Wednesday, November 5, 2014

நாலடியார் - 33.புல்லறிவாண்மை- பாடல் 321 முதல் 330 வரை




பாடல்- 321


அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

அருள் காரணமாக அறம் உரைக்கும் அன்புடையவர் வாய்மொழியை நல்லோர், தமக்குப் பெரிதும் பயனுடையதாக மதித்து ஏற்பர். ஆனால் ஒன்றுக்கும் உதவாத பேதை ஒருவன் அவ்வறவேர் வாய்மொழியைப் பால் சோற்றின் சுவையைத் துடுப்பு உணராதது போல இகழ்ந்து கூறுவான்.

பாடல்-322


அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.

தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாயானது, பால் சோற்றின் சுவையை அறியாதது போல, பொறாமை இல்லாதார் அறநெறியைக் கூறும்போது அதனை, நற்குணமில்லாதார் காது கொடுத்தும் கேளார்,

பாடல்-323


இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?

கண் இமைக்கும் நேரத்திற்குள் இனிய உயிர் போகும் தன்மையை, எல்லா வகையாலும் தாம் பார்த்திருந்தும், தினை அளவேனும் அறநெறி கேட்பதும் அந்த அறவழியிலே செல்வதும் ஆகிய நல்ல செயல்களை மேற்கொள்ளாத நாணமும்,  அற்ற மக்கள் இறந்தால் என்ன? இருந்தால் என்ன? (இறந்தால் என்ன)

பாடல்-324

உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.

வாழும் நாட்கள் சில! அந்தச் சில (நாட்களிலும்) உயிருக்கு அரணாகத் தக்க நல்லறச் செயல் ஒன்றும் இல்லை. ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் பல. இப்படியிருக்க, எல்லாருடனும் இனிமையாகக் கலந்து பேசி மகிழாது, தனித்திருந்து பலருடனும் பகை கொள்வதால் என்ன பயன்? கேடுதான் பயன்!

பாடல்-325


எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

பலர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் போய் அங்கிருக்கும் ஒருவனை இகழ, இகழ்ச்சிக்கு ஆளானவன் ஒன்றும் சொல்லாது பொறுத்திருப்பானானால், இகழ்ந்தவன் தீவினையால் அழிவான். அவ்வாறு அழியாது வாழ்வானாகில் அவன் வியக்கத்தக்கவனே!

பாடல்-326

மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.

முதுமைப் பருவம் வருவதற்கு முன்னமே அறநெறியை மேற்கொண்டு அதனை முயன்று செய்யாதவன், தன் வீட்டு வேலைக்காரியால் தள்ளப்பட்டு, 'வெளியிலே இரு; இங்கிருந்து போ!', என்னும் இன்னாச் சொற்களால் இகழப்படுவான்

.
பாடல்-327


தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

புல்லறிவினார் (செல்வம் உடையவராயின்) அதைக் கொண்டு தாமும் இன்பம் அடையார் தகுதியுடையார்க்கும் நன்மை செய்யார்; உயிருக்குக் காவலாக இருக்கும் அறநெறியையும் சேர மாட்டார்; செய்வதறியாது செல்வத்திலேயே மயங்கிக் கிடந்து வாழ்நாளை வீணாகக் கழிப்பர்.

பாடல்-328


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

இளமையிலேயே, தாம் (மரணத்துக்குப் பின்) போகும் மறுமை உலகுக்குரிய அறமாகிய சோற்றை, மிக அழுத்தமாகத் தோள் மூட்டையாக எடுத்துக்கொள்ளாதவர்களாய், பணத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, அறத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் பேதையார், சைகை செய்து காட்டும் பொன் உருண்டையும் புளிப்பாகிய விளாங்காய் ஆகும்.

பாடல்-329

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.

பாடல்-330


என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.

அளவற்ற அன்புக்கு உரியவரான தமது அரிய உயிர் போன்றவரைக் கொண்டு செல்ல முயலும் எமனைக் கண்டும், ஐயோ புல்லறிவினார், பெறற்கரிய இம்மனிதப் பிறவி பெற்றும் அறநினைவு அற்றவராகித் தமது வாழ்நாளை வீணாகக் கழிக்கின்றனர். 

No comments:

Post a Comment