பாடல்-61
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர், வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும், கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல், தாமுங் கருதாமல், நூல்களை, நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், கேட்டலே நன்று - (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று.
கற்றலிற் கேட்டலே இனிது
பாடல்-62
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை, வேண்டினும் வேண்டாவிடினும் அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள் வந்தே தீரும்.,
தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும்.
(கழுமலம் : இது சோழநாட்டுள்ள தோரூர். கருவூர் : இது சேரநாட்டுள்ளதோரூர். இவ்விரண்டும் இடைபடச் சேயவாயினும் ஊழ் கருவூரிலுள்ளவனை அரசனாக்கியது. 'விழுமியோன்' என்றது. பின்னர் 'இளமை நாணி முதுமை எய்தி, உரைமுடிவு காட்டியவன்)
'உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.
பாடல்-63
எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ தில்.
பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே!, (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து, குறுநிலத்தை ஆளுமரசன், எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல), துன்பமே துணையாக, தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி, இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல்வேண்டும்.)
'குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வ தில்' என்பது பழமொழி.
பாடல்-64
கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய்
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.
நற்குணமுடைய பெண்ணே!, தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை, தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்), கல்வியறிவு உடைய ஒருவனுக்கு, நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்; கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.
( கற்றார் அறிவுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும்.)
(1). 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை'
(2) 'ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை பழமொழிகள்.
பாடல்-65
வென்றடு கிற்பாரை வெப்பித் தவர்காய்வ(து)
ஒன்றொடு நின்று சிறியார் பலசெய்தல்
குன்றொடு தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்
நன்றொடு வந்ததொன் றன்று.
குவடுகளோடு தேனொழுக்குகள் மாறுபட்டுக் கலாம் விளைக்கும் மலை நாட்டை உடையவனே! தம்மைக்கொல்ல வல்லவர்களை, கொதிப்பிக்கச் செய்து, அவர் காய்வதாகிய ஒரு செயலின் கண்ணே நின்று, வலிமையாலும் அறிவாலும் சிறியவர்கள், அவர்க்கு மாறுபட்ட பலவற்றைச் செய்தல், அச் செயல், மிகவும் நல்ல காலத்திற்குத் தனக்கு வந்ததொரு செயலன்று.
(வலியார்க்கு மாறுபட்டு நின்று அறிவிலார் செய்வன அவர்க்கே தீங்கினை விளைவிக்கும்)
'அது பெரிதும் நன்றொடு வந்ததொன் றன்று' என்பது பழமொழி.
குவடுகள்,கலாம் விளைக்கும் போன்ற சொற்களுக்குப் பொருள் கொடுத்தல் பயன்தரும்
ReplyDelete