Tuesday, November 11, 2014

நாலடியார் - 39.கற்புடை மகளிர்- 381 முதல் 390 வரை



பாடல்-381


அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை. 381

பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் பிறர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மனைவி ஆவாள்.

பாடல்-382


குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.

பாடல்-383

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும்.

பாடல்-384


கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கரித்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள்.

பாடல்-385


எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ?

பாடல்-386

ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.

பாடல்-387


கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.

ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம்! அது போல, முழுதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலை போன்ற மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் உடையவர் கற்புடை மகளிர்).

பாடல்-388


கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.

பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவா¢ன் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).

பாடல்-389


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இப்போது, தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் யானே! (தம் கணவர் பரத்தையரைக் கூடிய போதும் கற்புடை மகளிர் பொறுத்திருக்கும் இயல்பினர் என்பது கருத்து).


பாடல்-390

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.

பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். )

1 comment:

  1. Baccarat in India | Free Baccarat at Bet365 - FBCasino
    Find out how to play Baccarat in India. This online casino offers 바카라 사이트 casinopan one of the most diverse, and easy-to-use table games available in India.

    ReplyDelete