பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான் ஐந்திணை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.பாலை ஆகிய ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றமையால் ஐந்திணை ஐம்பது என பெயர் பெற்றது.நூலின் இறுதியில் பாயிரச் செய்யுள் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது.இந்நூலாசிரியர் மாறன் பொறையனார்.(இப்பெயரில் மாறன் என்பது பாண்டியனையும், பொறையன் என்பது சேரனையும் குறிப்பதாய் உள்ளது ஆதலால் இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புள்ளவராய் இருந்திருக்கலாம்.)பொறையனார் இவர் இயற்பெயரும், மாறன் இவர் தந்தை பெயர் என்றும் கொள்ளலாம்.
இனி பாடல்கள்=
முதல் பாடல்-
(தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது)
மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்! -
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்!
"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.
பாடல் - 2
அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து, - பணிமொழி! -
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள்.
"மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
பாடல் - 3
மின்னும், முழக்கும், இடியும், மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய, - முல்லை
முகை வென்ற பல்லினாய்! - இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்?
"தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.
பாடல்-4
உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார்.
"ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.
பாடல்-5
கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண்.
என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.
பாடல்-6
முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.
மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.
பாடல்-7
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.
கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.
பாடல்-8
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?
வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.
பாடல்-9
வருவர் - வயங்கிழாய்! - வாள் ஒண் கண் நீர் கொண்டு,
உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
பைங்கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
வம்ப மழை உரறக் கேட்டு.
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.
பாடல்-10
நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள்மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம்.
"கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.