Tuesday, November 4, 2014

நாலடியார் - 32.அவையறிதல்-பாடல் 311 முதல் 320 வரை



பாடல்-311


மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.

ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தெரிந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.

பாடல்-312


நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.

தன் வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, உட்கருத்தை உணர்ந்தவன் போல் தன்னைக் கருதிக்கொண்டு, அவையைக் கூட்டும் தீய புலவனை, அடக்கமுடைய நற்புலவர்கள் சேரமாட்டார்கள். ஏனெனில் அந் நற்புலவர்கள் வருகையால், அத்தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால், அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான். அல்லது தோளைத் தட்டி ஆர்த்துச் சண்டைக்கு எழுந்திருப்பான்.

பாடல்-313

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.



பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு விரைந்து சொல்ல ஆசைப்படுவோர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறியார்; தாம் கற்றவற்றைப் பிறர் விரும்பிக் கேட்குமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார்; இவ்வாறிருந்தும் விடாமல் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.

பாடல்-314

கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.

ஓர் அறிவற்றவன் ஆசிரியரை வழிபட்டுக் கற்காமல், பள்ளியில் அவ்வாசிரியர் பிறருக்குச் சொல்லுங்கால், தற்செயலாகத் தெரிந்துகொண்ட ஒரு பாட்டினை, கற்றோர் அவையில் நாணாமல் கூறித் தன் புல்லறிவினை வெளிப்படுத்துவான்.

பாடல்-315


வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார். (அறிவிலார் முன் அறிஞர் தமது நாவன்மையைக் காட்டிச் சிறுமை அடையக் கூடாது என்பது கருத்து).

பாடல்-316


பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக 'என்னே இவள் செய்த பாவம்!' என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர். (அறிவிலிகள் தவறாகக் கூறினாலும் அறிஞர்கள் அமைதியோடு இருக்க வேண்டும் என்பது கருத்து).

பாடல்-317


பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.

பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.

பாடல்-318


புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்து அவற்றின் பொருள் அறியாதவராகிக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும் அப்புலவர்கள் வேறு; அவற்றின் பொருளைத் தெரிந்து மற்றவர்க்கும் தெரிவிக்கின்ற புலவர்கள் வேறு. (புத்தகங்களைச் சேர்த்து வைப்பதோடு அவற்றைப் படித்துப் பயனடைய வேண்டும் என்பது கருத்து).

பாடல்-319


பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு வேந்தே! நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விரித்துக் கூறும் அகல உரை, சாரங்களை மட்டும் கூறும் நுட்ப உரை, வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்ட பொருளான விசேட உரை ஆகிய இந்நான்கு வழிகளிலும் பொருளை விளக்கிக் கூறாத சொற்கள் நூலிற்குச் சிறந்த உரையாகுமோ? ஆகாது.

பாடல்-320


இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

உயர்குடிப் பிறப்பு இல்லாதவர் எவ்வளவுதான் நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் இன்னொருவரது சொற்களில் உள்ள குற்றங்களைப் பிறர் அறியாதவாறு காத்தற்குரிய அடக்கமுடைமை உடையவரோ? அல்லர், நற்குடிப் பிறந்த நல்லறிவாளர். நூற்பொருள்களைத் தெளிவாக உணராதவரது புல்லிய அறிவினைத் தாம் அறிந்தாலும் அறியாதவர்போல் இருப்பர். (பிறர் குற்றம் கண்டு இகழாது இருப்பவரே அவைக்கு உரியர்).

Thursday, October 30, 2014

நாலடியார் - 31.இரவச்சம்-301 முதல் 310வரை



பாடல்-301

நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.

இவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள்' என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே, தெளிந்த அறிவினையுடையார் இரத்தற்குச் செல்வரோ? செல்ல மாட்டார்கள்.

பாடல்-302


இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.

