Wednesday, February 18, 2015

பழமொழி நானூறு - 106 முதல் 110 வரை



பாடல்-106

வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொனி - காட்டப்
பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு.

முன்னொரு காலத்தில்,  நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை,  கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர்,  வளைந்து சூழ்ந்தார்களாகி,  நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட,  ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள். அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி;

(க-து.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.


'உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.

பாடல்-107

பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.

கன்றினை உடைய பசு,  வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!,  மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள், மயிரினை நீக்குதல் செய்யா; (ஆனால்)  பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வத்தை ஒருகாற் பெற்றாலும்,  வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர், தாமுந் துய்த்தலுமிலராகி, பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ

(க-து.)கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.


'மரங் குறைப்ப மண்ணா மயிர்' என்பது பழமொழி.

பாடல்-108


உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா
தழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்றே றாதலும் உண்டு.

 விளங்குகின்ற இழையினை உடையாய்!, ஒலியினையுடைய பழைய நகரில், கடைத்தெருவின்கண்,  நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று,  வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்),  ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை,  அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும், அவனைப் பொருளிலான்என்று இகழா தொழிதல் வேண்டும்.


(க-து.)பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.

.
பழங்கன்றே றாதலும் உண்டு' என்பது பழமொழி.

பாடல்-109

மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை.

கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்!,  உண்மையாக ஆராயின்,  உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?,  ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள்,  குறித்த ஒருபருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வதுமழையேயாதலான்.

(க-து.) உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.

பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.

பாடல்-110


கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.

 முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்!,  இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில்,  அவர்தங் குறிப்பினையும்,  தன்னால் உயிர்கொள்ளப்படுதலுடையார் கூறும், மாற்றத்தினையும்,  ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல),  அரசன், குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின், செய்வது என்ன இருக்கின்றது?

(க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.


'செய்வது என் வல்லை அரசு ஆட்கொளின்' என்பது பழமொழி.



Sunday, February 8, 2015

பழமொழி நானூறு - 101 முதல் 105 வரை


பாடல்-101

பரியப் படுபவர் பண்பிலா ரேனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ
ஊர்அறிய நட்டார்க்(கு) உணா.

அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே!,  தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும்,  அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்,)  ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?


'கடனன்றோ ஊரறிய நட்டார்க்குஉணா' என்பது பழமொழி.

பாடல்- 102

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.

 பாண்டியனும்,  எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து,  தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று,  கதவையிடித்த குற்றத்தை நினைத்து, தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்)  அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.

(க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

'காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.

பாடல்-103

நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல்.

 தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே!, பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும், அந்நரக உலகத்தின்கண். எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்),  தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால்,  அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி, தங்குடிநோக்கிவேரறத் தண்டஞ் செய்துவிடுக.


(வி-ம்.) தருமன் தன்குடியை நிலைநாட்ட அசுவத்தாமன் இறந்தான் என்று பொய் கூறினன். ஆதலால் குடி குன்ற வருஞ்செயலை எதிர்த்து எது செய்தாலும் ஒழிக்க என்பதாம்.

'நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்வரம்பில் பெரியானும் புக்கான்' என்பது பழமொழி.

பாடல்-104


நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு.

 நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே,  நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை,  ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.

'புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு' என்பது பழமொழி.

பாடல்-105

சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.

 பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும்,இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று,  பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்),  உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை.

(க-து.) தீமையே அடைவார்,என்றாயினும் நன்மையையும் அடைவர்.

(வி-ம்.) பகைவர் மூட்டிய தீயினின்றும் தப்பி ஓடும் பொழுது கால் கரிந்தமையால் இவன் கரிகாலன் எனப்பட்டான். அரசினை இழந்து உயிர் பிழைக்க முடியாத நிலையிலிருந்த கரிகாலனும் பின்னொருகால் அரசாட்சி பெற்று நன்மையை அடைந்தான். எப்பொழுதும் அதுபோன்ற துன்பத்தினையே அடைவேமோ என்று கருதற்க. ஒரு காலத்தில் இன்புறலாம் என்பதாம். ஒவ்வோர் உயிருக்கும் ஒரு பிறவியில் இன்பமும் மற்றொரு பிறவியில் துன்பமும் என்று தனித்தனி வகுக்காது ஒரே பிறவியில் இன்பமும் துன்பமும் அடையுமாறு ஊழ் வகுத்தலின் துன்பமடைவார் இன்பத்தை அடைதலும் உறுதி என்பதாம்.

'உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி.