Wednesday, September 3, 2014

ஐந்திணை ஐம்பது - 31 முதல் 40 வரை



4. பாலை

பாடல் - 31

உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு.


     "உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்

பாடல்- 32

விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் -
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம்.

பிடி- எண் யானை, களிறு-ஆண் யானை


     "அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.

பாடல்- 33

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?


    "பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

பாடல்-34


கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி.
வேட்ட முனைவயின் சேறிரோ - ஐய! - நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து?


     "தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல்-35

கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம்.


     "பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள்.

பாடல்-36

கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து?


     "தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.

பாடல்-37

தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை?



     "தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்.

பாடல்-38


சுனை வாய்ச் சிறு நீரை, 'எய்தாது' என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

கலைமான் - ஆண்மான்
பிணை - பெண்

     "நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.

பாடல்-39

மடவைகாண்; - நல் நெஞ்சே! - மாண் பொருள்மாட்டு ஓட,
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
நம்மின் பிரிந்த இடத்து?


     "நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான்.

பாடல்-40

இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை; - நல் நெஞ்சே! - நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
என்கொலோ சேக்கும் இடம்?



     "நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான்.

No comments:

Post a Comment