Wednesday, October 8, 2014

நாலடியார் - 11.பழவினை பாடல் 101 முதல் 110 வரை



பாடல்-101

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு

பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும்.

பாடல் 102

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து

அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.

பாடல்-103


வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்

செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்லை களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).

பாடல்-104


உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.

வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை!

பாடல்-105

தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.

பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆவதற்குக் காரணம் முன் செய்வினையே).

பாடல்-106


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.

பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

பாடல்-107


இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.

அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பெரிய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).

பாடல்-108


அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.

காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).

பாடல்-109


ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.

மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை.

பாடல்-110


சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.

கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்டா வளரமாட்டா முறைமாறி வரமாட்டா துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? 

2 comments:

  1. நாலடியார் அருமை. நான் இதை ஹிந்தியில் மொழிபெயர்க்க நகல் எடுத்து "tamil-hindi-sampark -anand-gomu .block spot.com இல் போட்டுள்ளேன்.தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. தாராளமாக..நாலடியார் பொதுச் சொத்து.அதை நான் சற்று எளிமைப்படுத்தியுள்ளேன்.அவ்வளவுதான்.அதுவும்..நல்ல விஷயங்கள் நாலு பேருக்கு சென்றடைய வேண்டும் என்ற அவாவில்தான்.

    ReplyDelete