தாழ்வதற்குக் காரணமான இரத்தலை மேற்கொண்டு ஒருவன் வயிறார உண்பதினும், பழிக்கத் தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு இருந்து இறப்பது குற்றமா? ஆகாது. ஏன் எனில் ஒருவன் இறந்தபின் பிறக்கின்ற பிறப்பு, கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்லவா? (இந்த உடம்பு போனால் வேறு நல்ல பிறவி கிடைக்காது என்று கருதவேண்டாம். நல்வினை செய்யுங்கள்! இதை விட நல்ல பிறவி கிடைக்கும்; அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் என்பது கருத்து).

பாடல்-303


இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303

வறுமை காரணமாக இரத்தலாகிய இழிதொழிலைத் துணிந்து மேற்கொள்பவரும் உண்டு. அப்படி இரக்கச் சென்றாலும், அதிலும் மேன்மையைக் கருதும் மேலோர், தம்மை அன்புடன் நோக்கி, 'எங்கள் வீட்டுக்கு வாருங்கள்; உணவு கொள்ளுங்கள்!' என்று விரும்பி அழைத்து உபசரிப்பவர் இல்லத்திற்கு அல்லாமல் வேறோர் இல்லத்தில் தலை காட்டவும் மாட்டார். (வறுமையால் யாசிக்கச் சென்றாலும் கண்ட இடத்திற்குச் செல்லாமல், அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர், ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்புக்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

பாடல்-304


திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

செல்வம் தம்மை விட்டு விலகினாலும், தெய்வம் (ஊழ்வினை) சினந்து வருந்தினாலும், மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி (தொழில் செய்து வாழும் வாழ்க்கை) கருதுவார்களே அல்லாமல், பொருளைப் புதைத்து வைத்துப் பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று, 'என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்' என்று கூறி நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.

பாடல்-305


கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

தம்முடைய பொருளை ஒளிக்காது கொடுக்கும் திடமான அன்புடைய, கண்போன்ற இனியவரிடத்தும் இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை ஆகும். ஏனெனில் 'சென்று யாசிப்போம்' என இரத்தலை நினைக்கும்போதே, நெஞ்சு வெந்து உருகுகிறது. அவ்வாறிருக்க, ஒருவரிடம் பொருளை யாசித்துப் பெறும் போது, அப்பொருளைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ? (என்ன பாடுபடுமோ?)

பாடல்-306


இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.

துன்பங்கள் நம்மிடம் வந்து சேரட்டும்; இன்பங்கள் நம்மைவிட்டு விலகட்டும் (நெஞ்சமே, எதற்கும் அஞ்சாதே! அமைதியோடு இரு!') என வேண்டி மனத்தை நிறைவு (திருப்தி) செய்வதால் தீரும் தன்மையது வறுமை, அப்படியிருக்க, பொருள் ஆசை துன்புறுத்தும் மனத்துடன், அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்? ஒரு பயனும் கிடைக்காது.

பாடல்-307


என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்.

குன்றுகளின் பரந்த இடங்களில் எல்லாம் பொன் பரவுவதற்குக் காரணமான அருவிகளையுடைய மலை நாட்டு வேந்தனே! இவ்வுலகில் எக் காலத்திலும் புதிய மனிதர்கள் பிறந்து கொண்டேயிருந்தாலும், (இனி) என்றும் பிறவாதவன் ஒருவன் உளன். (அவன் எவன் என்றால்) இரப்பாரை இகழாது ஆதரிக்கும் மகனே, அவன்! (யாசிப்பவரை இகழாது அன்ன தானம் செய்து பாதுகாப்பவனே, புதிய புதிய மனிதர் பிறந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் இனிப் பிறவாத நிலையாகிய வீடு அடைவான் என்பது கருத்து).

பாடல்-308


புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, 'ஒன்றைத் தரவேண்டும்' என இரப்பானாகில், அச்செல்வன் 'இல்லை' என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? உயிர்விடுவான். (மானத்தால் உயிர் துறப்பான் என இரங்கிக் கூறியது).

