Tuesday, September 2, 2014

ஐந்திணை ஐம்பது - 21 முதல் 30 வரை



3. மருதம்

பாடல் - 21

கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை, - பாண! - வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ.

  "பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-22

போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீதான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
றி அதுகாண், எங்கையர் இற்கு.


     "மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)

பாடல்-23

யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல், -
பாண! - பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று?



     "பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள்.


பாடல்-24

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்!



     "பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-25



அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய் - விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால்.



     "நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-26


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு!



     "வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.

பாடல்-27

தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம்.



     "நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-28

ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் - வாட்கண்ணாய்! - 'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு.



     "ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல்-29

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?



     "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

பாடல்-30

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; - ஒளியிழாய்! -
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு.


     "ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

No comments:

Post a Comment