Sunday, September 7, 2014

திரிகடுகம் - 16 முதல் 25 வரை



பாடல்-16

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்.

     மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.

பாடல்-17

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்
கல்விப் புணை கைவிட்டார்.


     மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.

பாடல்-18

ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை
உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும்.


     உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

பாடல்-19

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர்.

     யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.

பாடல்-20

ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன. 20


     பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும்.

பாடல்-21

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள்.


     தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

பாடல்-22

பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு.


   பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

பாடல்-23

தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு.


     தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

பாடல்-24

காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.


     மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.

பாடல்-25

செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார்.


     பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.

Saturday, September 6, 2014

திரிகடுகம் - 6 முதல் 15 வரை




பாடல்-6

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.


    பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைமாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

பாடல்-7

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சபையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.


 உள்ளன் என்னும் பறவை வாளை என்னும் மீனைப் பிடிக்க முயற்சிப்பதும், திறமையில்லாதவன் உயர்ந்த குடியில் பிறத்தலும், அஞ்சும் இயல்புடைய கற்றாரின் கல்வியும் ஊமை கண்ட கனாவைப் போல யாருக்கும் பயன்படாதது ஆகும்.

பாடல்-8

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.


     பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.

பாடல்-9

பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை.

   பெருந்தன்மை உடையாரிடம் நட்பு கொள்ளாதிருத்தலும், தமக்கு உரிமை இல்லாத பெண்களை விரும்புதலும், சிறந்தவை அல்லாதவற்றைச் செய்வதும் அறிவற்ற மூடர்கள் விரும்பிச் செய்வதாம்.

பாடல்-10

கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.

     கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது.

பாடல்-11

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து.

     அழையாத ஆட்டத்தைப் பார்ப்பதும், மது உண்டவன் சொல்லும், நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறை செல்வதும், இம்மூன்றும் ஊரில் உள்ளோருக்கு துன்பத்தைத் தரும்.

பாடல்-12

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது.


     முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

பாடல்-13

சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்
குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி
மாண்ட குணத்தான் தவசி; - என மூவர்
யாண்டும் பெறற்கு அரியார்.


     பிறர் குணம் அறிந்து நடக்கும் உறவினன், குடிகளைக் காக்கும் அரசன், சிறந்த துறவி இம்மூவரும் பெறுதற்கு அரியர் ஆவார்

பாடல்-14.

இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை
சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்
செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.

     இளமையில் தவறு செய்வது இயல்பு என்றாலும் தவறாகும். அறிவுடையோரால் விலக்கப்பட்டதைச் சொல்லுதல் அறியாமை. எப்போதும் சினத்தோடு நிற்றல் ஈனத்தன்மையாகும். இவற்றைக் கொண்டவரிடம் அறிவுடையார் நட்பு கொள்ளமாட்டார்.

பாடல்-15

பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர்
நட்கப் படாஅதவர்.


     பொய் பேசி வாழும் செல்வந்தன், தனக்கு மேலானவன் தாழ்ந்த போது போற்றாதவன், விதியால் நண்பன் துன்பப்படும்போது பயனை எதிர் பார்ப்பவன், இம்மூவரும் யாராலும் நட்பு கொள்ளத் தகாதவராவார்.

Friday, September 5, 2014

திரிகடுகம்



பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் மற்றொரு நூல் திரிகடுகம்.இதை இயற்றியவர் நல்லாதனார்.

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு,திப்பிலி  ஆகிய மூன்று மருத்துவ குணம் பெற்ற பொருட்களைக் குறிக்கும்.இம்மூன்று மருந்து பொருட்களும் உடல் நலத்தைக் கொடுப்பது போல, நூறு செய்யுட்களைக் கொண்ட திரிகடுகம் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற
அறங்களைச் சொல்கிறது.இவை உயிர் நலத்தை பேணுவனவாகும்.ஆகவேதான் இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.


     உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
     அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
     திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
     மருவு நல்லாதன் மருந்து.

என வரும் பாயிரச் செய்யுளும் இதையே உணர்த்துகின்றது.

     இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக் கூறும் முறை போற்றுதற்குரியது. பொதுக் கருத்துக்கள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன.

இனி திரிகடுகம்.

கடவுள் வாழ்த்து

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.


     உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.



முதல் பாடல்-

அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.


     அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின் தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.

இரண்டாம் பாடல்-

தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில்.


   தனது குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும், மேன்மையானவர் செய்யும் தொழில்களாகும்.

மூன்றாம் பாடல்-

கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.


     கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

நான்காம்  பாடல்-

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்
சாவ உறுவான் தொழில்.


     பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

பாடல்-5

வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி.


     பழகாத துறையில் இறங்கிப் போதலும், விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும், வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் துயரத்தைத் தரும்.

Thursday, September 4, 2014

ஐந்திணை ஐம்பது - 41 முதல் 50 வரை



5. நெய்தல்

பாடல் - 41

தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து,
ஒண் தடங் கண் துஞ்சற்க! - ஒள்ளிழாய்! - நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால்; என்கொலோ,
பூந் தலை அன்றில் புலம்பு?



     "ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.

பாடல் - 42

கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!


     "வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.

பாடல்- 43

பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத்
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல்,
ஆழியால் காணாமோ, யாம்!


     "தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

பாடல்-44

கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி,
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு, அன்னை, 'எவ்வம் யாது?' என்ன, 'கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது' என்றேன்.


    "இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள்.

பாடல்-45

ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன்
சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,-
மாந் தளிர் மேனியாய்! - மன்ற விடுவனவோ,
பூந் தண் பொழிலுள் குருகு?



     "மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள்.

பாடல்-46

ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம்
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும்
கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ?


     "அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல்-47

பெருங்கடல் உள் கலங்க, நுண் வலை வீசி,
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு.


     "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

பாடல்-48

எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!
மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்?


     "அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள்.

பாடல்-49

கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான், தெளியாக் குறி.


     "வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள்.

பாடல்-50

அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட
மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும்
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன், - ஒளியிழாய்! -
உள் உருகு நெஞ்சினேன் ஆய்.


     "ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.












Wednesday, September 3, 2014

ஐந்திணை ஐம்பது - 31 முதல் 40 வரை



4. பாலை

பாடல் - 31

உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு.


     "உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்

பாடல்- 32

விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் -
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம்.

பிடி- எண் யானை, களிறு-ஆண் யானை


     "அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.

பாடல்- 33

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?


    "பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

பாடல்-34


கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி.
வேட்ட முனைவயின் சேறிரோ - ஐய! - நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து?


     "தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல்-35

கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம்.


     "பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள்.

பாடல்-36

கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து?


     "தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.

பாடல்-37

தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை?



     "தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்.

பாடல்-38


சுனை வாய்ச் சிறு நீரை, 'எய்தாது' என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

கலைமான் - ஆண்மான்
பிணை - பெண்

     "நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.

பாடல்-39

மடவைகாண்; - நல் நெஞ்சே! - மாண் பொருள்மாட்டு ஓட,
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
நம்மின் பிரிந்த இடத்து?


     "நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான்.

பாடல்-40

இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை; - நல் நெஞ்சே! - நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
என்கொலோ சேக்கும் இடம்?



     "நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான்.

Tuesday, September 2, 2014

ஐந்திணை ஐம்பது - 21 முதல் 30 வரை



3. மருதம்

பாடல் - 21

கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை, - பாண! - வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ.

  "பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-22

போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீதான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
றி அதுகாண், எங்கையர் இற்கு.


     "மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)

பாடல்-23

யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல், -
பாண! - பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று?



     "பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள்.


பாடல்-24

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்!



     "பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-25



அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய் - விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால்.



     "நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-26


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு!



     "வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.

பாடல்-27

தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம்.



     "நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-28

ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் - வாட்கண்ணாய்! - 'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு.



     "ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-29

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?



     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

பாடல்-30

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; - ஒளியிழாய்! -
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு.


     "ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

Monday, September 1, 2014

ஐந்திணை ஐம்பது - பாடல் 11 முதல் 20 வரை




2) குறிஞ்சி

பாடல்- 11

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய, - மென்முலையாய்! -
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினா இன்றி, இனிது.



     "மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.

பாடல் 12


மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம்.


"பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.

பாடல் - 13


'கானக நாடன் கலவான் என் தோள்!' என்று, -
மான் அமர் கண்ணாய்! - மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா!


 "மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.

பாடல் - 14

புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு.


  "தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்.

பாடல் - 15


வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.



     "நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்.

பாடல் - 16

கேடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண்.


 "வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

பாடல்-17

'மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட!
எஞ்சாது நீ வருதி' என்று எண்ணி, அஞ்சி,
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும், உள் உருகி நின்று.


     "மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள்.

பாடல்-18

எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா; - கறங்கு அருவி
மா மலை நாட! - மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு.


     "ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.

பாடல்-19

நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, 'ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!' என்னும், என் நெஞ்சு.

     "நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள்.

பாடல் -20

வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! 'அணங்கு அணங்கிற்று!' என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன் - தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய்.


     "தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.