பாடல்-151
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
அழகிய இடத்தினையுடைய வானத்தில் விரிந்த ஒளியினைப் பரப்பும் சந்திரனும் மேன்மக்களும் பெரும்பாலும் தம்முள் ஒப்பாவார். ஆனால், திங்கள் தன்னிடமுள்ள களங்கத்தைப் பொறுத்துக்கொள்ளும்; மேன்மக்களோ அதனைப் பொறார். அவர்கள் தமது ஒழுக்கத்தில் ஒரு சிறிது தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.
பாடல்-152
இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
விரைவோடு நரியின் மார்பைப் பிளந்து சென்ற அம்பைவிட, சிங்கத்தை நோக்கிவிடப்பட்ட குறி தவறிய அம்பு உயர்ந்ததாகும். அதனால் முடிந்தாலும் முடியாவிட்டாலும் சான்றோர் பழியற்ற செயல்களையே எண்ணிச் செய்வர்.
பாடல்-153
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
நரம்புகள் மேலே தோன்றுமாறு உடல் மெலிந்து வறுமையுற்ற போதும், மேன்மக்கள் நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து இரத்தலாகிய குற்றத்தை மேற்கொண்டு பிறரிடம் செல்லார். அவர்கள் கவறுக்கொண்டு முயற்சி என்னும் நாரினால் மனத்தைக் கட்டி (இரத்தல் என்னும் தீய நினைவை அடக்கி) தம்மிடம் உள்ள பொருளுக்கு ஏற்ப நற்செயல்களைச் செய்வர். (கவறு-பிளவுள்ள பனமட்டை; ஒன்றைப் பிடித்து இறுக்கிக் கயிற்றால் கட்ட உதவுவது).
பாடல்-154
செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
நல்ல மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! மேன்மக்கள் தாம்போகும் வழியில் ஒருவரை ஒருநாள் கண்டாலும், பல நாள் பழகியவர் போல் அன்பு கொண்டு விரும்பி அளவளாவி அவரை நட்பினராக (அல்லது உறவினராக)க் கொள்வர். சில நாள் காலடிப் பட்டு நடந்து சென்றால், கல் மிகுந்த மலையிலும் தேய்ந்து வழி உண்டாகும். (பல நாள் பழகிப் பின் நட்புக் கொள்வதில் என்ன பெருமையிருக்கிறது? மேன் மக்கள் ஒரு நாள் பழகினும் நண்பராவர்).
பாடல்-155
புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
கல்வியறிவு இல்லாத பயனற்ற வீணர் அவையில் நூல்களைக் கல்லாத ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்) அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை அவமானப்பட நேரிடும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்.
பாடல்-156
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நொய்யுமாறு ஆலையிலிட்டுச் சிதைத்தும், உரலில் இட்டு இடித்து அதன் சாற்றைக் கொண்டாலும், அச்சாறு, இனிய சுவையுள்ளதாகவே இருக்கும். அதுபோல, மேன் மக்களின் மனம் புண்ணாகுமாறு பிறர் எவ்வளவு தான் இகழ்ந்துரைத்தாலும் அம் மேன்மக்கள் தம் வாயால் தீயன சொல்லார்.
பாடல்-157
கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
குற்றமற்ற அறிவுடைய மேலோர் திருடார்; கள் அருந்தார்; விலக்கத்தக்க தீயனவற்றை விலக்கித் தூயராகி விளங்குவர்; பிறரை அவமதித்து இகழ்ந்து உரையார்; மறந்தும் தம் வாயால் பொய் கூறார். ஊழ் வினையால் வறுமையுற்றாலும் அதற்காக வருந்தவும் மாட்டார்.
பாடல்-158
பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
ஒழுக்கத்தின் மேன்மையை யுணர்ந்து, ஒருவன் பிறருடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாகவும், அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாகவும், பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிப் பழித்துப் பேசுவதில் ஊமையாகவும் இருப்பானானால் அவனுக்கு வேறெந்த அறமும் கூற வேண்டியதில்லை.
பாடல்-159
பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
நற்பண்பு இல்லாத கீழ் மக்கள் தம்மிடம், ஒருவர் பல நாட்கள் வந்து கொண்டிருந்தால், (இவர் எதையோ விரும்பி இங்கு வருகிறார்) என்று கருதி அவரை அவமதிப்பர். ஆனால் நற்குணம் நிறைந்த மேன் மக்களோ தம்மிடம் வருபவர் எதையாவது விரும்பினாலும் 'நல்லது' என்று கூறி மகிழ்ந்து நாள் தோறும் அவர்க்கு நன்மையே செய்வர்.
பாடல்-160
உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
இவர் செல்வம் உடையவர்' என்று மதித்து, கீழ் மக்கள் பின்சென்று அவர் தருவன பெற்று வயிறு வளர்ப்பர் பெரும்பாலோர், அவர்களுக்கு நற்குணம் மிக்க மேன்மக்களின் தொடர்பு கிடைக்குமானால் பொருள் நிறைந்த ஒரு சுரங்கமே கிடைத்தது போல் இருக்குமல்லவா?
No comments:
Post a Comment