Wednesday, December 10, 2014

பழமொழி நானூறு- 86 முதல் 90வரை



பாடல்-86

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக்
கரையிருந் தார்க்கெளிய போர்.

 வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கில், அரங்கின்கண் பக்கத்திருந்தார்க்கு, எளியதாகத் தோன்றும் அதன் நுட்பம் ,அறியாது ஆடுவாற்கு அரியதாகத் தோன்றும் (அதுபோல),  பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும்,  நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய்,கருமத்தைச் செய்யப்புகுந்தவன்,  அழிவினை அடைவான்.

(க-து.) கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும்வேண்டப்படுவ தொன்று.

'வட்டுக் கரையிருந்தார்க் கெளிய போர்' என்பது பழமொழி.

பாடல்-87

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

 தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே,  பார்ப்பனரும்.  நாய் கதுவியதாயினும்,  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல)  கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல,  கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல்செய்க.)

(க-து.) சிறந்த பொருள்களைஇழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார்; உடும்பின் புலால்மிகச் சிறந்த வையுடையது என்பது கருதியே பார்ப்பாரும்உண்பர் என்றார்.காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்குஅறிகுறி என்று கொள்ளுவர்.

பாடல்-88


தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்.

தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்!,  பிணி நீங்க விரும்புவோர்,  வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), மிகவும் மனம் இரங்கி,  தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு,  தாம்அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.

(க-து.)அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக்கூறுவார்கள்.

'மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.

பாடல்-89

கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று.

 இயமன்,  ஆராய்ந்து உயிரை உண்ணும்பொருட்டு, விரும்பித் திரிவானேயாயினும்,  தான் உண்ணவேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல),  கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல்,  தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச்செய்தவர்களும்,  தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.

(க-து.) கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டுநீங்குவார்கள்.


'எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.

பாடல்-90


செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும்,  பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும்,மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.

(க-து.) காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தைநிறைவேற்றுவார்.


'வெந்நீரில் தண்ணீர் தெளித்து' என்பது பழமொழி.


No comments:

Post a Comment