Sunday, November 30, 2014

பழமொழி நானூறு - பாடல் 66 முதல் 70 வரை


பாடல்-66

முன்னின்னா ராயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர
துன்னினா ரல்லார் பிறர்.

 நீர்நாடனே!,ஒரு குடியிற் பிறந்தவர்கள்,  முன்னர் இனிமையுடையவரல்லராக இருப்பினும்,  மிக்க துன்பம் வந்துற்றவிடத்து, பிரியார் - பின்னரும் இனிமையுடையரல்லராகிப் பிரிந்திரார்.,  ஒரு குடிப்பிறந்தவ ரல்லவராகிய பிறரை,  பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த சமயம் அதனைநீக்கப் புகுதலிலர்.


'பொன்னாச் செயினும் புகாஅர் புனலூரதுன்னினார் அல்லார் பிறர்' என்பது பழமொழி.

பாடல்-67


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.

வெற்றியையுடைய கருடன்மீது ஏறி வீற்றிருந்து,  உலகத்தைத் தாவியளந்த பெருமைபொருந்திய திருமாலே யாயினும், தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்), அறிவிற் சிறந்தோர்,  உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று,  மறைத்துச் செய்யும் காரியத்தின்கண்,அவருள் ஒருவரையும்தெளிதல் இலர்.

(க-து.)மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும்நம்புதல் கூடாது.
.

'சீர்ந்தது செய்யதார் இல்' என்பது பழமொழி.

பாடல்-68


எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்
தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப!
பனைப்பதித் துண்ணார் பழம்.

 இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே  எத்துணைப் பலவேயாயினும், நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட, தினையளவிற்றாயினும்,  அணித்த நாட்களுக்குள் பெறுதல் நல்லது, பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லையாதலான்.

(க-து.) பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க.



'பனைப் பதித் துண்ணார் பழம்' என்பது பழமொழி.

பாடல்-69


தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று.

 அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே!,  கால நெடுமையை நோக்கி,   நீரைத் தன்னிடத்தே பாதுகாத்துக்கொண்டதுபோல, தத்தமது பொருளையும்,  தம் சுற்றத்தாரிடத்துள்ள செல்வத்தையும்,  முற்படவே ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு, பொருளினைச் சேமித்துக் காவல்செய்க.

(க-து.) பின்னாளில் உதவும் பொருட்டுப்பொருளினைச் சேமித்துக் காவல் செய்க.


'சேணோக்கி நந்துநீர்கொண்டதே போன்று' என்பது பழமொழி.

பாடல்-70


சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ(து) ஆகலோ இல்.

 தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்!,  ஆராய்ந்தால்,  புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்),அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட,  அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.

(க-து.) அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையே மிகச் சிறந்தது.


'மோரின் முதுநெய் தீது ஆகலோ இல்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment