Saturday, November 8, 2014

நாலடியார் - 36.கயமை-351 முதல் 360 வரை



பாடல்-351


ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).

பாடல்-352


செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.

நீர் நிறைந்த பெரிய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பாடல்-353


கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவனின் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?


கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

 பெண்தன்மையுடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).

பாடல்-355


தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.

பாடல்-356


மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.

பாடல்-357


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு

பாடல்-358


ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).

பாடல்-359


இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).

பாடல்-360


நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பொ¢ய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment