Monday, December 22, 2014

பழமொழி நானூறு - 96 முதல் 100 வரை



பாடல்-96

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
ஈடில் லதற்கில்லை பாடு.

‘வீடு அழிந்தவிடத்து'  அதிலுள்ள மரங்கள்,  பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே,  - அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும்,  பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை.

(க-து.) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர்.


'ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.

பாடல்-97


தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
பழம்பகை நட்பாதல் இல்.

 முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால், கிழங்குடைய புல் முதலியவெல்லாம்,  முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி,  அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.

(க-து.) பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது.

பழம்பகை நட்பாதல் இல். என்பது பழமொழி


பாடல்-98

வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப்
புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ
அள்ளில்லத் துண்ட தனிசு.

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே!, வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும்,  இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது?, கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே, அள் இல்லத்து உண்ட தனிசு  சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனை ஒன்குமன்றோ?

(க-து.) அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.


'அள்ளில்லத் துண்ட தனிசு' என்பது பழமொழி.


பாடல்-99

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில்,  மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு,  இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க,  இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே,  தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.

(க-து.)காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.


'கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.

பாடல்-100


நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ
திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கறுப்பச் சோருங் குடர்.

செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார்,  வறுமையுடையார்க்கு,  அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா;  தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம்,  குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தையொக்கும்.

(க-து.) செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.


'குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்' என்பது பழமொழி

No comments:

Post a Comment