Sunday, November 9, 2014

நாலடியார் - 37.பன்னெறி- 361 முதல் 370வரை



பாடல்-361

மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.

மேகம் தவழும் மாடி உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காக நின்று ஒளி வீசுவதாய் இருப்பினும், மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றிலாதவனுடைய இல்லம் என்ன பயனையுடையது? அது பார்க்கக் கூடாத சுடுகாடே ஆகும்.

பாடல்-362


வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

தளர்வில்லாத கொடிய வாள்வீரன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பொ¢தாம்!

பாடல்-363


எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கரிய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர்.

பாடல்-364


கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.

இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பெரியோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தெரிந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.

பாடல்-365


தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

(ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தெரிந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்

பாடல்-366


கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.

பாடல்-367


செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).

பாடல்-368


உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).

பாடல்-369


இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

மணிகளை வாரிக்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.

பாடல்-370


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும். 

Saturday, November 8, 2014

நாலடியார் - 36.கயமை-351 முதல் 360 வரை



பாடல்-351


ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

பாடல்-352


செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.

நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பாடல்-353


கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவனின் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?


கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

 பெண்தன்மையுடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).

பாடல்-355


தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.

பாடல்-356


மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

பாடல்-357


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு

பாடல்-358


ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).

பாடல்-359


இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).

பாடல்-360


நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பொ¢ய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது.

நாலடியார் - 36.கயமை-351 முதல் 360 வரை



பாடல்-351


ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

பாடல்=352


செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.

நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பாடல்-353


கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவா¢ன் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?

பாடல்-354


கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

பக்கங்கள் உயர்ந்து அகன்ற உறுப்புடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).

பாடல்-355


தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.

பாட-356


மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

பாடல்-357


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு

பாடல்-358


ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).

பாடல்-359


இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).

பாடல்-360


நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பெரிய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது. 

Friday, November 7, 2014

நாலடியார்-கீழ்மை- 341 முதல் 350 வரை



பாடல்-341

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

நொய்யரிசியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே வாயில் போட்டாலும், குப்பையைக் கிளறுதலை விட்டு விடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற்பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான்.

பாடல்-342


காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

உறுதியான நூற் பொருளைக் கற்றுக்கொள்ளக் குற்றமற்ற பெரியோரிடத்து, 'காலம் தாழ்த்தாது போகவேண்டும்' என்று ஒருவர் சொன்னால், கீழானவன், 'தூங்க வேண்டும்' என்று சொல்லி எழுந்து போவான். அல்லது வேறொரு காரணத்தைக் கூறி மறுத்துச் செல்வான்.

பாடல்-343


பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! மேலோர் மிக்க செல்வத்தை அடைந்தாலும் தம் ஒழுக்கத்தினின்றும் சிறிதும் குன்றாமல் ஒரே சீரான நிலையில் இருப்பர். கீழோர் செல்வம் பெற்றபோது, தாம் முன்னர் மேற்கொண்டிருந்த ஒழுக்கத்திற்கு வேறாக நடந்து கொள்வர்.

பாடல்-344


தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! ஒருவன் செய்த உதவி தினை அளவே இருக்குமாயினும் சான்றோர் அதனைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவர். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வில்லார், அதனை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.

பாடல்-345


பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.

பொன் கலத்தில் இட்டு நல்ல உணவினை உண்பித்தாலும் நாய், பிறர் எச்சில் சோற்றைக் கண் கொட்டாமல் பார்த்திருக்கும். அதுபோல, கீழான ஒருவனை மதித்து எவ்வளவுதான் பெருமை செய்தாலும், அவனது செயல்கள், அப்பெருமையினின்றும் முற்றிலும் வேறுபடும். (கீழ்மையுடையனவாகவே இருக்கும்).

பாடல்-346


சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

மேலோர், உலகமெங்கும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தக் கூடிய அரச செல்வத்தைப் பெறினும், ஒரு போதும் வரம்பு கடந்த சொற்களைச் கூறார். ஆனால் எப்போதேனும் முந்திரி என்னும் சிறு தொகையுடன், காணி என்னும் சிறுதொகை சேருமானால் ஒரு கீழ் மகன் தன்னை இந்திரனாகக் கருதி இறுமாந்திருப்பான்.

பாடல்-347


மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

குற்றமற்ற நல்ல பொன்னின் மீது, மாட்சிமை பொருந்திய நவமணிகளைப் பதித்துச் செய்யப்பட்டதானாலும் செருப்பு காலில் அணிதற்கே பயன்படும். அதுபோலக் கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும் கீழ் நிலையில் வைக்கத் தக்கவரேயன்றி மேல் நிலையில் வைக்கத் தகார்.

பாடல்-348


கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

சிறந்த மலைகள் விளங்கும் நல்ல நாட்டை உடைய அரசனே! கீழ் மகன் கடுமையான சொற்களைச் சொல் வல்லவன்; யாரிடமும் இரக்கம் இல்லாதவன்; பிறர் துன்பம் கண்டு மகிழ்பவன்; அடிக்கடி சினம் கொள்பவன்; எங்கும் திரிபவன்; யாரையும் பழிப்பவன்.

பாடல்-349


பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.

தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மலிந்து, ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய நாட்டு வேந்தனே! ஒருவர் தம் பின்னே நின்றால் 'இவர்கள் பலநாள் பழக்கம் உள்ளவர்கள்' என மேலோர் அவர்களிடம் இனியராய் இருப்பர். ஆனால் கீழ்மக்களோ அப்படி நிற்பவர்களை விரும்பாது பழிப்பர். (சில நாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய நண்பர்களைப் போலக் கருதுவர் மேலோர்; பலநாள் பழகியவரிடமும் அன்பு செலுத்தாது பழிப்பர் கீழோர்).

பாடல்-350


கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.

மன்னனே கேட்பாயாக! நாள்தோறும் அறுக்கத்தக்க புல்லை அறுத்துத் தின்பதற்குக் கொடுத்தாலும் சிறிய எருதுகள் பெரிய வண்டியை இழுக்கமாட்டா. அதுபோல, செல்வம் உடையவர்களானாலும் கீழ் மக்களை, அவர்கள் செய்யும் காரியத்தால், இவர்கள் கீழ் மக்கள் என்று அறிந்து கொள்ளலாம். 

Thursday, November 6, 2014

நாலடியார் - பேதமை- பாடல் 331 முதல் 340 வரை



பாடல்-331


கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

கொல்லும் தொழிலில் வல்ல பெரிய எமன், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் நாளை எதிர் பார்த்திருக்க, அதனை உணராது இவ்வுலக வாழ்க்கையாகிய வலையில் இறுமாந்திருப்பவரது பெருமையானது, கொலைஞர் உலையிலே ஆமையை இட்டு நெருப்பை மூட்ட, அந்த ஆமையானது தனது நிலையை உணராது அந்த உலை நீரில் விளையாடுவது போலாம்.

பாடல்-332


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் குறைவற முடிக்கும் அறச் செயல்களைப் பற்றி யோசிப்போம் என்றிருப்போர் பெருமையானது, பெரிய கடலில் நீராடச் சென்றவர், அந்த கடலின் ஓசை ஒருசேர அடங்கிய பிறகு நீராடுவோம் என்று கருதியது போலாம். (குடும்பத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் முடிவில்லாதவை. ஆதலால் அறத்தைப் பிறகு செய்யலாம் என்றிருப்பது பேதைமை).

பாடல்-333


குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

நற்குலம், தவம், கல்வி, குடிப்பிறப்பு, முதுமை ஆகிய இவ்வைந்தும் ஒருவரிடம் தப்பாமல் பொருந்திய போதும், நன்மை மிகுந்த, குற்றமற்ற, பழைமையான சிறப்புடைய உலக இயல்பு அறியாதிருத்தல், நெய் இல்லாத பால் சோற்றுக்கு ஒப்பாகும். (சர்க்கரை முதலானவற்றைப் பெற்றாலும் நெய் கலந்தது போன்ற இனிமை பால் சோற்றுக்கு இல்லை. அதுபோல, கல்வி முதலான சிறப்புகள் இருந்தாலும், உலகத்தோடு ஒட்டி வாழாதார் வாழ்க்கை சிறப்பில்லாததாம்; பேதைமை உடைத்தாம்).

பாடல்-334


கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.

கற்கள் மிகவும் நல்லனவாகும். எப்படியெனில், பிறர் சொல்லும் சொல்லை அறிந்துகொள்ளாதவையானாலும், தம்மைச் சார்ந்தவர்க்கு அப்போதே நிற்பதும், உட்காருவதும், படுப்பதும், நடப்பதும் ஆகிய செயல்களுக்கு உதவுதலால், அவை யாருக்கும் ஓர் உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்.

பாடல்-335


பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.

தான் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லாத போதும், ஒரு பயனைப் பெற்றவன் போல், தன்னை எதிர்க்காதவரிடம் பகை கொண்டு சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காகக் கூறாவிடின் பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்றுவிடும். (ஒரு பயனுமின்றிப் பிறரைப் பழித்தல் பேதையர் தொழில் என்பது கருத்து)

பாடல்-336.


தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, 'அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்' என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.

பாடல்-337


ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

பாடல்-338


நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.

நாள்தோறும் நல்லோர் அவையை அடையார்; அறம் செய்யார்; இல்லாதவர்க்கு எதையும் தர மாட்டார்; எல்லா வகையிலும் இன்பம் அளிக்கத் தக்க மனைவியின் தோள்களைத் தழுவார்; புகழுடன் வாழார்; இப்படி ஒரு பயனும் இல்லாத பேதைகள் வாழ்க்கையில் வெறுப்படைய மாட்டார்களா? (மனைவியின் தோள்களைத் தழுவார் என்றதனால், பரத்தையின் தோள்களைத் தழுவுவர் என்று பொருளாயிற்று).

பாடல்-339


விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேச, 'நாம் இப்படிப்பட்ட புகழுரைகளை விரும்பமாட்டோம்' என்று வெறுத்துப் புறக்கணிக்கும் நற்குணமில்லாதவரிடம் கொள்ளும் நட்பானது, கடல் சூழ்ந்த உலகையே தருவதாயினும் துன்பம் தருவதாம். (தம்மை மதிப்பவரைத் தாம் மதியாதிருத்தல் பேதையின் இயல்பு).

பாடல்-340


கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.

ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).

Wednesday, November 5, 2014

நாலடியார் - 33.புல்லறிவாண்மை- பாடல் 321 முதல் 330 வரை




பாடல்- 321


அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

அருள் காரணமாக அறம் உரைக்கும் அன்புடையவர் வாய்மொழியை நல்லோர், தமக்குப் பெரிதும் பயனுடையதாக மதித்து ஏற்பர். ஆனால் ஒன்றுக்கும் உதவாத பேதை ஒருவன் அவ்வறவேர் வாய்மொழியைப் பால் சோற்றின் சுவையைத் துடுப்பு உணராதது போல இகழ்ந்து கூறுவான்.

பாடல்-322


அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.

தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாயானது, பால் சோற்றின் சுவையை அறியாதது போல, பொறாமை இல்லாதார் அறநெறியைக் கூறும்போது அதனை, நற்குணமில்லாதார் காது கொடுத்தும் கேளார்,

பாடல்-323


இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?

கண் இமைக்கும் நேரத்திற்குள் இனிய உயிர் போகும் தன்மையை, எல்லா வகையாலும் தாம் பார்த்திருந்தும், தினை அளவேனும் அறநெறி கேட்பதும் அந்த அறவழியிலே செல்வதும் ஆகிய நல்ல செயல்களை மேற்கொள்ளாத நாணமும்,  அற்ற மக்கள் இறந்தால் என்ன? இருந்தால் என்ன? (இறந்தால் என்ன)

பாடல்-324

உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.

வாழும் நாட்கள் சில! அந்தச் சில (நாட்களிலும்) உயிருக்கு அரணாகத் தக்க நல்லறச் செயல் ஒன்றும் இல்லை. ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் பல. இப்படியிருக்க, எல்லாருடனும் இனிமையாகக் கலந்து பேசி மகிழாது, தனித்திருந்து பலருடனும் பகை கொள்வதால் என்ன பயன்? கேடுதான் பயன்!

பாடல்-325


எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

பலர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் போய் அங்கிருக்கும் ஒருவனை இகழ, இகழ்ச்சிக்கு ஆளானவன் ஒன்றும் சொல்லாது பொறுத்திருப்பானானால், இகழ்ந்தவன் தீவினையால் அழிவான். அவ்வாறு அழியாது வாழ்வானாகில் அவன் வியக்கத்தக்கவனே!

பாடல்-326

மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.

முதுமைப் பருவம் வருவதற்கு முன்னமே அறநெறியை மேற்கொண்டு அதனை முயன்று செய்யாதவன், தன் வீட்டு வேலைக்காரியால் தள்ளப்பட்டு, 'வெளியிலே இரு; இங்கிருந்து போ!', என்னும் இன்னாச் சொற்களால் இகழப்படுவான்

.
பாடல்-327


தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

புல்லறிவினார் (செல்வம் உடையவராயின்) அதைக் கொண்டு தாமும் இன்பம் அடையார் தகுதியுடையார்க்கும் நன்மை செய்யார்; உயிருக்குக் காவலாக இருக்கும் அறநெறியையும் சேர மாட்டார்; செய்வதறியாது செல்வத்திலேயே மயங்கிக் கிடந்து வாழ்நாளை வீணாகக் கழிப்பர்.

பாடல்-328


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

இளமையிலேயே, தாம் (மரணத்துக்குப் பின்) போகும் மறுமை உலகுக்குரிய அறமாகிய சோற்றை, மிக அழுத்தமாகத் தோள் மூட்டையாக எடுத்துக்கொள்ளாதவர்களாய், பணத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, அறத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் பேதையார், சைகை செய்து காட்டும் பொன் உருண்டையும் புளிப்பாகிய விளாங்காய் ஆகும்.

பாடல்-329

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

பாடல்-330


என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.

அளவற்ற அன்புக்கு உரியவரான தமது அரிய உயிர் போன்றவரைக் கொண்டு செல்ல முயலும் எமனைக் கண்டும், ஐயோ புல்லறிவினார், பெறற்கரிய இம்மனிதப் பிறவி பெற்றும் அறநினைவு அற்றவராகித் தமது வாழ்நாளை வீணாகக் கழிக்கின்றனர். 

Tuesday, November 4, 2014

நாலடியார் - 32.அவையறிதல்-பாடல் 311 முதல் 320 வரை



பாடல்-311


மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.

ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தெரிந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.

பாடல்-312


நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

தன் வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, உட்கருத்தை உணர்ந்தவன் போல் தன்னைக் கருதிக்கொண்டு, அவையைக் கூட்டும் தீய புலவனை, அடக்கமுடைய நற்புலவர்கள் சேரமாட்டார்கள். ஏனெனில் அந் நற்புலவர்கள் வருகையால், அத்தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால், அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான். அல்லது தோளைத் தட்டி ஆர்த்துச் சண்டைக்கு எழுந்திருப்பான்.

பாடல்-313

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.



பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு விரைந்து சொல்ல ஆசைப்படுவோர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறியார்; தாம் கற்றவற்றைப் பிறர் விரும்பிக் கேட்குமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார்; இவ்வாறிருந்தும் விடாமல் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.

பாடல்-314

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.

ஓர் அறிவற்றவன் ஆசிரியரை வழிபட்டுக் கற்காமல், பள்ளியில் அவ்வாசிரியர் பிறருக்குச் சொல்லுங்கால், தற்செயலாகத் தெரிந்துகொண்ட ஒரு பாட்டினை, கற்றோர் அவையில் நாணாமல் கூறித் தன் புல்லறிவினை வெளிப்படுத்துவான்.

பாடல்-315


வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார். (அறிவிலார் முன் அறிஞர் தமது நாவன்மையைக் காட்டிச் சிறுமை அடையக் கூடாது என்பது கருத்து).

பாடல்-316


பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக 'என்னே இவள் செய்த பாவம்!' என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர். (அறிவிலிகள் தவறாகக் கூறினாலும் அறிஞர்கள் அமைதியோடு இருக்க வேண்டும் என்பது கருத்து).

பாடல்-317


பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

பாடல்-318


புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்து அவற்றின் பொருள் அறியாதவராகிக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும் அப்புலவர்கள் வேறு; அவற்றின் பொருளைத் தெரிந்து மற்றவர்க்கும் தெரிவிக்கின்ற புலவர்கள் வேறு. (புத்தகங்களைச் சேர்த்து வைப்பதோடு அவற்றைப் படித்துப் பயனடைய வேண்டும் என்பது கருத்து).

பாடல்-319


பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு வேந்தே! நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விரித்துக் கூறும் அகல உரை, சாரங்களை மட்டும் கூறும் நுட்ப உரை, வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்ட பொருளான விசேட உரை ஆகிய இந்நான்கு வழிகளிலும் பொருளை விளக்கிக் கூறாத சொற்கள் நூலிற்குச் சிறந்த உரையாகுமோ? ஆகாது.

பாடல்-320


இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

உயர்குடிப் பிறப்பு இல்லாதவர் எவ்வளவுதான் நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் இன்னொருவரது சொற்களில் உள்ள குற்றங்களைப் பிறர் அறியாதவாறு காத்தற்குரிய அடக்கமுடைமை உடையவரோ? அல்லர், நற்குடிப் பிறந்த நல்லறிவாளர். நூற்பொருள்களைத் தெளிவாக உணராதவரது புல்லிய அறிவினைத் தாம் அறிந்தாலும் அறியாதவர்போல் இருப்பர். (பிறர் குற்றம் கண்டு இகழாது இருப்பவரே அவைக்கு உரியர்).