Tuesday, December 2, 2014

பழமொழி நானூறு - 71 முதல் 75 வரை



பாடல்-71

வன்பாட் டவர்பகை கொள்ளினும் மேலாயோர்
புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே
கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப!
வெண்பாட்டம் வெள்ளந் தரும்.

 கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே!, பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால், மேலானவர்கள்,  வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும், எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒருபயனும் இன்று.

(க-து.) அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது.


'வெண்பாட்டம் வெள்ளந் தரும்' என்பது பழமொழி.

பாடல்-72

நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.

மனத்தின்கண் கவலை யில்லாதவராய் நன்மை தீமை அறியாதவராகிய மனவலியுள்ள கயவர்கள்,  நெருங்கியுள்ள அவையில்,  அலைத்து வாழ்கின்ற கயவன் ஒருவனுக்கு,  உயிர்க்குப் பயன்தரத் தக்கனவற்றைக் கூறுதல், கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

(க-து.) கயவற்குஉறுதிப்பொருள்களைக் கூறுதலாகாது.

 'கடலுளால் மாவடித் தற்று' - இது பழமொழி.

பாடல்-73

யானுமற் றிவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரஞ் செயக்கிடந்த தில்லென்று - கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்ட லஃதே
இடைநாயிற் கென்பிடு மாறு.

 நானும் இவ்விடத்திலிருந்த என் தமையனும், ஒன்றுசேர்ந்து ஒரு செயல் செய்யப்புகுந்த இடத்து, பகைவருடைய வீரம் செய்யத்தக்கது யாதொன்றுமில்லையென்று கூறி,  அவரும் தம்மொடு சேர்ந்து, தமக்குத் துணைப் படையாக நின்று மாறுகொள்ளுமாறு,  பகைவரிடமிருந்து பிரிய அவரைத் தூண்டுதலாகியதானது, ஆடு காத்து நிற்கும் இடையர் நாய்க்குத் திருடர் எலும்பினையிடுதல் போல ஆகும்.

(க-து.) பகை யிரண்டாயவழி இன்சொற்கூறி அவற்றுள் ஒன்றனை வயப்படுத்துக என்றது இது.


'இடை நாயிற் கென்பிடு மாறு' என்பது பழமொழி.

பாடல்-74

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்(து)
உண்ணி பறித்து விடல்.

 கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து,  செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்துவிடுதலிக்கு ஈடாகும்..

(க-து.) தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


 பாடல்-75

பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
நாய்மேல் தவிசிடு மாறு.

(சொ-ள்.) பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே!, அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை, விரும்பி,  அறிவிற் சிறியார்க்குச் செய்தல்,   யானைமேல் இடவேண்டிய கல்லணையை, இழிந்த நாயின்மீதுஇட்டதை ஒக்கும்.

(க-து.) பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச்செய்தலாகாது.

'நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.

No comments:

Post a Comment