பாடல்-309


ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் - பாசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?

வறியவர் ஒருவர் செல்வர் ஒருவரைச் சார்ந்து, அவர் சொன்னபடி செய்து வணங்கித் தாழ்ந்து வாழ்தல் உலக முறைமை கும். அப்படியின்றி மானம் கெட்டு 'எனக்கு ஏதேனும் தரமாட்டீர்களா?' என்று இரப்பதைவிட, மெல்லப் பிறரைச் சார்ந்து அவர் ஏவல் கேட்டு வாழும் முற்கூறிய வாழ்க்கை அவ்வளவு துன்பம் தருவதோ? (ஒரு தொழில் இன்றிப் பிறரைத் தொழுது உண்டு வாழ்தல் துன்பம் தருவதுதான். ஆயினும் அதை விடத் துன்பம் தருவது இரந்து உண்டு வாழ்தல் என்பது கருத்து).

பாடல்-310


பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ.

நெடுநாள் பழகிய நட்புரிமையே பற்றுக் கோடாக உதவி நாடி வந்தவர்க்கு, அதே நட்புரிமையால் ஒன்றைக் கொடுப்பாராக! அப்படிக் கொடுத்ததை மன நிறைவின்மையால் வந்தவர் ஏற்க மறுப்பின் அது, கொடுத்தவர் மனத்தில் நீங்காது நிலைத்து நின்று சுடும் தீயாகும்.

Wednesday, October 29, 2014

நாலடியார் - 30.மானம்- 291 முதல் 300 வரை



பாடல்-291

திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.

செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதார் செய்யும் அவமதிப்பைக் கண்டபோது, மானம் உடையார் மனத்தில், காட்டிலே பற்றிப் படர்ந்து எறியும் தீப்போல அனல் மிகும்

பாடல்-292


என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள்.

பாடல்-293

யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.

வறுமையுடையோராயினும், நாமாக இருந்தால், செல்வரை உள்ளே அழைத்துச் சென்று அவர்க்கு வீட்டைச் சுற்றிக் காட்டி மனைவியையும் அறிமுகம் செய்து வைப்போம். செல்வரோ, நாம் பார்த்தவுடனே தம் மனைவியின் கற்புக் கெடும் என்பவரைப் போல நாணி, நம்மை வாயிலின் புறத்தே உட்கார வைத்துச் சோறிடுவர். ஆதலால் அவர் தொடர்பை மறந்து விடுக.


பாடல்-294

இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

நன்றாகக் கஸ்தூரி மணம் கமழும் கூந்தலையுடையவளே! மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மையை விளைவிக்கும். ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!

பாடல்-295


பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று துன்பம் தருவதன்று.

பாடல்-296


மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார். 296

வளமுடைய இப்பெரிய உலகில் வாழ்பவர் எல்லாரினும் மிக்க செல்வம் உடையவராக இருந்தாலும் வறியோர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாராயின் வறியவரே ஆவர். வறுமையுற்றிருந்தாலும் செல்வரிடம் சென்று இரவாதார், பெரு முத்தரையர் (முத்துக் குவியலையுடைய பாண்டியர்) போன்ற செல்வம் உடையவர் ஆவர்.

பாடல்-297


கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

வில் போன்ற வளைந்த புருவத்தின் கீழ் வேல் போல் உலாவிவரும் நீண்ட கண்ணையுடையவளே! கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர்; இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர். (மேலான வாழ்வு வாழ விரும்புவோர் மானத்துக்கு அஞ்சி வாழவேண்டும் என்பது கருத்து).

பாடல்-298


நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.

முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்' என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும்.

பாடல்-299


நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.

நம்மை விரும்பி வந்தவர்க்கு ஒன்றைக் கொடாமல் இருப்பது நாணம் அன்று; எல்லா நாளும் தீயவைக்கு அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும் நாணம் அன்று. உண்மையில், நம்மை எளியராக நினைத்து, செல்வத்தால் உயர்ந்தவர் நமக்குச் செய்த அவமரியாதையைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே நாணம் ஆகும்.

