Wednesday, February 18, 2015

பழமொழி நானூறு - 106 முதல் 110 வரை



பாடல்-106

வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொனி - காட்டப்
பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு.

முன்னொரு காலத்தில்,  நாந்தகம் என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலை,  கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர்,  வளைந்து சூழ்ந்தார்களாகி,  நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட,  ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள். அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி;

(க-து.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது.


'உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.

பாடல்-107

பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.

கன்றினை உடைய பசு,  வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!,  மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள், மயிரினை நீக்குதல் செய்யா; (ஆனால்)  பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வத்தை ஒருகாற் பெற்றாலும்,  வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர், தாமுந் துய்த்தலுமிலராகி, பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்; இஃது என்னோ

(க-து.)கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றி இறுகப்பிடித்தல் அடாத செய்கையாம்.


'மரங் குறைப்ப மண்ணா மயிர்' என்பது பழமொழி.

பாடல்-108


உள்ளூ ரவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா
தழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
பழங்கன்றே றாதலும் உண்டு.

 விளங்குகின்ற இழையினை உடையாய்!, ஒலியினையுடைய பழைய நகரில், கடைத்தெருவின்கண்,  நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று,  வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்),  ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை,  அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும், அவனைப் பொருளிலான்என்று இகழா தொழிதல் வேண்டும்.


(க-து.)பொருள் சிறிதுடையார் என்று யாரையும் இகழற்க.

.
பழங்கன்றே றாதலும் உண்டு' என்பது பழமொழி.

பாடல்-109

மெய்யா உணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்
செய்யா ரெனினும் தமர்செய்வர் பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை.

கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்!,  உண்மையாக ஆராயின்,  உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?,  ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள்,  குறித்த ஒருபருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வதுமழையேயாதலான்.

(க-து.) உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.

பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை' என்பது பழமொழி.

பாடல்-110


கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.

 முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்!,  இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில்,  அவர்தங் குறிப்பினையும்,  தன்னால் உயிர்கொள்ளப்படுதலுடையார் கூறும், மாற்றத்தினையும்,  ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல),  அரசன், குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின், செய்வது என்ன இருக்கின்றது?

(க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.


'செய்வது என் வல்லை அரசு ஆட்கொளின்' என்பது பழமொழி.



Sunday, February 8, 2015

பழமொழி நானூறு - 101 முதல் 105 வரை


பாடல்-101

பரியப் படுபவர் பண்பிலா ரேனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ! கடனன்றோ
ஊர்அறிய நட்டார்க்(கு) உணா.

அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே!,  தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும்,  அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்,)  ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?


'கடனன்றோ ஊரறிய நட்டார்க்குஉணா' என்பது பழமொழி.

பாடல்- 102

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.

 பாண்டியனும்,  எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து,  தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று,  கதவையிடித்த குற்றத்தை நினைத்து, தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்)  அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.

(க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

'காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.

பாடல்-103

நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்
வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார்
கொடியார மார்ப! குடிகெட வந்தால்
அடிகெட மன்றி விடல்.

 தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே!, பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும், அந்நரக உலகத்தின்கண். எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்),  தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால்,  அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி, தங்குடிநோக்கிவேரறத் தண்டஞ் செய்துவிடுக.


(வி-ம்.) தருமன் தன்குடியை நிலைநாட்ட அசுவத்தாமன் இறந்தான் என்று பொய் கூறினன். ஆதலால் குடி குன்ற வருஞ்செயலை எதிர்த்து எது செய்தாலும் ஒழிக்க என்பதாம்.

'நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம்வரம்பில் பெரியானும் புக்கான்' என்பது பழமொழி.

பாடல்-104


நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு.

 நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே,  நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை,  ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.

'புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு' என்பது பழமொழி.

பாடல்-105

சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிருடையார் எய்தா வினை.

 பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும்,இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று,  பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்),  உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை.

(க-து.) தீமையே அடைவார்,என்றாயினும் நன்மையையும் அடைவர்.

