Friday, August 29, 2014

களவழிநாற்பது - 31 முதல் 40 வரை



பாடல்- 31

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.


  சோழன் பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.

பாடல் - 32

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.


 சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில், குற்றம் இல்லாத உடலைப் பெற்ற நிலம் என்னும் நன்மைகள் தரும் பெண்ணானவள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வதைப் போல வீரர்கள் சிந்திய இரத்தம் எங்கும் பரவியது.

பாடல் - 33

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே-
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.


வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.

பாடல் - 34

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து.

     அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.

பாடல் - 35

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து.



     சோழ வேந்தனின் வேல்கள் பாய்ந்தமையால் எதிர்த்த அரசனும் வீழ்கிறான். அவன் ஏறி வந்த பட்டத்து யானையும் வீழ்கிறது. அக்காட்சியானது சிவந்த மலை மீது இடி வீழ்ந்தமையால் மலையோடு சிங்கமும் சிதறுண்டு கிடக்கும் காட்சி போல் உள்ளது.

பாடல் - 36

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,-
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.


     சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.

பாடல் = 37

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.



     சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது.

பாடல் - 38

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.



     பொன்னால் ஆகிய மாலையினையும், கழலினையும் அணிந்து பகைவர்களை வென்ற போர்க்களத்தில் புண்பட்ட பருத்த உடலையும் கழுத்தையும் உடைய யானைகள் வலி தாங்க முடியாமல் தவிக்கும். இடியின் ஒலியைக் கேட்டுப் பாம்புகள் உருள்வன போல இருபக்கங்களிலும் புரண்டு துடிக்கும்.

பாடல்-39

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.


 சோழ மன்னன் வெற்றி பெற்ற போர்க்களத்தில், எதிரி வீரர்கள் கைதிகளாக விலங்கிட்டு அடங்க வைத்த போரில், காம்புகள் முறிபட்ட வெண்கொற்றக் குடைகள், இரத்தம் கசியும் தசைகள் நிறைந்து காட்சியளித்தன. அக்காட்சி செம்பஞ்சுக் குழம்பு நிறைந்துள்ள அகன்ற பெரிய தொட்டிகள் போல இருந்தது.

பாடல் - 40

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து.



     சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.

பாடல் - 41

வேல் நிறத்து இயங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.


     அருவி பாயும் நீர் நாடன் இடி முரசு போன்று கொடியவர்களை வென்ற போர்க்களத்தில், வேல்களால் மார்பில் குத்தப்பட்டுத் தளர்ந்துபோன யானைகள் கலக்கம் அடைந்து ஒரு பக்கக் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்தன. அக்காட்சி, நிலமகள் கூறும் அறக்கருத்துகளை யானைகள் பணிவோடு கேட்கும் நிலைபோல் தோன்றியது.

மிகைப் பாடல்

படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும் - செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.



     பாண்டியன் கண்கள் சிவந்தது போன்று சிவந்த போர்க்களத்தில், போருக்கு உரிய மாலைகளை அணிந்து போரிட்டு மாண்ட மன்னர்களின் பருத்த குடல்களைத் தின்ற நரிகள், வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைகளின் அருகே தூங்குவது முழு நிலாவிற்கு அருகில் உள்ள முயல் வடிவக் களங்கம் போன்று இருந்தது.

No comments:

Post a Comment