பாடல்: 08 (பகல்போலும்...)
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு.
ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.
பாடல்:09 (கள்ளில்லா...)
கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு.
கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே சேணம் இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.
பாடல்: 10 (பொருள்உணர்வார்...)
பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
பொருள் இல்லார் வண்மை புரிவு.
பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோல பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.
பாடல்: 11 (உடம்பாடு...)
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
கடன் உடையார் காணப் புகல்.
உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.
பாடல்: 12 (தலைதண்டமாக...)
தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
முலை இல்லாள் பெண்மை விழைவு.
தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.
No comments:
Post a Comment