(வி-ம்.) பகைவர் மூட்டிய தீயினின்றும் தப்பி ஓடும் பொழுது கால் கரிந்தமையால் இவன் கரிகாலன் எனப்பட்டான். அரசினை இழந்து உயிர் பிழைக்க முடியாத நிலையிலிருந்த கரிகாலனும் பின்னொருகால் அரசாட்சி பெற்று நன்மையை அடைந்தான். எப்பொழுதும் அதுபோன்ற துன்பத்தினையே அடைவேமோ என்று கருதற்க. ஒரு காலத்தில் இன்புறலாம் என்பதாம். ஒவ்வோர் உயிருக்கும் ஒரு பிறவியில் இன்பமும் மற்றொரு பிறவியில் துன்பமும் என்று தனித்தனி வகுக்காது ஒரே பிறவியில் இன்பமும் துன்பமும் அடையுமாறு ஊழ் வகுத்தலின் துன்பமடைவார் இன்பத்தை அடைதலும் உறுதி என்பதாம்.

'உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி.

Monday, December 22, 2014

பழமொழி நானூறு - 96 முதல் 100 வரை



பாடல்-96

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
ஈடில் லதற்கில்லை பாடு.

‘வீடு அழிந்தவிடத்து'  அதிலுள்ள மரங்கள்,  பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே,  - அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும்,  பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை.

(க-து.) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர்.


'ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.

பாடல்-97


தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால்
கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா
பழம்பகை நட்பாதல் இல்.

 முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால், கிழங்குடைய புல் முதலியவெல்லாம்,  முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி,  அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.

(க-து.) பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது.

பழம்பகை நட்பாதல் இல். என்பது பழமொழி


பாடல்-98

வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப்
புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ
அள்ளில்லத் துண்ட தனிசு.

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே!, வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும்,  இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது?, கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே, அள் இல்லத்து உண்ட தனிசு  சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனை ஒன்குமன்றோ?

(க-து.) அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.


'அள்ளில்லத் துண்ட தனிசு' என்பது பழமொழி.


பாடல்-99

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம்பொழியச்
செல்லும்வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார்.

துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியின்கண் தாம் அடங்கி ஒழுகி, ஐம் புலன்களையும் பொறிகள் மேற் சொல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து, தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில்,  மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு,  இவ்வுலகத்தின்கண் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க,  இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம்பெறச் செய்யாதவர்களே,  தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோ டொப்பர்.

(க-து.)காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.


'கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.

பாடல்-100


நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ
திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கறுப்பச் சோருங் குடர்.

செல்வத்தால் மிகவும் பெரியவர் ஆயினார்,  வறுமையுடையார்க்கு,  அவரிடத்துச் செல்கின்ற விருந்தாகச் செல்லவேண்டா;  தம்மா லியலுமாற்றைக் கடந்து விருந்து செய்தலான் வரும் வருத்தம்,  குருவி தொடையை அறுத்த அளவில் குடர்சோர்ந்து விழுந்துன்பத்தையொக்கும்.

(க-து.) செல்வமுடையார் வறியோரிடத்து விருந்தாகச் செல்லவேண்டா என்றது இது.


'குருவி குறங்கறுப்பச் சோருங் குடர்' என்பது பழமொழி

Thursday, December 18, 2014

பழமொழி நானூறு - 91 முதல் 95 வரை



பாடல்-91

பெருமலை நாட! பிறரறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று.

 பெரிய மலைநாட்டை உடையவனே!,  பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை, நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள்,  அரிய இரகசியத்தை,  நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல்,  பனையின் மீது பஞ்சினை வைத்து, கொட்டினாற் போலாம்.

(க-து.) அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக.அல்லாரிடத்துக் கூறற்க.


'பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டது' என்பது பழமொழி.

பாடல்-92

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்.

 இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன்,  பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, பதவியை அடைந்தான், (ஆதலால்)  பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.

(க-து.) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன்பெறுவர் என்பதாம்.


'பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.

