பாடல்-291
திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.
செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதார் செய்யும் அவமதிப்பைக் கண்டபோது, மானம் உடையார் மனத்தில், காட்டிலே பற்றிப் படர்ந்து எறியும் தீப்போல அனல் மிகும்
பாடல்-292
என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள்.
பாடல்-293
யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
வறுமையுடையோராயினும், நாமாக இருந்தால், செல்வரை உள்ளே அழைத்துச் சென்று அவர்க்கு வீட்டைச் சுற்றிக் காட்டி மனைவியையும் அறிமுகம் செய்து வைப்போம். செல்வரோ, நாம் பார்த்தவுடனே தம் மனைவியின் கற்புக் கெடும் என்பவரைப் போல நாணி, நம்மை வாயிலின் புறத்தே உட்கார வைத்துச் சோறிடுவர். ஆதலால் அவர் தொடர்பை மறந்து விடுக.
பாடல்-294
இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
நன்றாகக் கஸ்தூரி மணம் கமழும் கூந்தலையுடையவளே! மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மையை விளைவிக்கும். ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!
பாடல்-295
பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று துன்பம் தருவதன்று.
பாடல்-296
மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார். 296
வளமுடைய இப்பெரிய உலகில் வாழ்பவர் எல்லாரினும் மிக்க செல்வம் உடையவராக இருந்தாலும் வறியோர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாராயின் வறியவரே ஆவர். வறுமையுற்றிருந்தாலும் செல்வரிடம் சென்று இரவாதார், பெரு முத்தரையர் (முத்துக் குவியலையுடைய பாண்டியர்) போன்ற செல்வம் உடையவர் ஆவர்.
பாடல்-297
கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
வில் போன்ற வளைந்த புருவத்தின் கீழ் வேல் போல் உலாவிவரும் நீண்ட கண்ணையுடையவளே! கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர்; இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர். (மேலான வாழ்வு வாழ விரும்புவோர் மானத்துக்கு அஞ்சி வாழவேண்டும் என்பது கருத்து).
பாடல்-298
நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்' என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும்.
பாடல்-299
நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
நம்மை விரும்பி வந்தவர்க்கு ஒன்றைக் கொடாமல் இருப்பது நாணம் அன்று; எல்லா நாளும் தீயவைக்கு அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும் நாணம் அன்று. உண்மையில், நம்மை எளியராக நினைத்து, செல்வத்தால் உயர்ந்தவர் நமக்குச் செய்த அவமரியாதையைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே நாணம் ஆகும்.
பாடல்-300
கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.
காட்டில் இருக்கும் புலியானது தான் கொன்ற காட்டுப் பசு இடப்பக்கம் வீழ்ந்ததாயின், அதை உண்ணாது பட்டினி கிடந்து இறக்கும். அது போல், இடம் அகன்ற விண்ணுலகம் கைக்குக் கிடைப்பதாயினும், அது மானம் கெட வருமாயின் அந்த விண்ணுலகையும் வேண்டார், விழுமியோர்.
No comments:
Post a Comment