைப் பார்க்கலாம்...முதல் பாடல் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

   பாடல்: 01

பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.


பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.


பாடல்: 02
உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.


பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.

பாடல்: 03

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.


சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல்: 04

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு.

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

Friday, August 8, 2014

இன்னா நாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்: 31 (பண் அமையா...)

பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;

எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;

மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,

தண்மை இலாளர் பகை.


இசைக்க முடியாத யாழில் பாடுதல் துன்பமாம். சோதிடம் தெரியாதவர்கள் முகூர்த்தம் பார்த்தல் துன்பமாம். தாளம் இல்லாத மத்தளத்தின் ஓசை துன்பமாம். அவ்வாறே தன்மை இல்லாதவரது பகையானது துன்பமாம்.



பாடல்: 32 (தன்னைத் தான்...)

தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;

முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;

நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,

தொன்மை உடையார் கெடல்.



தன்னைத்தானே காத்துக்கொள்ளாது இருத்தல் மிகவும் துன்பமாம். முன்னே சொல்லாமல் பின்னால் பேசுபவர்களின் சொல் மிகவும் துன்பமாம். நல்ல குணமில்லாதவரது நட்பு துன்பமாம். அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்.



பாடல்: 33 (கள் உண்பான்...)
கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;

முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;

வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,

கள்ள மனத்தார் தொடர்பு.



கள் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முட்களையுடைய காட்டில் நடத்தல் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனத்தினை யுடையவரது தொடர்பு மிகவும் துன்பமாம்.



பாடல்: 34 (ஒழுக்கம்...)

ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;

விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;

இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,

கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு.



நல்ல ஒழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உள்ளதாகக் கூறுதல் துன்பமாம். சீரிய நூலினை விரும்பிக் கல்லாதார்க்குத் துன்பமாம். இழிவான தொழில் செய்பவனின் தொடர்பு துன்பமாம். நல்லவரால் விலக்கப்பட்ட இடத்தில் இருத்தல் துன்பமாம்.

பாடல்: 35 (எழிலி...)

எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;

குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;

குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,

அழகுடையான் பேதை எனல்.



மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். புல்லாங்குழலைப் போல இனிய மரத்தினது ஓசை துன்பமாம். (மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது தீப்பற்றிக்கொள்ளும்) குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம்.



பாடல்: 36 (பொருள் இலான்...)

பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;

நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;

வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,

கெடும் இடம் கைவிடுவார் நட்பு.


செல்வமில்லாதவன் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுதல் துன்பமாம். நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்தில் பொருள் இன்றி இருத்தல் மிகவும் துன்பமாகும். சென்ற வீட்டில் உள்ளவரை எதிர்பார்த்து உணவு உண்ணுதல் துன்பமாம். வறுமையுள்ள இடத்தில் கை விட்டு நீங்குவாரது நட்பு துன்பத்தைத் தரும்.



பாடல்: 37 (நறிய மலர்...)

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;

துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;

அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,

சிறியார் மேல் செற்றம் கொளல்.



வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும். கரையைத் தெரியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம். அறியாதவன் கற்றவர்களால் வினாப்படுதல் துன்பமாம். அவ்வாறே சிறியவர்கள் மீது கோபம் கொள்ளுதல் துன்பமாம்.

பாடல்: 38 (பிறன் மனையாள்...)

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;

மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;

வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,

திறன் இலான் செய்யும் வினை.



பிறன் மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாம். வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம். விரைந்து செல்லும் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமாம். செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம்.



பாடல்: 39 (கொடுக்கும்...)

கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;

கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;

கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,

மடுத்துழிப் பாடா விடல்.



பொருள் இல்லாதவனுடைய வள்ளன்மை துன்பமாம். கடிய பாக்கினுள் கல்படுதல் துன்பமாம். புலவனுக்குப் பரிசு கொடுக்காமை துன்பமாம். தடைப்பட்ட இடத்தில் பாடல் பாடாமல் விடுதல் துன்பமாம்.



பாடல்: 40 (அடக்கம் ...)

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;

தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;

அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா

அடக்க, அடங்காதார் சொல்.



அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம். முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம். பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம். அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.

