Friday, October 10, 2014

நாலடியார் - 13.தீவினை அச்சம்- பாடல் 121 முதல் 130 வரை



பாடல்-1121

துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.

சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து).

பாடல்-122

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்.

பாடல்-123

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.

முற்பிறவியில் நண்டைப் பிடித்து அதன் காலை ஒடித்து விரும்பித்தின்ற தீவினை வந்தடைந்தபோது சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவர்

பாடல்-124


நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர்.

பாடல்-125

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

பெரியோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும்.

பாடல்-126


சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ளக் கூடாது என்பது கருத்து).

பாடல்-127


யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.

மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்).

பாடல்-128


உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.

தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்புக் கொள்ளாமல் (இவர் உண்மையாக அன்பு கொள்பவர் என நம்புமாறு) உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்பவருடைய மிக்க நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். (வஞ்ச மனத்தான் நட்பு நஞ்சாகும்;  என்பது கருத்து).

பாடல்-129

ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.

தான் பகைவர் மீது வீசிய ஒளிமிக்க வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது தனது மனவலிமையைக் கெடுப்பது உறுதி. அதுபோல, தீயோர்க்குச் செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பது நல்லதே ஆகும். (மூடனுக்கு உதவி செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

பாடல்-130


மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.

நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் 

Thursday, October 9, 2014

நாலடியார் - 12. மெய்ம்மை - 111 முதல் 120 வரை



பாடல்-111

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.

வரிசையாக வளையலை அணிந்தவளே! தம்மால் தர முடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறுதல் யார்க்கும் பழியாகாது. அஃது உலகில் இயற்கை. ஆனால், ஏற்பவன் ஆசை கெடும்படி பல நாட்கள் கழித்து இல்லையென்று சொல்லுதல் செய்ந்நன்றி மறந்தவன் குற்றத்தைப் போன்ற குற்றமாகும்.

பாடல்-112


தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும்.

பாடல்-113


காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர்.

பாடல்-114

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.

குற்றமற்ற இந்த உலகத்தில் போற்றத்தக்க அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனுள் நடுவில் உள்ள பொருளை ஒருவன் அடைந்தால் அவன், அதன் காரணமாக முதலில் உள்ள அறத்தையும், இறுதியில் உள்ள இன்பத்தையும் அடைவான். பொருளைப் பெறாதவன், கொல்லன் உலையிலிட்டு இரும்பைக் காய்ச்சுவதுபோல வறுமைத்துன்பமெய்தி வருந்துவான்.

பாடல்-115

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

உயர்ந்த சாதிப் பசுவின் கன்றாக இருந்தால் இளங்கன்றும் நல்ல விலை போகும். கல்லாரேயாயினும் செல்வரது வாயிலிருந்து வரும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறிதே ஈரமுள்ள காலத்தில் உழுதலைப் போல, வறியவர் வாய்ச்சொல் மதிக்கப்படாது ஒழியும். (சிறிது ஈரத்தில் உழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி, உள்ளே செல்லாது. அதுபோல, வறியவனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா).

பாடல்-116


இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

அகன்ற கண்களையுடையவளே! பேய்ச் சுரைக்காயை உப்புடன் நெய்யும், பாலும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, மெய் அறிவை உணர்த்தும் நூல்களை மிக விரிவாக எக்காலமும் கற்றாலும் இயல்பாக அடக்கமில்லாதவர் எப்போதும் அடங்காமலே இருப்பர்.

பாடல்-117


தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.

புன்னையின் அழகிய பூமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! ஒரு காரணமும் இன்றித் தம்மை இகழ்ந்து பேசுபவரை, அவர் முன்னிலையிலேயே கடிந்து பேசிப் புறக்கணித்துவிட வேண்டும். அவருடைய தொடர்பால் வருவதென்ன? வருபவை ஊழால் வரும்.

பாடல்-118

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.

பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். பாலைப் போல், அறப்பயனும் ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும்.

பாடல்-119


யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்? 119

மனித வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு பழிச்சொல் இல்லாமல் வாழ்ந்தவர் யார்? ஒரு தொழில் இன்றி வாழ்ந்தவர் யார்? வாழ்நாளின் இடையே துன்பத்தை அடையாதவர் யார்? வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார்? (யாரும் இல்லை)

பாடல்-120


தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிருக்குத் துணையாக வருவது அவரவர் நல்வினைகளேயன்றி வேறில்லை. எமன் உயிரைக் கொண்டு செல்லும்போது, அதுவரை ஆடை அணிகளால் அழகுடன் பாதுகாத்த உடம்பும் உயிருக்குத் துணையாக வராது. (உடம்பும் வராது என்றதால், செல்வம் முதலானவையும் வாரா வினையே தொடர்ந்து வரும் 

Wednesday, October 8, 2014

நாலடியார் - 11.பழவினை பாடல் 101 முதல் 110 வரை



பாடல்-101

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு

பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும்.

