Wednesday, October 15, 2014

நாலடியார் - 17.பெரியாரைப் பிழையாமை பாடல்-161 முதல் 170வரை



பாடல்- 161


பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

ஒலிக்கும் அருவிகளை அணிகளாகக் கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! 'பொறுத்துக் கொள்வர்' என நினைத்து, மாசற்ற பெரியோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க இயலாது.

பாடல்-162


பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே!

பாடல்-163


அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

அவமதிப்பும், மிக்க மதிப்பும் ஆகிய இரண்டும் மேன்மக்களாகிய பெரியோர்களால் மதிக்கத்தக்கனவாகும். . ஒழுக்கமில்லாக் கீழ் மக்களின் பழிப்புரையையும், பாராட்டுரையையும் கற்றறிந்த பெரியோர்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள்.

பாடல்-164


விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல மேன்மை மிக்க பெரியோர் சினம் கொள்வாரானால் தவறு செய்தவர் பாதுகாவலான இடத்தைச் சேர்ந்திருந்தாலும் தப்பிப் பிழைக்கமாட்டார்.

பாடல்-165


எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.

எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிப்பது பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து பெரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.

பாடல்-166

நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.

பெரிய கடலின் குளிர்ந்த கரையையுடையவனே! சிறியோர் நட்பு, காலை நேரத்து நிழல்போல வர வரக் குறையும்; புகழ் மிக்க பெரியோர் நட்பு அவ்வாறு குறையாது மாலை நேரத்து நிழல்போல் மேலும் மேலும் வளரும்.

பாடல்-167


மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.

மன்னன் செல்வத்தையும், மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் துய்ப்பர்; அதற்குத் தகுதி ஒன்றும் வேண்டாம். எதுபோல் எனின், கிளைகள் நெருங்கித் தளிர் விட்டுத் தழைத்து இருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மிடம் வந்தடைந்தவர்களுக்கு நிழல் தருவது போல! (இங்கு மகளிர் என்பது பொது மகளிர்.)

பாடல்-168

தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.

நீர் வளம் குன்றாத கழிக்கரையுடைய வேந்தனே! நன்மை தீமைகளை ஆராய்ந்து உணரும் தெளிவிலாரிடத்தும் நட்புக் கொண்டு பின் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்புக் கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும்.

பாடல்-169

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பெரியோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம்.

பாடல்-170


பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.

பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவன் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். 

No comments:

Post a Comment