Thursday, November 13, 2014

பழமொழி நானூறு - பாடல் 6 முதல் 15 வரை


6. தருமம் செய்யுங்கள்

     தோன்றுவதற்கு அருமை உடையதாகிய மக்கட் பிறப்பினைப் பெற்றுள்ளோம். அதனால், முடிந்த வகைகளிலே எல்லாம் தரும காரியங்களைச் செய்து வருக. கொஞ்சமும் மாற்றுவதற்கு இயலாதவண்ணம் அஞ்சப்படும் நோய், முதுமை, அருங்கூற்று ஆகியவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இறக்கும்படியான நிலையிலே தருமஞ் செய்யலாமென ஒதுக்கி வைத்தல், அந்த வேளையிலே, தருமம் செய்ய இயலாதபடி அறிவு மயக்கமும் வந்து சேர்ந்து விடலாம்.

தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'.

. 'அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.

7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது!

     வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும், தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து அவரைப் புகழிலே நிலை பெறுத்துதல் எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கம் சோலைகளையுடைய மலை நாடனே! எப்படிப்பட்ட துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக.

வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

 'அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.



8. குடிப் பெருமையின் சிறப்பு

     தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமையாகக் கூறும் தற்புகழ்ச்சியாளர்களைப் பிறரும் புகழ்தல், புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று என்றாலும், அது, அடுப்பின் ஓரத்தில் முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியே யாகும்.

தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.

 'அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி.

9. மகனுக்குச் செய்ய வேண்டியது

     ஒரு தகப்பன், எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவையே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமானது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால், அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும் போற்றப்படும் உயர்ந்த பெருநிலையினை அடைவார்கள்.

எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய்! - ஆங்க 'அணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு'.

 'அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு' என்பது இதிலுள்ள பழமொழி.

10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

     மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரேயானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிட வேண்டும். தம்முடையனவே என்றாலும், பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவதில்லை அல்லவா?

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்'.

 'அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி.

11. அறிவு ஆடை போன்றது!

     அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ஙனமாகும்; பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன அல்லவா?

அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
'அணியெல்லாம் ஆடையின் பின்'.

 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது பழமொழி.

12. வம்புக்காரனின் வாய்

     நன்மை தீமைகளை அறிந்து நடக்கத் தெரியாதவர்களுடைய திறமையில்லாத சொற்களைக் கேட்க நேர்ந்தால், அதற்காக வருத்தப்படாதவர் போல, அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து விடுங்கள். பிறர் மீது இரக்கம் இல்லாது பழிதூற்றும் இயல்புடைய வம்பலர்களின் வாயை அடக்குவதற்காகக் கருதிச் செல்பவர்களே, ஊர்ப் பொதுவிடத்தைத் தாழிட்டு வைக்க முயன்றவர்கள் போன்ற அறியாமை உடையவராவார்கள்.

தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க! - பரிவுஇல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.

   'அம்பலம் தாழ் கூட்டுவார்' என்பது பழமொழி.

13. அன்பால் சாதிக்க வேண்டும்

     அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அங்ஙனமில்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். அது, கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது கறந்து கொள்ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும் ஆகும்.

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

 'அம்பு விட்டு ஆக்கறக்குமாறு' என்பது பழமொழி.

14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம்

     கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். அவரியலை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.

முயலலோ வேண்டா; முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

 'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.

15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது

     இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரனே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப்படும் அயிரையாகிய சிறுமீனைத் தூண்டிலிலே கோத்துவிட்டுப், பெரிய மீனாகிய வராலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே யாவர்.

சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே; - விரிபூ
விராஅம் புனலூர! வேண்(டு); 'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.

 'அயிரை விட்டு வரால் வாங்குபவர்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment