Thursday, October 2, 2014

நாலடியார் - 6.துறவு



பாடல்-51

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.

விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்

பாடல்-52

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை!

பாடல்-53


இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.


பாடல்-54

துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 54

அறிவில்லாதவர், பல நாட்கள் துன்பத்தால் வருந்தினாலும் ஒரு நாள் கிடைக்கும் அற்ப இன்பத்தையே விரும்புவர். கல்வி கேள்விகளால் நிறைந்த சான்றோர், இன்பத்தின் நிலையற்ற தன்மையையும் அதனால் நேரும் துன்பத்தையும் உணர்ந்து இல்லறத்தின் நீங்கினர். (துறவறத்தை மேற்கொண்டனர்).

பாடல்-55

கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.

இளமைப் பருவமும் வீணாகக் கழிந்துவிட்டது. இப்பொழுதே நோயும் முதுமையும் வந்து சேரும்; ஆதலால் துணிவுடன், என்னோடு ஆராயாது புலன்வழி செல்லும் மனமே! நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருவாயாக! (புலன் வழி செல்லாது அறிவுவழி செல்வாயாக! என ஆத்மா, மனத்தை நோக்கிக் கூறியது இது.)

பாடல்-56


மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.

மாட்சிமைப்பட்ட குணங்களும், பிள்ளைப் பேறும் மனைவியிடம் இல்லாவிட்டாலும், மணம் செய்து கொண்ட கணவன் அவளை விட்டுவிட முடியாது! எனவே திருமணம் என்பது ஒருவன் தானே மேற்கொண்ட துன்பம் ஆகும். ஆதலால்தான் மேலான ஒழுக்க நூல்களிலே உள்ள கருத்துக்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் 'திருமணம் செய்து கொள்ளாதீர்!' என்றனர்.

பாடல்-57


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.

முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் (தவங்களும்) உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே துறவற ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர்.

பாடல்-58

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக்கொள்வதல்லாமல், 'இவர்கள் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும்.

பாடல்-59

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான். (ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே வீடு பேறு அடைவான்.)

பாடல்-60

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.

அறிவிலாதார், வாழ்க்கையில் துன்பமே மிகுதியாக வருதலைக் கண்டும், துறத்தலை நினையாதவராய்ச் சிறிதளவாகிய இன்பத்தையே விரும்பியிருப்பர்! ஆனால் அறிவுடையவரோ அச்சிறிதளவு இன்பம் கிடைக்கும் போதெல்லாம் அதனைத் தொடர்ந்து வரும் துன்பத்தைக் கண்டு அச்சிற்றின்பத்தை விரும்பார்.

No comments:

Post a Comment