16. நல்லதை உணரத் தீயவரால் முடியாது
காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக் கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டே தான் பிளக்கலாம். அதைப் போலவே நல்லவர்களின் நல்ல தன்மையை உணர வேண்டுமானால் அவர்களை விட, நல்லவர்களே அதனை முறையாக உணரக் கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.
நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.
'வயிரத்தைக் கொண்டுதான் வயிரத்தை அறுக்க வேண்டும்' என்று வழங்கும் பழமொழியையும் நினைக்க. நல்ல தன்மை இல்லாதவர் கண்ணுக்கு நல்லவரும் தீயவராகவே தோன்றுவர் என்பது கூறி, நல்ல தன்மை உடையவராவதன் சிறப்பு வற்புறுத்தப்பட்டது.
'அயிலாலே போழ்ப அயில்' என்பது பழமொழி.
17. செய்பவனுக்குத்தான் வருத்தம் தெரியும்!
மக்கள் வரிசையாக இருந்து, அதனால் மாட்சிமைப்பட்டு விளங்கும் ஒரு வட்டாடும் அரங்கம். அந்த அரங்கினுள்ளே, தாம் வட்டாடாமல் ஒதுங்கிப் பக்கத்திலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் சிலர்; அவர்களுக்கு வட்டாடும் போர் மிகவும் எளிதாகவே தோன்றும். அதன் நுட்பத்தினை அறிந்தவர்க்கே, அதன் உண்மையான நிலைமைகள் தோன்றும். அது போலவே, அருகே இருந்து நுண்மையான கருத்துக்களைச் சொன்னாலும் ஈடுபடும் செயலானது குறைபாடுடையதாக இருப்பதான அதன் தன்மையை அறியாதவன், அதனைச் செய்யப் புகுந்தால், செயல் முற்றுப்பெறாது அழிவடைதலும் உண்மையாகும்.
உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
நிரையிருந்து மாண்ட 'அரங்கினுள் வட்டு,
கரையிருந் தார்க்கெளிய போர்'.
'அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர்' என்பது பழமொழி.
18. பகையை அறவே ஒழிக்க வேண்டும்
தம்முடன் மனம் ஒத்துப் போகாதவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற இடத்தும், அதனாலும் மனம் அமைதியடைந்து இருந்து விடக் கூடாது. அப்படி இருக்காதவர்களாக, அவர்கள் இறந்து போக வேண்டும் என்னும் அளவிற்குச் சினங்கொள்ளுதலே மன்னரின் இயல்பு. அருவிகள் பரந்து வீழ்கின்ற மலைகளுக்குரிய வெற்பனே! அதுதான், கதிர் அரிந்து வைத்த அரிதாளையும் விடாமல் உழுது, நீருள் அமிழ்த்தி அழுகச் செய்வது போன்ற அறிவுடைய செயலாகும்.
பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு'.
தாளை விட்டு வைத்தால் பின்னர் அதனடியினின்றும் வளமற்ற பயிர் கிளைக்குமாதலால், உழவர் அதனை அழித்து அழுகச் செய்வார்கள். அது போலப் பகையையும் வேரறக் களைவது ஒரு நாட்டுத் தலைவனின் பொறுப்பு. அரை குறையாக விட்டு வைத்தால் மீண்டும் ஆபத்துத்தான்
'அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு' என்பது பழமொழி.
19. மூடர்களின் உறவு கூடவே கூடாது
பரந்து ஒலிக்கும் அலைகளின் மிகுதியையுடைய கடற்கரைகளுக்கு உரிய சேர்ப்பனே! நெல் அரிபவர்களுக்கு அவ்வேலையானது கெடும்படியாக எவரும் நரியைக் காட்டமாட்டார்கள். அதுபோலவே, அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து அதன்பால் நிலை பெற்றிருப்பவர்கள், நுண்ணறிவு இல்லாதவர்களின் இடையிலே செல்லவே மாட்டார்கள். ஆராய்ந்து அறிந்த உடையவர்களுடன் கலந்து நல்ல பண்புகளை மேலும் அறிவதிலேயே ஈடுபடுவார்கள்.
தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
'அரிவாரைக் காட்டார் நரி'.
. 'அரிவாரைக் காட்டார் நரி' என்பது அவரை வேறு ஒன்றில் மனம் திருப்புதல் ஆகும்.இதுவே பழமொழி
20. ஈகையே செல்வத்திற்கு அழகு
முழவுகளின் ஒலி போல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள். அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப் போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். 'இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட்டும்' என்று ஒரு பொருளை யேனும் மனதாரக் கொடுத்து மகிழாதவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும்.
முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
'அழகொடு கண்ணின் இழவு'.
'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.
21. உயர்ந்தவரை உயர்ந்தவர் அறிவார்
அடுக்கடுக்காக விளங்கும் மலைத் தொடர்களையுடைய நாட்டிற்கு உரியவனே! மணிகளின் இயல்புகளை உணர்பவர்களுக்கு, அவை சேறாகி இருந்த காலத்திலும் மணிகளாகவே காணப்படும். அதுபோலவே, தொடர்ச்சி அறாது உயர்ந்து விளங்கும் நல்ல குடியிற் பிறந்தவர்களை அவர்களுக்கு என்னவிதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள்.
இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
உணர்பவர் அஃதே உணர்ப; - உணர்வார்க்கு
அணிமலை நாட! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.
'அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்' என்பது பழமொழி.
22. உறவாடும் பகைவரை ஒதுக்கிவிட வேண்டும்
பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கைகளையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம்போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்து விட முடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடையவராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும். அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டது போல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும்.
வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
'அள்ளில்லத்(து) உண்ட தனிசு'.
" கடன். 'அள்ளில்லத்து உண்ட தனிசு' என்பது பழமொழி.
23. தருமம் செய்யப் பாவம் போகும்
செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப் பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். ஆதலால், தருமஞ் செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர்கள் செல்லும் மறுமை உலகத்தின் கண் அதனால் நன்மை உண்டாகும்.
அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'.
'அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்' என்பது பழமொழி. 'அறம் செய்யப் பாவம் நீங்கும்' என்பது கருத்து.
24. அவன் மயக்கம் தெளியவில்லை!
தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை, நீ அவன் பாற் சொல்லாதிருப்பாயாக. பாணனே! பொய்த்தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல் என்பது எவருக்குமே முடியாத செயலாகும்.
தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! - 'அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது'.
'அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது' என்பது பழமொழி.
25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல்
செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும் மயிலுக்குப் போர்வையினையும் முன் காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும் அறிந்துள்ளோம். ஆகவே, சொல்லப் போவோமானால், சான்றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்களுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.
'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பே தருவதும் சொல்லப் பெற்றது.
No comments:
Post a Comment