Wednesday, October 1, 2014

நாலடியார் - 5. தூய் தன்மை




பாடல்- 41

மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும்.

பாடல்- 42

தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமையுடையதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி ஆதலால், மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்!

பாடல்- 43


தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

எப்பொழுதும் உண்ணும் தொழில், உடம்பின் உள்ளே அழுக்கை மிகுவிக்கும் என்று உணர்ந்து பெரியோர் விலக்கிவிட்ட ஆசை என்னும் மயக்கத்தைத் தரும் உடம்பின் அழுக்கு, வால்மிளகு, வெற்றிலை, பாக்கு முதலான வாசனைப் பொருள்களை வாயிலிட்டு மென்று தின்று, தலை நிறைய மணமலர் சூடிச் செயற்கையாக அலங்கரித்துக் கொள்வதால் ஒழியுமா? ஒழியாது!

பாடல்-44

தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புரளும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா?

பாடல்-45

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்துப் பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துக்கள் என்றும் கூறிப் பிதற்றும் மேலான நூலறிவு அற்ற கீழ் மக்கள் எனது உள்ளத்தைத் துன்புறுத்த விடுவேனா?

பாடல்-46

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்?

பாடல்-47


ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

அழுக்குகள் ஊறி, வெறுக்கத்தக்க ஒன்பது துளைகளையுடைய புலன்கள் வழியாக அவ்வழுக்குக் குழம்பை வெளிப்படுத்தும் உடலாகிய ஒரு குடத்தைப் பார்த்து அறிவில்லாத ஒருவன், மேலே போர்த்திருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, 'பெருத்த தோளையுடையவளே! வளையல்களை அணிந்தவளே! என்று பிதற்றுவான்!

பாடல்-48


பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.

உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள் அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள், முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிக் குத்தித் தின்பதைப் பார்க்கவில்லை போலும்!

பாடல்-49

கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

இறந்தவர்களுடைய, சுடுகாட்டில், எரிக்கப்பட்ட தலைகள், பார்த்தவர் மனம் அஞ்சுமாறு, பள்ளமாய் ஆழ்ந்திருக்கின்ற கண்களையுடையனவாகத் தோன்றி, இறவாதிருக்கும் மற்றவரைப் பார்த்து, ஏளனமாக, மிகவும் சிரித்து, 'இவ்வுடம்பின் தன்மை இப்படிப்பட்டது! எனவே அறத்தைப் போற்றி நன்னெறியில் நில்லுங்கள்!' என்று கூறும் போலும்!

பாடல்-50

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்றத்தைப் போக்கும், மயக்கமாகிய அக்குற்றத்தினின்றும் நீங்கியவர்கள், உண்மையை உணர்ந்து, இத்தகையதுதான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருளாக மதிப்பதில்லை!

No comments:

Post a Comment