Friday, November 28, 2014

பழமொழி நானூறு- பாடல் 56 முதல் 60 வரை



பாடல்-56

எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம்.

 எமக்கு ஓர் துன்பம் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து,தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டாம், பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ?, இல்லை . துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை,  தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.

(க-து.) நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொள்ள வேண்டும்.


'தமக்கு மருத்துவர் தாம்' என்பது பழமொழி

பாடல்-57


கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்
கடம்பெற்றான் பெற்றான் குடம்.

மடப்பம் பொருந்திய மான்போன்ற பார்வையையுடைய,  சிறந்த மயில் போல்வாய்!,  மெய்யான நெறியிலே நின்று உலக இயலை அறிந்தார்,
 உண்மையாகவே, யாதொரு கரியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள், மீட்டுத் தன் கையின்கண் வருதல் இல்லை என்று கூறுவார்கள்.  பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான்,  உறுதி கூறுதற்குப் பாம்புக் குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால்.

(க-து.)யாதொரு சான்றுமின்றிக் கடன் கொடுத்தலாகாது.

 '(குடம்பெற்றான்' என்றது பண்டைநாளில் வழக்கினைத் தீர்ப்போர் சான்றில்லாதாரைப் பாம்புக் குடத்தின்கண் கையைவிட்டு அவர் வழக்கினைக் கூறுமாறு செய்வர். இது பண்டைய நாளில் தீர்ப்புக் கூறப்பட்ட முறை.)

'கடம் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி.

பாடல்-58


நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
குரங்கினுள் நன்முகத்த இல்.

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே, குரங்கினங்களுள், நல்ல முகத்தை உடையவை,  இல்லை; (அதுபோல) பெருகி வழிவழியாகவந்த, தீயகுணமுடையாரெல்லாருள்ளும்,  பெருக ஆராய்ந்து,  ஒருவரைத் தேறும்பொழுது,  நல்ல குணமுடையார், காணப்படார்.

(க-து.)கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார்.


'குரங்கினுள் நன்முகத்த இல்' என்பது பழமொழி.

பாடல்-59


முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
கெட்டார்க்கு நட்டாரோ இல்.

மொட்டுக்கள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே!,  குறைவின்றி ஒருவர் செல்வமுடையராய பொழுதின்கண், சமைத்த உணவினை,  உண்ணவருவோர் ஆயிரம் பேர் உளராவர், கலியுகமாகிய காலத்தில், செல்வம் இல்லாதவர்க்கு,  நட்பினர் ஒருவரும்இலர்.

(க-து.) ஒருவன் செல்வமுடையனாய காலத்து அவனைச் சூழ்ந்து நிற்பதும், அஃதிலனாய காலத்துப் பிரிந்து நிற்பதும்கீழ்மக்களது இயல்பாகும்.


'கெட்டார்க்கு நட்டாரோ இல்' என்பது பழமொழி.

பாடல்-60


ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

 மிகவும் வழியைக் கடக்கவிட்டு,  தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை, ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல), கல்வியைக் கற்றற்குரிய இளமையில்,  கல்லாதவன், முதுமையின்கண் கற்று வல்லவனாவான்,  என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

(க-து.) கற்றற்குரிய இளமைப் பருவம் கழிவதற்கு முன்னே கல்வி கற்கவேண்டும்.



(1) 'சுரம்போக்கி உல்கு கொண்டார்இல்லை.'
(2) 'மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை' 

No comments:

Post a Comment