பாடல்-93


சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்.

அறிவு நிரம்பிய அமைச்சர்கள். மிகுதியானவைகளைக் கூறி இது பெருங்குற்றமல்லவென்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும்,  அன்றிரவு கழிந்த பின்னர், முன்னாள், பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்),  செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

(க-து.) முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம்.


'முறைமைக்கு மூப்பிளமை இல்' என்பது பழமொழி.

பாடல்-94

நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர்.

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!,  நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும்,  (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள், நல்ல  குடியின்கட் பிறவாதார்,  (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி?,  யாவரே யாயினும்,  சொல்லின்கண் சோர்வுபடாதார்இலர்.

(க-து.) யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.

'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி


பாடல்-95

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.

தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; வாளாற் செத்துக, அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக,  மனம் பொருந்தி,  நுகத்தின்கண் நடுவு நிற்கும்பகலாணியை ஒப்ப,  ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

(க-து.) காய்த லுவத்த லின்றிஒழுகும் அமைதியே தவமாம்.


'நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.

Wednesday, December 10, 2014

பழமொழி நானூறு- 86 முதல் 90வரை



பாடல்-86

உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்
நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக்
கரையிருந் தார்க்கெளிய போர்.

 வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கில், அரங்கின்கண் பக்கத்திருந்தார்க்கு, எளியதாகத் தோன்றும் அதன் நுட்பம் ,அறியாது ஆடுவாற்கு அரியதாகத் தோன்றும் (அதுபோல),  பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும்,  நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய்,கருமத்தைச் செய்யப்புகுந்தவன்,  அழிவினை அடைவான்.

(க-து.) கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும்வேண்டப்படுவ தொன்று.

'வட்டுக் கரையிருந்தார்க் கெளிய போர்' என்பது பழமொழி.

பாடல்-87

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

 தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே,  பார்ப்பனரும்.  நாய் கதுவியதாயினும்,  உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர், (அதுபோல)  கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல,  கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல்செய்க.)

(க-து.) சிறந்த பொருள்களைஇழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.

கள்ளியையும், கருங்காக்கையையும், நாயையும் இழிந்த பொருளாகக் கூறி அவற்றின்கண் உள்ளன சிறந்தன என்று கூறினார்; உடும்பின் புலால்மிகச் சிறந்த வையுடையது என்பது கருதியே பார்ப்பாரும்உண்பர் என்றார்.காக்கை கரைவதை விருந்தினம் வருவதற்குஅறிகுறி என்று கொள்ளுவர்.

பாடல்-88


தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்.

தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்!,  பிணி நீங்க விரும்புவோர்,  வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல), மிகவும் மனம் இரங்கி,  தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு,  தாம்அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.

(க-து.)அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக்கூறுவார்கள்.

'மறையார் மருத்துவர்க்கு நோய்' என்பது பழமொழி.

பாடல்-89

கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று.

 இயமன்,  ஆராய்ந்து உயிரை உண்ணும்பொருட்டு, விரும்பித் திரிவானேயாயினும்,  தான் உண்ணவேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல),  கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல்,  தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச்செய்தவர்களும்,  தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.

(க-து.) கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டுநீங்குவார்கள்.


'எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.

பாடல்-90


செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும்,  பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும்,மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.

(க-து.) காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தைநிறைவேற்றுவார்.


'வெந்நீரில் தண்ணீர் தெளித்து' என்பது பழமொழி.


Friday, December 5, 2014

பழமொழி நானூறு - 81 முதல் 85 வரை



நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல்.

 விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே!,  ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை,காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல்,  ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கிளையின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.

(க-து.) செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.


'நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்துவிடல்' என்பது பழமொழி.

பாடல்-82


பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்
சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்
பெரி(து)ஆள் பவனே பெரிது.

 வில்லைப்போன்ற புருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்!, நன்மையையும்,  தீமையையும், நிரல்படப் புனைந்து, மருங்கு இருந்தார், சொற்களால் கூறவும் வேண்டுமோ?,  எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.

(க-து.) கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.

'பெரிதுஆள்பவனே பெரிது அறியும்' - இஃது  பழமொழி.

பாடல்-83
உற்றதற்(கு) எல்லாம் உரம்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

 நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல்,  தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும், (அதுபோல்)கற்றறிந்தவர்கள்,  நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்யவேண்டுமோ? (வேண்டுவது இல்லை),தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.

(க-து.) கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமேஅழிந்தொழிதல் உறுதியாம்.

'நெல்செய்யப் புல்தேய்ந்தாற்போல நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்' என்பது பழமொழி.

பாடல்-84

இதுமன்னுந் தீதென் றிசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரைத் தண்சேர்ப்ப!
தீநாள் திருவுடையார்க் கில்.

 தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய, விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!,   இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும், செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு),  அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்), தீய நாட்கள், முன்செய்த நல்வினை உடையார்க்கு உண்டாதலில்லை.

(க-து.) ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்.


'தீ நாள் திருவுடையார்க் கில்' என்பது பழமொழி.

பாடல்-85


ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.

 பொருந்திய அன்பினை உடைய உமையை,  ஒரு கூறாக, தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக்கொடியினையும் உடைய சிவபிரான்,  ஏற்றுக்கொண்டான், தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து,  அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும்,  கொள்வார்கள்.

(க-து.) நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு,அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.



நட்டாரை ஒட்டி யுழி.'

என்பது பழமொழி.

Thursday, December 4, 2014

பழமொழி நானூறு- 76 முதல் 80 வரை



பாடல்-76

செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார்
ஒருத்தரை யஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! கூரிது
எருத்து வலியநன் கொம்பு.

 தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்!,வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்),  போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை,  அடைந்தவர்கள்,  பிறர் ஒருவருக்குப் பயந்து,  மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.)

(க-து.) அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கஞ்சார்.

'கூரிது எருத்து வலியதன் கொம்பு' என்பது பழமொழி.

பாடல்-77

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட் டாக்கறக்கு மாறு.

 தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக்கொள்ளாது,
 நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக்கொள்ளுதல்,கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது, அங்ஙனங் கறவாதவனாகி,  அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.

(க-து.) தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.


'கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டாக்கறக்குமாறு' என்பது பழமொழி.

பாடல்-78

இணரோங்கி வந்தாரை என் உற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்(கு)
அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்.

 பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே!, இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு, இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும்,  இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல)  கொத்துக்களைப்போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை,  எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும்,  ஆராயும் அறிவினர், உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர்.

(க-து.) அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காதுஉயர்வாகவே மதிப்பர்.

'அளறாடிக்கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.

பாடல்-79


கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
வளிதோட்கு இடுவாரோ இல்.

 மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!,  காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி,  தோள்களுக்கு இடவல்லார் உளரோ?,  இல்லை. (அதுபோல), பொருத்தமில்லாதவைகளைக் கூறும், நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை,  நாவினிடத்து அடக்குதல், இல்லையாம்.


(க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது.


'வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.

பாடல்-80

காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து)ஊக்கல் குறுநரிக்கு
நல்லநா ராயங் கொளல்.

உரம்பெற்ற முத்துமாலையையணிந்த மார்பை உடையவனே!,  குற்றமற ஒழுக்கத்தைக் காவாத தாழ்ந்த குடியிற் பிறந்தவர்கள்,   இயல்பாகச் செய்த தீங்கினை,  உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் மனத்துட்கொண்டு எதிர்த்துத் தீங்கு செய்ய முயலுதல்,  சிறிய நரியைக் கொல்லும் பொருட்டுக்கூரிய நாராயணம் என்னும் அம்பினை யெய்யக் கொள்வதோடொக்கும்.

(க-து.) கீழோர் தவறுசெய்தால் மேலோர் அதற்கு எதிராகத் தீங்கு செய்யமுயலார்.

'குறு நரிக்கு நல்ல நாராயம் கொளல்' - இஃது பழமொழி.