Monday, November 10, 2014

நாலடியார் - 38.பொது மகளிர்-371 முதல் 380வரை



பாடல்-371

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.

பாடல்-372


அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

”அழகிய  பொதுமகள் ஒருத்தி, என்னிடம் செல்வம் மிகுதியாய் இருந்தபோது, அன்பால் ஒன்றுபட்டு ஒரு கணமும் என்னைப் பிரிய விரும்பாதவள் போல, அவசியமானால் ‘நாம் மலைமீதேறிக் குதிப்போம்’ என்றாள். செல்வம் எல்லாம் வற்றிப்போன பின், காலில் வாதநோய் வந்துவிட்டது என்றழுது நடித்து, என்னுடன் மலையுச்சிக்கு வாராமல் விலகிச் சென்றாள்.”

பாடல்-373


அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.

அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.

பாடல்-374


ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.

அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர்.

பாடல்-375


பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.

இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்).

பாடல்-376


பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.

நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!

பாடல்-377


ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.

காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர்.

பாடல்-378


ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.

தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.

பாடல்-379


ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.

ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! (உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்!

பாடல்-380


உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்

ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவரிடம் எல்லாம் ஆசையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார். 

No comments:

Post a Comment