பாடல்-31
அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தியிருப்பர்.
பாடல்-32
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!
பாடல்-33
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
அறிவில்லாதவன், முன் செய்த தீவினை இப்போது வந்து பயனைத் தந்து துன்புறுத்தும்போது பெருமூச்சு விட்டு மனம் வருந்துவான். அத்தீவினைப் பயனை நினைத்துப் பார்த்து, இது முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்தது என்று உணர்ந்து அதனை ஏற்று அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் பிறவித் துன்பத்தின் எல்லையைக் கடந்து நீங்குவர்.
பாடல்-34
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
பெறுதற்கு அரிய இம் மனிதப் பிறவியை புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பெரிதும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!
பாடல்-35
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
கரும்பை ஆலையில் ஆட்டி அதன் சாற்றினால் ஆகிய வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்கள். அந்தக் கரும்பின் சக்கை தீப்பற்றி எரியும்போது துன்புறமாட்டார்கள். அதுபோல, முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனைப் பெற்றவர் எமன் வரும்போது துன்பமடையார்.
பாடல்-36
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல், எமன் பின் புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு விடுங்கள். முடிந்த அளவு மாண்புடையார் போற்றிய அறத்தைச் செய்யுங்கள்.
பாடல்-37
மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
மக்கட் பிறவியால் செய்யத்தக்க நற்செயல்களைப் பற்றி எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அவை மிகப் பலவாம். அப்படியிருக்க, எலும்பும், தோலும், சதையும், இரத்தமும் கூடிய இந்த உடம்புக்கே உதவி செய்து வாழ்ந்து கொண்டிராமல் மறுமை இன்பங்களை நுகர்தற்கேற்ற நல்லறங்களைச் செய்ய வேண்டும்.
பாடல்-38
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
மிகச்சிறிய ஆலம் விதை, வளர்ந்து ஓங்கித் தழைத்து மிக்க நிழலைத் தருவதுபோல, அறப்பொருள் மிகச்சிறியதாயினும் அது தகுதியுடையவர் கையில் சேர்ந்தால், அதன் பயன் வானினும் பெரிதாக விளங்கும்
பாடல்-39
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள் தோறும் நாள் கழிதலை அறியாதவர், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக் கழிவதை உணராது, அது 'நிலையாக இருக்கிறது' என நினைத்து இன்புறுவர்.
பாடல்-40
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன்