Friday, October 24, 2014

நாலடியார் - 25.அறிவுடைமை- பாடல்241 முதல் 250 வரை



பாடல்-241

பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.

வருத்தத்தைச் செய்யும் மிக்க வலிமையுடைய பாம்பு, திங்கள் இளம்பிறைச் சந்திரனாக இருக்கும் பொழுது, அதனை விழுங்கச் செல்லாது. அதுபோல, வெல்லும் தகுதியுடையோர், பகைவர் மெலிந்திருக்கும் சமயம் பார்த்து, அவர்தம் மெலிவுக்குத் தாமே வெட்கம் அடைந்து, அவருடன் போர் செய்யப் புறப்படமாட்டார்கள். (பகைவர் தளர்ந்திருக்கும்போது அவரை வெல்ல நினையாது அவரது நிலைகண்டு இரங்குதல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

பாடல்-242


நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.

பெரிய குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! வறுமையுற்ற மக்களுக்கு அணிகலமாவது அடக்கமுடைமையாகும்; அடக்கமின்றி அளவு கடந்து நடப்பாராயின் ஊரில் வாழ்பவரால் அவர்களது குலமும் இழித்துரைக்கப்படும். (வறுமையிலும் அடங்கியிருத்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

பாடல்-243


எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

எந்த நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக வளராது; தென்னாட்டிலே பிறந்தவரும் நல்லறம் செய்து தேவர் உலகம் செல்வதால், ஒருவருக்குத் தம் முயற்சியாலேயே மறுமைப்பேறு கிடைக்குமேயன்றிப் பிறந்த இடத்தாலன்று. வட நாட்டில் பிறந்தவராயினும் நல்லற முயற்சியின்றி வீணாகக் காலத்தைக் கழித்து நரகம் புகுவார் மிகப் பலர்.

பாடல்-244

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.

வேம்பின் இலைகளிடையே வாழை பழுத்தாலும் அதன் இனிய சுவை சிறிதும் வேறுபடாது. அதுபோல, பண்புடையார் சேர்ந்த இனம் தீதாயினும் அதனால் அவர்கள் மனம் தீயதாகும் தன்மை இல்லை. (மனத் திண்மையுடையவர் தீயோர் சேர்க்கையால் குணம் மாறார் என்பது கருத்து).

பாடல்-245


கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.

அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும். ஆதலால் மக்கள் தாம் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர்; தம் தம் மன இயல்பை ஒத்தவராவர். (மாசற்ற, தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார் என்பது கருத்து).

பாடல்-246


பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.

பருத்த அடி மரத்தினையுடைய புன்னை மரங்களால் பொலிவு பெற்ற குளிர்ந்த கடற்கரையையுடைய மன்னனே! நிலையான மனம் உடையவர்கள் இனிய செய்கையுடை யாரிடத்தும் நீங்குதலும் பின் சேர்தலும் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். இப்படிச் சேர்ந்து நீங்குதலை விட முதலிலேயே நட்புச் செய்யாதிருத்தல் நல்லது. (அறிவுடையார் கூடிப் பிரிதலும் மீண்டும் கூடுதலும் இலர் என்பது கருத்து).

பாடல்-247


உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.

நாம் ஒன்றை மனத்தில் நினைக்க, அதனைக் குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் மிகும். அப்படியின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்த போதும் அவற்றை உணராத அறிவிலாரை நண்பராகக் கொள்வோமானால், அவர்களால் உண்டாகும் துன்பம், அவர்களை விட்டுப் பிரிய, தானே நீங்கும். (குறிப்பறியும் நுண்ணறிவுடையாரைக் கூடுதலும் அ·து இலாதாரைப் பிரிதலும் அறிவுடைமையாகும் என்பது கருத்து).

பாடல்-248


நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

நல்ல நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து).

பாடல்-249


கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.

அருமையாக ஒரே சீரான முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு வேந்தனே! சமுதாயத்திற்குப் பயன்தரத்தக்க ஒரு நல்ல காரியம் முறைப்படி இனிதே நிறைவேறும் பொருட்டு, பெருமை யுடையோரும் அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று; அ·து அறிவுடைமையே!

பாடல்-250


கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.

நல்ல தொழில் முயற்சியிலும் ஈடுபட்டுப் பொருளைச் சேர்த்து, இன்பமும் துய்த்து, தருமத்தையும் தகுதியுடையார்க்கே செய்து, ஒரு பிறப்பிலேயே இம்மூன்று செயல்களையும் தடையில்லாமல் நிறைவேற்ற முடியுமானால், அச்சாதனை, வாணிகத்தை வெற்றியுடன் முடித்துத் தான் சேர வேண்டிய துறைமுகப் பட்டினத்தைச் சேர்ந்த கப்பல் போல் இன்பம் தரும் என்பர்.

No comments:

Post a Comment