பாடல்-300


கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.

காட்டில் இருக்கும் புலியானது தான் கொன்ற காட்டுப் பசு இடப்பக்கம் வீழ்ந்ததாயின், அதை உண்ணாது பட்டினி கிடந்து இறக்கும். அது போல், இடம் அகன்ற விண்ணுலகம் கைக்குக் கிடைப்பதாயினும், அது மானம் கெட வருமாயின் அந்த விண்ணுலகையும் வேண்டார், விழுமியோர். 

Tuesday, October 28, 2014

நாலடியார் - 29.இன்மை- பாடல் 281 முதல் 290 வரை



பாடல்-281

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.

பாடல்-282


நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.

தண்ணீரை விட நெய் நுட்பமானது என்பர்; அந்த நெய்யைவிடப் புகை நுட்பமானது என்பதனை யாவரும் அறிவர். ஆராய்ந்து பார்க்குமிடத்து இரத்தலாகிய துன்பம் உடையவன் அப்புகையும் புகுதற்கு அரிய துவாரத்தில் நுழைந்து செல்வான். (வறுமையாளன் எல்லாக் காவலையும் கடந்து, செல்வரை நாடிச் செல்வான் என்பது கருத்து).

பாடல்-283


கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.

கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பெரிய கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.

பாடல்-284


உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

உயிர் நீங்கிப் பிணமானபோது அதனைப் பிடுங்கித் தின்னக் கூடும் காக்கைக் கூட்டம் போல, ஒருவன் செல்வத்தோடு திகழும் காலத்தில், அவனுக்குத் தொண்டு செய்ய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்; ஆனால் அவனே வறுமையுற்று வண்டு போலப் பல திசைகளிலும் சென்று ஒரு வேளை சோற்றுக்காக அலைந்து திரியும் காலத்தில் அவனைப் பார்த்து, 'தீதில்லாமல் வாழ்கிறீரா?' (நலந்தானா?) என்று வினவுவார் இல்வுலகில் யாரும் இல்லை.

பாடல்-285


பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

ஒலிக்கும் அருவிகள் கல்மேல் வீழ்ந்து அதன் மாசு போகக் கழுவும் பெரிய மலைகளையுடைய நாட்டுக்கு மன்னனே! உலகில் வறுமையால் சூழப்பட்டவர்க்கு, அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; பெரிய வல்லமை கெடும்; சிறந்த கல்வியும் கெடும்.

பாடல்-286


உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.

வயிற்றின் உள்ளே மிகுந்த பசியால் துன்பமெய்தித் தன்னிடத்தில் விரும்பி வந்தவர்க்கு, உள்ளூரில் இருந்தும் கூட ஒன்றும் கொடுக்க இயலாதவன், அங்கேயே இருந்து தனது வாழ்நாளை வீணாகக் கழித்து உயிர்விடாது, வேறெந்த ஊருக்காவது போய்ப் பிறருடைய வீட்டில் விருந்தாளியாக இருப்பதே நல்லது. (பிறர்க்கு உதவமுடியாத வாழ்க்கை வீண் வாழ்க்கை என்பது கருத்து).

பாடல்-287


நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.

கூர்மையினால் முல்லை அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் சேரப் பெற்றவர், தமது சிறந்த குணங்களையே அல்லாமல் தம்மிடம் நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும், மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒருசேர இழப்பர்.

பாடல்-288


இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

வறுமை என்னும் குழியில் விழுந்து துன்புற்று, ஏதாவது ஒரு பொருளை யாசித்து வருபவர்க்கு உதவ முடியாமல், முட்டுப்பாடான வறுமை நெறியிலே தானும் நின்று முயற்சியால் ஒன்றும் ஆகாமல் உள்ளூரில் வருந்தி வாழ்வதைவிட, நெடுந்தூரம் நடந்து சென்று, வெளியூர்களில் வரிசையாக இருக்கும் வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட வழியில் வாழ்வதே நலமாம். (இரப்பார்க்கு ஒன்று தர இயலாத வாழ்க்கை, இரத்தலினும் துன்பமானது என்பது கருத்து).


