Thursday, December 4, 2014

பழமொழி நானூறு- 76 முதல் 80 வரை



பாடல்-76

செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை யஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது
எருத்து வலியநன் கொம்பு.

 தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்!,வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்),  போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை,  அடைந்தவர்கள்,  பிறர் ஒருவருக்குப் பயந்து,  மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.)

(க-து.) அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கஞ்சார்.

'கூரிது எருத்து வலியதன் கொம்பு' என்பது பழமொழி.

பாடல்-77

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட் டாக்கறக்கு மாறு.

 தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக்கொள்ளாது,
 நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக்கொள்ளுதல்,கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது, அங்ஙனங் கறவாதவனாகி,  அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

(க-து.) தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.


'கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டாக்கறக்குமாறு' என்பது பழமொழி.

பாடல்-78

இணரோங்கி வந்தாரை என் உற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்(கு)
அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்.

 பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே!, இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு, இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும்,  இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல)  கொத்துக்களைப்போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை,  எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும்,  ஆராயும் அறிவினர், உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர்.

(க-து.) அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காதுஉயர்வாகவே மதிப்பர்.

'அளறாடிக்கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.

பாடல்-79


கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
வளிதோட்கு இடுவாரோ இல்.

 மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!,  காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி,  தோள்களுக்கு இடவல்லார் உளரோ?,  இல்லை. (அதுபோல), பொருத்தமில்லாதவைகளைக் கூறும், நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை,  நாவினிடத்து அடக்குதல், இல்லையாம்.


(க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.


'வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.

பாடல்-80

காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து)ஊக்கல் குறுநரிக்கு
நல்லநா ராயங் கொளல்.

உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே!,  குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள்,   இயல்பாகச் செய்த தீங்கினை,  உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல்,  சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.

(க-து.) கீழோர் தவறுசெய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.

'குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல்' - இஃது பழமொழி.

No comments:

Post a Comment