Saturday, October 4, 2014

நாலடியார் - 8.பொறையுடைமை- 71 முதல் 80 வரை





பாடல்-71

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

பாடல்-72

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்

பாடல்-73

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

பாடல்-74

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை.

பாடல்-75

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக.

பாடல்-76

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை!

பாடல்-77

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பெரியோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

பாடல்-78

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவரிடம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவரிடம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர்.

பாடல்-79


இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும்.

பாடல்-80


தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவரிடத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக! 

No comments:

Post a Comment