கபிலர் பாடிய இன்னா நாற்பது முற்றும்

அடுத்து இனியவை நாற்பது  அடுத்த பதிவு முதல்.

இன்னா நாற்பது _ பாடல் 21 முதல் 30 வரை



பாடல்: 21 (ஈத்த...)

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;

பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;

மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,

ஓத்து இலாப் பார்ப்பான் உரை.


கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.

பாடல்: 22 (யானைஇல்...)

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;

ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;

தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,

கான் யாறு இடையிட்ட ஊர்.


யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.

பாடல்: 23 (சிறைஇல்லா...)

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;

அறை பறை அன்னார் சொல் இன்னா; இன்னா,

நிறை இலான் கொண்ட தவம்.


மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றோரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.

பாடல்: 24 (ஏமல் இல்...)

ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;

தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;

காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,

யாம் என்பவரோடு நட்பு.


காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.

பாடல்: 25 (நட்டார்...)

நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;

ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;

கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா

நட்ட கவற்றினால் சூது.


நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.

பாடல்: 26 (பெரியாரோடு...)

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;

'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,

பெரியார்க்குத் தீய செயல்.


பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.



பாடல்: 27 (பெருமை உடையாரைப்...)

பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;

கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;

வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,

இளமையுள் மூப்புப் புகல்.



பெருமையுடையோரை இகழ்ந்து கூறுதல் துன்பம். உரிமையுடையோரை நீக்கி விடுதல் துன்பமாம். செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம். இளமைப்பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் புகல் துன்பமாகும்.



பாடல்: 28 (கல்லாதான் ஊரும்...)

கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;

வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;

இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,

கல்லாதான் கோட்டி கொளல்.


குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் பேசும் நயமான பேச்சு துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.



பாடல்: 29 (குறி அறியான்...)

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;

தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;

அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,

செறிவு இலான் கேட்ட மறை.


பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.

பாடல்: 30 (நெடுமரம்...)

நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;

கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;

ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,

கடும் புலி வாழும் அதர்.


நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்.

Thursday, August 7, 2014

இன்னா நாற்பது - 13 முதல் 20 வரை



பாடல்: 13 (மணிஇலா...)

மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;
பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,
பிணி அன்னார் வாழும் மனை.


மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத் துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும் வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது துன்பமாகும்.

பாடல்: 14 (வணர்ஒலி...)

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,
உணர்வார் உணராக்கடை


கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம் கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றிக் கூடிய பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக் கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.

பாடல்: 15 (புல்லார் புரவி...)

புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;
கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;
இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,
பல்லாருள் நாணுப் படல்.


புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.

பாடல்: 16 (உண்ணாது...)

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
எண் இலான் செய்யும் கணக்கு.


உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.

பாடல்: 17 (ஆன்றவிந்த...)

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
ஈன்றாளை ஓம்பா விடல்.


கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

பாடல்: 18 (உரனுடையான்)

உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;
சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,
மன வறியாளர் தொடர்பு.


நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.

பாடல்: 19 (குலத்து...)

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல் வழி.


நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.

பாடல்: 20 (மாரிநாள்...)

மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா;
வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;
மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா
மூரி எருத்தால் உழவு.


மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும். அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத் தொழில் செய்தால் துன்பமாகும்.

Wednesday, August 6, 2014

இன்னா நாற்பது - 8,9,10,11,12



பாடல்: 08 (பகல்போலும்...)

பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு.



ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.

பாடல்:09 (கள்ளில்லா...)

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு.


கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே சேணம் இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.

பாடல்: 10 (பொருள்உணர்வார்...)

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு.


பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோல பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.

பாடல்: 11 (உடம்பாடு...)
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல்.

உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.

பாடல்: 12 (தலைதண்டமாக...)

தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
முலை இல்லாள் பெண்மை விழைவு.


தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.

இன்னா நாற்பது - 4,5,6,7




பாடல்: 04 (எருதில்...)
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
பெரு வலியார்க்கு இன்னா செயல். 4



எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.


பாடல்:05 (சிறையில்...)

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை.



வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.


பாடல்:06 (அறமனத்தார்...)

அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6



அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாய்சொல்லும் துன்பமாகும்.


பாடல்: 07 (ஆற்றல்...)

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை.



வலிமையில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.