Saturday, November 15, 2014

பழமொழி நானூறு- பாடல் 26 முதல் 35 வரை



26. பெரியவர் பெரியவற்றை அறிவார்கள்

     நல்லனவற்றையும் பொல்லாதனவற்றையும், அருகே நெருங்கியிருப்பவர் தம் சொற்களைப் பெய்து அறிவுடையோருக்கு அறியச் செய்தலும் வேண்டுமோ? வில் போன்ற புருவத்தின் கீழே செவ்வரி படர்ந்திருக்கும் பரந்து அகன்ற கண்களை உடையவளே! பெரிய செயல்களை முதன்மையுடையவனாக இருந்து ஆட்சி செய்து நடத்தும் ஒருவனே, பெருமையுடைய சிறந்த செயல்களின் தன்மையும் அறிபவனாயிருப்பான் என்று அறிவாயாக.

பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்
அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! - 'அறியும்
பெரிதாள் பவனே பெரிது'.

 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்பது பழமொழி.

27. பேதை எதையும் செய்யமாட்டான்

     தனக்கு வந்து நேருகின்ற துன்பங்கள் பலவற்றையும், இன்ன வகையால் அவை வந்தனவென அறியாதிருக்கின்ற அறியாமையையே தன் வாழ்விற்குப் பற்றுக் கோடாகக் கொண்டிருப்பவன் பேதையாவான். அவன், என்றும் அதனை வெல்லும் வெற்றியுடையவன் ஆகவே மாட்டான். 'வெற்றி பெறல்' என்பது, ஊழ்வினைப் பயனால் வந்து வாய்த்த வழியேயல்லாமல், ஒருவனின் தன் முயற்சியினாலே மட்டும் அடையக் கூடியதன்று' என்று நினைத்து, அந்த அறிவினால் உண்டாகும் அச்சமே, அந்தப் பேதைக்கு அதிகமாயிருக்கும்.

உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை, - 'தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால், பூணாது' என் றெண்ணி,
'அறிவச்சம் ஆற்றப் பெரிது'.

. 'அறிவச்சம் ஆற்றப் பெரிது' என்பது பழமொழி.

28. ஊழ்வினையால் அமைவதே செயல்

     மதித்துச் சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத்தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் காரணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதனால் என்க. அதனால் அவருடைய நல்ல அறிவினையும் கூட ஊழ்வினை கெடுத்துவிடும் என்று அறிதல் வேண்டும்.

சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
'அறிவினை ஊழே அடும்'.

     மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப்பட்டது. பொறி - தலை எழுத்து எனவும் சொல்வர். 'இழுக்கம்' - விருத்தம் என்றும் பாடபேதம்.
 'அறிவினை ஊழே அடும்' என்பது பழமொழி. 'பொறியின் வழிய கருமம்' என்பதும் ஒரு பழமொழியாகக் கருதலாம்.

29. வல்லவன் காரியம் கெடாது

     நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானது ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது. அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்ததாகிய, பயனில்லாமல் சேர்ந்து கிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன், கொடுக்கும் தகுதியினைத் தெரிந்து, தகுதியுடையவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச்செல்வமும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும்.

பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், - வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
'குளநெடிது கொண்டது நீர்?'.

 'அறுமோ குளநெடிது கொண்டது நீர்' என்பது பழமொழி.

30. வருவாய் உடைய செல்வம்

     விளைந்த நெற்பயிரை அறுக்கும் பொருட்டாக வயல்களில் தேங்கி நிற்கும் நீர் வடியுமாறு, உழவர்கள் அணைகளைத் திறந்துவிடும் நீர் வளமுடைய ஊரனே! நரி நக்கிவிட்டது என்பதனால் கடல் நீர் முழுவதும் வற்றி விடுமோ? வற்றாது! அதுபோலவே, தமக்கு ஏவல் செய்பவர் பலராலும் களவு செய்யப்பட்டாலும், வருவாய் மிகுந்தவர்களுடைய பெருஞ்செல்வமும் குறைந்து போவதில்லை.

களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா; - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'.

. 'அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்' என்பது பழமொழி.

31. ஊழ்வினைதான் காரணம்

     ஓங்கி உயர்ந்த மலைமுடிகளையுடைய மலை நாடனே! செல்வம் வந்து ஆகிவருகின்ற நல்லூழ் உள்ளவர்க்குச் செய்வதொரு முயற்சியுங்கூட வேண்டியதில்லை. செல்வம் போகின்ற போகூழ் வந்தவர்க்கு, அதனைப் போகாமல் நிலை நிறுத்தச் செய்யும் முயற்சிகளாலும் பயனில்லை. எத்தகைய முயற்சிகளைச் செய்து எத்தகைய செல்வத்தைப் பெற்றாலும், ஆகாத தலையெழுத்து உள்ளவர்களுக்கு ஆகிவருவதும் ஒன்றும் இல்லை என்பதை அறிவாயாக.

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.

 'ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி.



32. மூர்க்கனின் புத்தி மாறுவதில்லை

     தான் ஆராய்ந்து உணர்ந்த கருத்துக்களையும், உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு யாதொன்றும் உறுதிப் பொருள்களைச் சொல்ல வேண்டாம். மூர்க்கன், தான் கொண்டதையே மீண்டும் மீண்டும் பற்றிக் கொண்டு விடாதிருப்பவன். நீல நிறத்தினை உண்டதான ஒரு பொருள், என்றும் தன் நிறம் மாறுபட்டும் பிறிதொன்றாக ஆக மாட்டாதல்லவா?

ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும்; 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.

 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பதை நினைக்க. 'ஆகாதே உண்டது நீலம் பிறிது' என்பது பழமொழி.

33. கொடியவன் செய்வது செயலாகாது

     வலிமையானது நிலையாகத் தங்கியிருத்தலையுடைய, மலை போன்ற மார்பினை உடையவனே! நத்தையானது உழுது வரைந்தவெல்லாம் பொருள் கணக்கு ஆகுமோ! அது போலவே, தம்முடைய தொழில்களைச் செய்து முடிக்கின்ற திறமையுடையவர்கள் செய்யும் காரியங்களைச் செய்வது, கொடுந்தொழிலர்களாகிய வெகுளிகட்கு எப்போதாவது கைகூடி வருமோ? வரவே வராது.

தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் க 'ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு' என்பது பழமொழி.

34. பொய்யைப் போக்கும் வழி

     ஒரு பொருளை மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன், பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள். அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள், குறளையைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க் காலைப் போலத் தாமும் குறளை பேசி ஆடவே மாட்டார்கள்.

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து
ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
'ஆடுபணைப் பொய்க்காலே போன்று'.

     'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி.

35. மக்களிடம் அன்பு

     குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடிமக்களிடத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்து வந்தான் என்றால், அவனைக் கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன செய்துவிட முடியும்? ஆயிரம் காக்கையை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது போல. அவ்வேந்தன் ஒருவனே, அப் பகைவர்கள் அனைவரையும் தோற்று ஓடச் செய்து விடுபவனாவான்.

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.

No comments:

Post a Comment