Wednesday, August 27, 2014

களவழி நாற்பது - 11 முதல் 20 வரை



பாடல்- 11

கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும் - அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து.


     கொடிய போர்க்களத்தில் வீரர்கள் விட்டொழித்த போர் முரசம், குருதி வெள்ளத்தில் மிதந்து வர, போரில் கண்ணிழந்த யானை முரசை உதைக்க, மேகக்கூட்டம் முழங்குவதுபோல் ஒலி தரும்படி சோழன் போர்க்களம் காட்சி தந்தது.

பாடல்- 11

ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம்
தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப்
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே-
காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக்
கூடாரை அட்ட களத்து.



     காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.

பாடல்- 13

நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானைக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து.



     முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது.

பாடல்- 14

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும் - புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து.


     சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானைகளின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டதால் அவற்றிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. அந்தக் காட்சி பைகளில் இருந்து பவளங்கள் இடைவிடாது கொட்டுவது போல் இருந்தது.

பாடல்-15

கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே - செங் கண்
சின மால் பொருத களத்து.


     சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகள் எல்லா இடங்களிலும் பாய்ந்தமையால் சிதைக்கப்பட்ட வெண்கொற்றக் குடைகளும் பிணங்களும் எங்கும் காணப்பட்டன. அக்காட்சி, தச்சுத் தொழில் வல்லவர், தச்சுத் தொழிலைச் செய்தும் பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகின்ற தொழிற்பள்ளிக்கூடம் போல் இருந்தது.

பாடல்-16

பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து.


     சோழன் பகை மன்னர்களை வென்ற களத்தில், குதிரை வீரர்கள் குதிரைகளை ஊக்கப்படுத்துவதற்காக ஆரவார முழக்கத்தை எழுப்புகின்ரனர். வீரர்களின் ஆரவார முழக்கத்தைக் கேட்டு யானைகள் எழாமல் நின்றன. அதனால் கோபப்பட்ட குதிரைகள் யானைகளின் மத்தகங்கள் மீது பாய்ந்தன. அந்தக் காட்சி வேங்கைப் புலிகள் மலைகள் மீது பாய்வன போல் இருந்தது.

பாடல் - 17

ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.


    போர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.

பாடல்-18

நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து.


     போர்க்களத்தில் வீரர்களின் பிணங்களை, அங்கே பொங்கி வழியும் இரத்த வெள்ளமானது இழுத்துச் செல்லும். அக்காட்சி, கடற்கரை ஓரத்தில் கட்டுமரங்களை அலைகள் இழுத்துச் செல்வது போல் தோன்றியது.

பாடல்-19

இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.


     வீரர்கள் எறிந்த வேலானது யானையின் இரு தந்தங்களுக்கு நடுவே பாய்ந்து சென்று கடைப்பகுதி மட்டும் வெளியே தோன்றியது. அக்காட்சி மூன்று தந்தங்களை உடையது போன்று யானைகள் நின்றது போலிருந்தது.

பாடல்- 20

இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன்
நேராரை அட்ட களத்து.


   கழுகுகள் போர்க்களத்தில் ஈர்க்குகளைப் போன்ற இறகுகளைப் பரவவிட்டும், குனிந்தும் பிணங்களை இரத்தத்தோடு சுவைக்கின்றன. அக்காட்சி அதிர்வு இல்லாத மென்மையான ஓசையைத் தரும் மத்தளத்தைத் தட்டி இசையை உண்டாக்குவது போல் இருந்தது.

No comments:

Post a Comment