2) குறிஞ்சி
பாடல்- 11
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய, - மென்முலையாய்! -
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினா இன்றி, இனிது.
"மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.
பாடல் 12
மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம்.
"பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.
பாடல் - 13
'கானக நாடன் கலவான் என் தோள்!' என்று, -
மான் அமர் கண்ணாய்! - மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா!
"மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.
பாடல் - 14
புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு.
"தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்.
பாடல் - 15
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.
"நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்.
பாடல் - 16
கேடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண்.
"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.
பாடல்-17
'மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட!
எஞ்சாது நீ வருதி' என்று எண்ணி, அஞ்சி,
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும், உள் உருகி நின்று.
"மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள்.
பாடல்-18
எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா; - கறங்கு அருவி
மா மலை நாட! - மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு.
"ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.
பாடல்-19
நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, 'ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!' என்னும், என் நெஞ்சு.
"நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள்.
பாடல் -20
வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! 'அணங்கு அணங்கிற்று!' என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன் - தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய்.
"தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.
No comments:
Post a Comment