Thursday, September 4, 2014

ஐந்திணை ஐம்பது - 41 முதல் 50 வரை



5. நெய்தல்

பாடல் - 41

தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து,
ஒண் தடங் கண் துஞ்சற்க! - ஒள்ளிழாய்! - நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால்; என்கொலோ,
பூந் தலை அன்றில் புலம்பு?



     "ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.

பாடல் - 42

கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!


     "வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.

பாடல்- 43

பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத்
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல்,
ஆழியால் காணாமோ, யாம்!


     "தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

பாடல்-44

கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி,
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு, அன்னை, 'எவ்வம் யாது?' என்ன, 'கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது' என்றேன்.


    "இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள்.

பாடல்-45

ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன்
சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,-
மாந் தளிர் மேனியாய்! - மன்ற விடுவனவோ,
பூந் தண் பொழிலுள் குருகு?



     "மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள்.

பாடல்-46

ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம்
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும்
கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ?


     "அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல்-47

பெருங்கடல் உள் கலங்க, நுண் வலை வீசி,
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு.


     "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

பாடல்-48

எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!
மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்?


     "அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள்.

பாடல்-49

கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான், தெளியாக் குறி.


     "வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள்.

பாடல்-50

அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட
மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும்
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன், - ஒளியிழாய்! -
உள் உருகு நெஞ்சினேன் ஆய்.


     "ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.












No comments:

Post a Comment