பாடல்-289

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.

அனுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்றபோது, (முன்பு) பொற்கடகம் அணிந்திருந்த தம் கைகளாலே, செடியை வளைத்துக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய் வேகவைத்து, பனையோலைக் குடைகளையே பாத்திரமாகக் கொண்டு, உப்பில்லாது வெந்த அந்தக் கீரையை உண்டு மனவூக்கம் குன்றித் துன்பத்துடன் வாழ்வர்.

பாடல்-290


ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.

Monday, October 27, 2014

நாலடியார் - 28.ஈயாமை-பாடல்-271-280



பாடல்-271


நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும்.

பாடல்-272


எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.

எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால் சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப்பயனில் முற்படுவர்;
- மற்றுப். பெருஞ்செல்வம் எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம் என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக் கடலில் வீழ்ந்து அழிந்தவராவர்.

----
பாடாள்-273


துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.

பொருளை உண்டு அனுபவிக்காதவனாய்த் துறவிகளுக்கும் ஒன்றை ஈயாதவனாய், பொருளை அப்படியே விட்டு விட்டு இறந்து போகும் அறிவில்லாதவனை, அவன் தேடி வைத்த பொருளும் நோக்கி (இம்மையில்) என்னை நீ நன்கு பயன்படுத்திக்கொள்ளவில்லையே எனச் சிரிக்கும்.

பாஆடாள்-274

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.

பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத கருமி குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும்.

பாடல்-275

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது.

பாடல்-276

எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.

அறிவில்லாதவன், தான் சேர்த்த பொருளை, 'என்னுடையது என்னுடையது' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். நானும் அப்பொருளை 'என்னுடையது என்னுடையது' என்று எண்ணிக் கொண்டிருப்பேன். ஏனெனில், அ·து அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அது போலவே நானும், அப்பொருளைப் பிறர்க்குத் தராமலும், நான் அனுபவிக்காமலும் இருக்கிறேன். (தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் யாரிடம் இருந்தாலென்ன? வறியவர்க்குக் கொடுக்காத செல்வம், அதனைப் பெற்றவனுக்கும் உதவுவதில்லை என்பது கருத்து).

பாடல்-277


வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.

ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், 'செல்வத்தையெல்லாம் இழந்தார்' என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்; அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.

பாடல்-278


தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

பொருள் தன்னுடையதாக இருக்கும்போது ஓர் உலோபி தானும் பிறர்க்குக் கொடுக்க மாட்டான். அவனுடைய பங்காளிகளும் அப்பொருள் தமதான காலத்தில் கொடுக்க மாட்டார்கள். முதலில் தன்னுடையதாயிருந்தபோது அவன் கொடுக்க முனைந்திருப்பினும் அப் பங்காளிகள் தடுத்திருக்க மாட்டார்கள். பின் பங்காளிகள் கொடுக்கும்போது இறந்துபோன அவன் வந்து தடுக்கமாட்டான். அப்படியிருக்க அவர்கள் கொடாமைக்குக் காரணம் யாதோ?

பாடல்-279


இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.

இரப்பவர் கன்றாக இருக்க, கொடுப்பவர் பசுவாக இருந்து அறிவுடன் கொடுப்பதே சிறந்த கொடையாம். அவ்வறிவு இல்லாமல், வல்லவர் கோலால் அடித்து வருத்த, பால் தரும் பசுவைப் போல, வல்லோர் பல சூழ்ச்சி செய்து வற்புறுத்தி வருத்திய பின் கொடுப்பது கீழ்மக்கள் இயல்பாகும்.

பாடல்-280

ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.

பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் அவ்வாறே மிகுந்த துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும் துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம். ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும். (பொருள் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அறிந்து, அதனை இன்பத்திற்கு 

Saturday, October 25, 2014

நாலடியார் - 27.நன்றியில் செல்வம் - பாடல் 261 முதல் 270 வரை



பாடல்-261


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.

(தான் வாழும் மரத்துக்கு) அருகிலே இருப்பதாகிப் பல பழங்களைக் கொண்டதாக இருப்பினும், பொரிந்த அடி மரத்தையுடைய விளாமரத்தை வெளவால் நெருங்காது. அதுபோல, தாம் இருக்கும் இடத்துக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவராயினும் பெருமையில்லாதார் செல்வம் 'அவர் தருவார்' என ஏழைகளால் நினைக்கத்தக்க தன்மையுடையதன்று.

பாடல்-262

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.

அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையானாலும், அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால், யாரும் கள்ளி மரத்தின்மீது கை நீட்டமாட்டார்கள். அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவரானாலும் அவர் செல்வம் பயன்படாமையால் கீழ்மக்களை அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள்.

பாடல்-263


மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.

மக்கள், மிகுந்த அலைகளையுடைய கடற்கரையில் இருந்தாலும், தோண்டத் தோண்டச் சிறிதே சுரக்கும் உப்புச்சுவை இல்லாத கிணற்றைத் தேடிச் சென்று நீரைப் பருகுவர். அதுபோல, அருகில் இருப்பவர் மிகுந்த செல்வம் உடையவர்களானாலும் ஈயாதாரை விட்டு தூரத்தில் சென்று, உதவுகின்றவரிடத்திலே விரும்பிக் கேட்டுப் பெறுவர்.

பாடல்-264


புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தரி¢யும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தரிச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)

பாடல்-265


நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.

இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை.

பாடல்-266

நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.

நறுமணமற்ற புற இதழைப்போல, நல்ல தாமரை மலரிலே இருக்கும் அழகான பதுமை போன்ற திருமகளே! நீ பொன்போன்ற நல்ல குணமுடைய மேன்மக்களை விட்டு விலகி, கீழ்மக்களைச் சேர்கிறாய்! ஆதலால் பூமியில் சாம்பலாகி அழிந்து போ! ('நறுமணம் இல்லாமலே பூவிலிருக்கும் புற இதழ் போல, நீயும் நற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய்!' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. தீயோர் செல்வம் சீக்கிரம் தொலைதல் நன்று; இல்லையேல் அது பிறர்க்கும் தீங்கு உண்டாக்கும் என்பது கருத்து).

பாடல்-267


நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.

வேல் போன்ற கண்ணையுடையவளே! பிறர்க்கு உதவும் நல்ல குணங்கள் உள்ளவரி
டத்தே இருக்கும் வறுமைக்கு வெட்கம் இருக்காதோ? ஒருவருக்கும் நன்மை செய்யாத கீழ்மக்களிடம் உள்ள செல்வம் அவர்களை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொள்ளும் பிசினோ! இந்த வறுமையும் செல்வமும் ஆகிய இரண்டும் நல்லோரிடமும் கீழோரிடமும் விரும்பத்தகாத முறையில் நிற்கும் தன்மைகளைக் கண்டு நீ வியப்பாயாக!

பாடல்-268


வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.

வெட்கமற்றவர்கள் அல்லாதார் (வெட்கம் உள்ளவர்கள்) வறுமையுற்றபோதும் நடந்து சென்று ஆங்காங்கே (செய்யும் சிறு தொழிலால்) பெறும் கலவைச் சோற்றை உண்டு காலத்தைக் கழிப்பார்கள். வெட்கமற்றவர்கள் காலால் நடந்துசெல்லாராகி (உழைப்பின்றி) தம் வீட்டினுள்ளேயேயிருந்து, உடல்மேல் வியர்வை மிகுதியாக வடிய, பொரிக்கறியுடன் கூடிய உணவைத்தாமே உண்டு மகிழ்வர். (நாணமில்லார் தமது செல்வத்தைப் பிறர்க்குத் தராமல் தாமே அனுபவிப்பர் என்பது கருத்து).

பாடல்-269


பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.

பொன்போலும் நிறமுடைய செந்நெற் பயிரானது, தன்னுள் பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடிக் கொண்டிருக்க, மின்னல் விளங்கும் மேகமானது, அங்கே பெய்யாது, கடலிலே பெய்துவிடும். அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால் அவர் கொடையும் அத்தன்மையாகும். (அறிவற்றவர் தாம் பெற்ற செல்வத்தால் செய்யும் உதவி நல்வழியில் அமையாது)

பாடல்-270


ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

உலக நடையினை அறியும் அறிவிலாதார் கற்றவராயினும் கல்லாதவரே ஆவர்; உலக நடையினை அறியும் அறிவுடையார் கல்லாராயினும், கற்றவரே ஆவர். வறுமையுற்றாலும், மனம் தூயராய் இருந்து, பிறரிடம் சென்று ஒன்றையும் இரவாதவர், செல்வரே ஆவர். செல்வரும் வறியோர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவாராயின், வறியரே ஆவர். (உலகியல் அறிவும், கொடைக்குணமும் இன்றேல் செல்வம் சிறப்படையாது என்பது கருத்து)

நாலடியார் - 26.அறிவின்மை- 251 முதல் 260 வரை



பாடல்-151

நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.

பெண்மை இயல்பு மிகுந்து ஆண்மை இயல்பு குறைந்துள்ள பேடியும் கண்கள் விரும்பிக் காணத்தக்க அணிகளை அணிய மாட்டாளோ? அணிந்து கொள்வாள். (ஆயினும் இவை செல்வமாகா) ஆராய்ந்து நோக்குமிடத்து, நுட்பமான அறிவின்மையே வறுமையாகும். அஃ·து உடைமையே மிகப்பெரிய செல்வமாகும். (மனிதர்க்குச் செல்வம் என்பதும் வறுமை என்பதும், அறிவும், அறிவில்லாமையுமேயன்றிப் பொருளும் பொருளின்மையும் அன்று என்பது கருத்து).

பாடல்-252


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.

பல வகை நூல்கேள்விகளால் நிறைந்த பயனை அறிந்த நல்லறிஞர் தம் பெருமை குன்றி வறுமைத் துன்பத்தால் வாடுவதற்குரிய காரணத்தை அறிய விரும்புவீராயின் கூறுகிறேன். கேளுங்கள்! பழமையான சிறப்புள்ள நாவிற்குரிய கலைமகள் தங்கியிருப்பதால் பூவில் உறைதற்குரிய திருமகள் வெறுப்புற்று அந்நல்லவரிடம் சேரமாட்டாள். (காலமெலாம் கற்று அறிவைப் பெருக்குவதிலேயே நாட்டமுள்ள நல்லறிஞர் பொருள் சேர்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் வறுமையடைகின்றனர் என்பது கருத்து).

பாடல்-253


கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.

இளம் பருவத்தில் தந்தை 'படி' என்று சொல்லியும், அச்சொல்லை ஒரு சொல்லாக மதியாது புறக்கணித்தவன், பிற்காலத்தில் மெதுவாக ஒருவன், எழுத்துக்களைக் கொண்டிருக்கும் ஓர் ஓலையைப் பலருக்கு முன்னிலையில் 'படி' என்று தர, (அது கண்டு அவன் தன்னை அவமதித்ததாகக் கருதி) வெகுண்டு அவனைத் தாக்கத் தடித்த கோலைக் கையில் எடுத்துக்கொள்வான்.

