பாடல்-51
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.
இயல்பாக வுள்ள (தனது) பகையை வெல்ல நினைப்பவன், தனக்கு அரணாகுமாறு, முன்னரே (தன் பகைக்கு) மற்றொருவனைப் பகைவனாகுமாறு தூண்டுதல் செய்து, ஒரு நெறியால், கோபத்தின்கண் மிக்கொழுகித் தன் கைக்கு எளிதாமாறு பகையை நெருக்குக, அச் செயல், பெரிய குரங்கு சிறிய குரங்கின் கையால் துழாவியசெயலை ஒக்கும்.
(க-து.) பகைவரை அவர்க்கு மாறாக மற்றொருவரை உண்டாக்கி வெல்க என்றது இது.
'சிறு குரங்கின் கையாற் றுழா' என்பது பழமொழி.
பாடல்-52
பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரோ(டு)
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலோ டாடார் கவறு.
பாரதநூலுள்ளும், பந்தயப் பொருள் தம்முடைய தாயப்பொருளாகக் கொண்டு, நூற்றுவரும், ஐவரோடும் சூதுப்போர் செய்து, (அது காரணமாகப்) பகைவராகி இடைக்காலத்திலேயே தம்முயிரை நீக்கிக்கொண்டார்களென்றும் கேட்கப்படுதலால், அன்புடையவரோடு விளையாட்டாகவாயினும் சூதாடுதலிலர் அறிவுடையார்.
(க-து.) சூதாடல் உயிர்க்கிறுதியைத் தருவதாம்.
'காதலோ டாடார் கவறு' என்பது பழமொழி.
பாடல்-53
அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து.
ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால், அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல செயல் முறையான் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அச்செயல், இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினையொக்கும்அல்லலுற்றார்க்கு
(க-து.) அல்லலுற்ற காலத்துஅவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.
'மனை மர மாய மருந்து' என்பது பழமொழி.
பாடல்-54
தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு
உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முட்களையு மாறு.
ஆராய்ந்து அறியும் ஆற்றலுடையார், தம் பகைவரிடத்து வாழும் உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல் வலிமையைப் பெறுதலேயாம்; மற்றொரு வேறுபட்ட கள்ளினால் முன் குடித்த கள்ளின் வெறியை நீக்குதலைக் கண்கூடாகக் காண்கின்றோம்; உட்பகையாயினாரைத் துணையாகப் பெறுதல், முள்ளினால் முள்ளைக்
களைதலையொக்குமன்றோ?
(க-து.) பகைவரிடத்து உட்பகையாய் வாழ்வாரைத் துணையாகப் பெறின் வெற்றி எளிதில் எய்தலா மென்றது இது.
'முள்ளினால் முட்களையு மாறு' என்பது பழமொழி.
பாடல்-55
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார், அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை, அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா, அவ்வறிவுடையோர் நாடுகளேயாம், அங்ஙனமானால், வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.
(க-து.) கற்றாருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.
No comments:
Post a Comment