Wednesday, November 12, 2014

பழமொழி நானூறு துவக்க உரை



பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது.

பழமொழி என்றால் என்ன?

     பழம் தின்னச் சுவைப்பது; உண்பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது. இவ்வாறே கேள்விக்கு இனிதாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் விளங்கும் அரிய வாக்குகளையே, 'பழமொழிகள்' என்கிறோம்.

     நம் முன்னோர்களின் வாழ்விலே பூத்துக் காய்த்துக் கனிந்த அனுபவ வாக்குகளே பழமொழிகள். அந்த வாக்குகளை உளங்கொண்டு, நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் போது, அப்படிக் கொள்பவரின் வாழ்வு வளமாகின்றது. பழமொழிகளைக் கற்கும் போது, நினைவிற் கொள்ள வேண்டிய ஓர் உண்மை இதுவாகும்.

     இனிப் பழையவர்களான நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தோன்றி, காலங்காலமாகத் தொடர்ந்து வழக்கிலிருந்து வரும், 'பழைய வாக்குகள்' என்றும் பழமொழிகளைக் கூறலாம்.
.
 பழமொழிக்கு 'முதுமொழி' என்றும் ஒரு பெயர்.

தற்சிறப்புப் பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.

(அசோக மரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளின் திருவடிகளைத் தொழுது பழைய பழமொழிகள் நானூறைத் தழுவி மூன்றுரை அரசர் இனிய பொருட்முறைகள் அமைந்த வெண்பாக்களாக்கி இந்நூற்பாட்டுக்களின் நான்கடியும் சுவை தோன்ற பாட்டமைத்தார்.
இறைவனை வணங்கி இப்பழமொழி நானூறும் பாடப்பெற்றன)

பாடல்-1



அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.

காமம்,வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களையும் அருமைகாக கெடுத்தலான்.குற்றமின்றி முற்றும் அறிந்த கடவுளின் திருவடிகளையே அகன்ற கடலால் சூழப்பெற்ற அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில் உரிமைப் பொருளைப் போலக் கருதி அறிந்தவர்களது உயர்வே பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரிது

(கருத்து- கடவுளின் திருவடிகளை உரிமையாக வணங்கியவர்களது உயர்வே மிகச்சிறந்தது.)

2 comments:

  1. பழமொழி விளக்கம் அருமை. தமிழில் ஆர்வமிருந்தாலும் இறைவன் அளித்த பணி ஹிந்தி ஆசான். இப்பொழுது ஒய்வு பெறும்போது அவனருளால் வையகத்தில் கணினி தமிழ் மணம் வீசுகிறது. தங்கள் மலர் மணம் என் மனம் ஹிந்தியில் எழுதத்தூண்டும் பொருளுரை. நன்றி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ளது

    ReplyDelete