பாடல் 102

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து

அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.

பாடல்-103


வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்

செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்லை களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).

பாடல்-104


உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.

வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை!

பாடல்-105

தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.

பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆவதற்குக் காரணம் முன் செய்வினையே).

பாடல்-106


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.

பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

பாடல்-107


இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.

அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பெரிய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).

பாடல்-108


அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.

காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).

பாடல்-109


ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.

மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை.

பாடல்-110


சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.

கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்டா வளரமாட்டா முறைமாறி வரமாட்டா துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? 

Tuesday, October 7, 2014

நாலடியார் - 10.ஈகை 91 முதல் 100 வரை


பாடல்-91

எல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

பாடல்-92

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

பாடல்-93


நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.

பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். (நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த) நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். (இந்த உண்மையை அறியாதவர்) வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவனின் துயரைப் போக்க மாட்டார்கள் (அறிந்தவர்கள் பிறர் துன்பம் போக்குவர் என்பது கருத்து).

பாடல்-94

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். 94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

பாடல்-95


மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.

மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறரிடம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. (வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறரிடம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று).

பாடல்-96


நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

பலரும் தம்மை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், ஊர் நடுவிலே மேடையால் சூழப்பட்ட பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர், தன் குடும்பம் வளமுடையதாயிருக்கும் போதும் பிறர்க்குக் கொடுத்துத் தான் உண்ணாத மாக்கள் சுடு காட்டில் உள்ள ஆண் பனை மரமே ஆவர். (ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், பலரும் வந்து பழத்தைப் பறித்துத் திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோலச் செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வம் பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் அனைவராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்).

பாடல்-97


பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு.

கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் போக்கும் அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய அரசனே! பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

பாடல்-98


ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.

வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது,எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது.

பாடல்-99


இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.

நாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவரிடத்தும் செய்க! அது, வாயில் தோறும் பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல, மெல்ல மெல்லப் புண்ணியப் பயனைப் பூரணமாக்கும்

பாடல்-100


கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது 

Monday, October 6, 2014

நாலடியார் - .பிறர்மனை நயவாமை 81 முதல் 90 வரை



பாடல்- 81

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.

காமத்தால் வரும் அச்சம் பொது.! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!

பாடல்-82


அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.

புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவரிடத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் வந்து சேரும்.

பாடல்-83


புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.

பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?

பாடல்-84


காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!

பாடல்-85


செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, முற்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.

பாடல்-86


பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.

பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

பாடல்-87


அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.

அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது).

பாடல்-88


பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.

காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவரிடம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தரிடம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்.

பாடல்-89


அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.

அம்பும், தீயும், ஒளிவீசும் கதிர்களையுடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்திச் சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத்தக்கதாம்.

பாடல்-90


ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.

ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும்; மலைமீது ஏறி ஒளிந்துகொண்டாலும் அது சுட்டு எரிக்கும்! 

Saturday, October 4, 2014

நாலடியார் - 8.பொறையுடைமை- 71 முதல் 80 வரை





பாடல்-71

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

பாடல்-72

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்

பாடல்-73

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

பாடல்-74

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை.

பாடல்-75

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

பாடல்-76

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை!

பாடல்-77

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பெரியோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

பாடல்-78

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவரிடம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவரிடம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர்.

பாடல்-79


இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும்.

பாடல்-80


தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவரிடத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக! 

Friday, October 3, 2014

நாலடியார் - 7.சினம் இன்மை - பாடல் 61 முதல் 70 வரை




பாடல்=61


மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

பாடல்-62

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ?

பாடல்-63

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

பாடல்-64

நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

மேலோர், தமக்கு நிகரில்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறரிடம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

பாடல்-65


இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போல, எல்லா எதிர்ப்புகளையும், வெல்லத்தக்க உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடையவன், சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.

பாடல்-66


கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பெரியோர் சினம் கொள்ளாது பொறுத்துக்கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர்.


பாடல்-67

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.

பாடல்-68


நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும்.

பாடல்-69


உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை.

பாடல்-70


கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ?