Sunday, September 7, 2014

திரிகடுகம் - 16 முதல் 25 வரை



பாடல்-16

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்.

     மண்ணுலகத்தில் புகழை அடைந்தவனும், கற்புடைய மனைவியைப் பெற்ற கணவனும், கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும் அழியாத புகழைப் பெற்றவராவார். அவர் இறந்தாலும் அவர் புகழ் நிலைக்கும்.

பாடல்-17

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்
கல்விப் புணை கைவிட்டார்.


     மூப்பு வந்தபோது துறவறத்தை மேற்கொள்ளாதவனும், கற்புடைய மனைவியைக் குறித்த காலத்தில் சேராதவனும், வாய்மொழி வெற்றியை விரும்பி பேசுகின்ற தவசிகளும், கல்வித் தெப்பத்தைக் கைவிட்டவர்கள் ஆவர்.

பாடல்-18

ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை
உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும்.


     உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பினை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

பாடல்-19

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர்.

     யானைக்கு அஞ்சி ஓடுகின்ற வீரனும், அயலான் மனைவியை விரும்புபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும், விரைவில் கெடுவர்.

பாடல்-20

ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன. 20


     பிறரிடமுள்ள பொருளுக்கு ஆசைப்படுவதும், சோம்பி இருத்தலும், கல்லான் என்று இகழப்படுவதும் யாவருக்கும் துன்பம் தருபவைகளாகும்.

பாடல்-21

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள்.


     தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும், போரில் வெற்றி அடைதலும், நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

பாடல்-22

பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு.


   பாசப் பற்றையும், பற்று விடாத விருப்பத்தையும், பொய்மையை என்றும் அறியாமை, ஆகிய இம்மூன்றையும் நீக்கினால் வீடு பேறு அடையலாம்.

பாடல்-23

தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு.


     தானம் கொடுத்தலும், பழிக்கு நாணும் நல்லொழுக்கமும், பல பொருள்களில் இருந்து நீங்கிய நல்ல சிந்தனையும், ஆகிய இம்மூன்றும் அறத்தின் பயனைத் தரும்.

பாடல்-24

காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.


     மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.

பாடல்-25

செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார்.


     பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.

No comments:

Post a Comment