Thursday, August 14, 2014

இனியவை நாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்: 31 (அடைந்தார்...)

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது.


தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.

பாடல்: 32 (கற்றறிந்தார்...)

கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
பத்திமையின் பாங்கு இனியது இல்.


கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

பாடல்: 33 (ஊர்முனியா...)

ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது.


ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.

பாடல்: 34 (எல்லிப்...)

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.


இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

பாடல்: 35 (ஒற்றினான்...)

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது.


வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.

பாடல்: 36 (அவ்வித்து...)

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது.


மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

பாடல்: 37 (இளமையை...)

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது.


தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

பாடல்: 38 (சிற்றாள்...)

சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து.


ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.


பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

பாடல்: 40 (பத்து...)

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.


பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

இனியவை நாற்பது முற்றும்.

No comments:

Post a Comment