Sunday, February 8, 2015

பழமொழி நானூறு - 101 முதல் 105 வரை


பாடல்-101

பரியப் படுபவர் பண்பிலா ரேனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ
ஊர்அறிய நட்டார்க்(கு) உணா.

அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே!,  தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும்,  அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்,)  ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?


'கடனன்றோ ஊரறிய நட்டார்க்குஉணா' என்பது பழமொழி.

பாடல்- 102

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.

 பாண்டியனும்,  எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து,  தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று,  கதவையிடித்த குற்றத்தை நினைத்து, தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்)  அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.

(க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

'காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.

பாடல்-103

நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல்.

 தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே!, பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும், அந்நரக உலகத்தின்கண். எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்),  தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால்,  அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி, தங்குடிநோக்கிவேரறத் தண்டஞ் செய்துவிடுக.


(வி-ம்.) தருமன் தன்குடியை நிலைநாட்ட அசுவத்தாமன் இறந்தான் என்று பொய் கூறினன். ஆதலால் குடி குன்ற வருஞ்செயலை எதிர்த்து எது செய்தாலும் ஒழிக்க என்பதாம்.

'நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்வரம்பில் பெரியானும் புக்கான்' என்பது பழமொழி.

பாடல்-104


நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு.

 நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே,  நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை,  ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.

'புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு' என்பது பழமொழி.

பாடல்-105

சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.

 பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும்,இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று,  பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்),  உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை.

(க-து.) தீமையே அடைவார்,என்றாயினும் நன்மையையும் அடைவர்.

(வி-ம்.) பகைவர் மூட்டிய தீயினின்றும் தப்பி ஓடும் பொழுது கால் கரிந்தமையால் இவன் கரிகாலன் எனப்பட்டான். அரசினை இழந்து உயிர் பிழைக்க முடியாத நிலையிலிருந்த கரிகாலனும் பின்னொருகால் அரசாட்சி பெற்று நன்மையை அடைந்தான். எப்பொழுதும் அதுபோன்ற துன்பத்தினையே அடைவேமோ என்று கருதற்க. ஒரு காலத்தில் இன்புறலாம் என்பதாம். ஒவ்வோர் உயிருக்கும் ஒரு பிறவியில் இன்பமும் மற்றொரு பிறவியில் துன்பமும் என்று தனித்தனி வகுக்காது ஒரே பிறவியில் இன்பமும் துன்பமும் அடையுமாறு ஊழ் வகுத்தலின் துன்பமடைவார் இன்பத்தை அடைதலும் உறுதி என்பதாம்.

'உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி.

No comments:

Post a Comment