பாடல்-254


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

படிக்காமலே காலம் கழித்து உயரமாக வளர்ந்த ஒருவன், நல்லறிவாளர் அவையில் புகுந்து பேசாமல் இருந்தாலும் நாய் இருந்தது போலாம். அவ்வாறு இராது ஏதாவது ஒன்றைப் பேசினாலும் அது நாய் குரைத்தது போலாம். (கல்வி அறிவு பெறாதவர் நாய் போல் கருதப்படுவர்.)

பாடல்-255


புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.

அறிவொடு பொருந்தாத புல்லிய புலவர் அவையில் புகுந்து, அற்பர் எல்லாரும் தாம் கல்லாதவற்றை யெல்லாம் ஆரவாரமாக எடுத்துரைப்பர். ஆனால் அறிவுடையவரோ தாம் கற்ற கருத்தைப் பிறர் கேட்டாலும், தாம் கூறுவது ஒரு வேளை பொருளோடு பொருந்தாது போய் விடுமோ எனக் கருதி உடனே சொல்லார். (சிந்தித்துப் பார்த்தே உரைப்பர்).

பாடல்-256


கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.

நூல்களைக் கற்று அவற்றின் உட்பொருளை அறிந்த நாவினையுடைய புலவர், பேசினால் ஏதேனும் பிழை நேருமோ என அஞ்சி, எதையும் கண்டபடி பேசார். கற்றறியாதவரோ வாய்க்கு வந்தபடி பேசுவர். பனைமரத்தில் உலர்ந்த ஓலைகள் எப்போதும் 'கலகல' என ஒலி எழுப்பும். பச்சை ஓலை அவ்வாறு ஒலிப்பதில்லை. (எப்போதும் அறிவுடையவர் அடங்கியிருப்பர்; அறிவற்றவர் அடக்கமின்றி ஆரவாரத்துடன் இருப்பர் என்பது கருத்து).

பாடல்-257


பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.

நன்மையை அறியாத மக்களுக்கு அறத்தின் வழியைச் சொல்வது, பன்றிக்குக் கூழ்வார்க்கும் தொட்டியில் இனிய மாங்கனியின் சாற்றை ஊற்றுவது போலாகும். அன்றியும், குன்றின் மேல் அடிக்கப்படும் முளைக்குச்சியின் நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமை போல, அறவுரையும் அவர் காதுகளில் நுழைந்து பொருந்தாமற் போகும். (அறிவற்றவர்க்குச் செய்யும் அறவுரை பயனற்றது என்பது கருத்து).


பாடல்-258

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.

பல நாளும் பாலால் கரியைக் கழுவி உலர்த்தினாலும் அதற்கு வெண்மையாகும் தன்மை இல்லை. அது போல, என்னதான் கோலால் அடித்துக் கூறினும் புண்ணியம் இல்லாதவனுக்கு அறிவு வராது. (தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்பது போல, அறிவும் புண்ணியம் இருந்தால்தான் பெற முடியும் என்பது கருத்து).

பாடல்-259


பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

பூவானது இனிய தேனைப் பொழிந்து நறுமணம் வீசினாலும் ஈயானது அப்பூவில் இருக்கும் தேனை உண்ணுதற்குச் செல்லாது. இழிவான பொருள்களையே விரும்பிச் செல்லும். அத்தகைய ஈயைப் போன்ற இழிவான குணங்கள் பொருந்திய நெஞ்சினார்க்கு, தகுதிமிக்க பெரியோர் வாயிலிருந்து வரும் தேன் போல் இனிக்கும் உண்மை உரைகள் என்ன பயனைத் தரும்?

பாடல்-260

கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

(சான்றோர் அவையில்) கற்றவர் உரைக்கும் குற்றமற்ற, நுண்ணிய கருத்துக்களைத் தன் நெஞ்சம் பிடித்து வைத்துக்கொள்ளாது உதைத்துத் தள்ளுவதால் கீழ் மகன், தன் போன்ற ஒரு கீழ் மகனது முகத்தை நோக்கித் தானும் உரையாடுவதற்கு ஒரு புல்லிய அவையைக் கூட்டுவான்.