Monday, September 15, 2014

திரிகடுகம் - 86 முதல் 95 வரை



பாடல்-86

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை.

     உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.

பாடல்-87

கொல்வது தான் அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்
முழு மக்கள் ஆகற்பாலார்.


     ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

பாடல்-88

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,
தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,
பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு.


     நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.

பாடல்-89

அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்.


     அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.

பாடல்-90

ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு.


     செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.

பாடல்-91

பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்
மன்னா உடம்பின் தொழில்.

     தாய் தந்தையரை மதிக்காமல் இருத்தலும், அவர்கள் காலத்திற்குப் பின் துன்பப்படுவதும், துன்பம் வந்தபோது அறச் செயல்களைச் செய்யாது போனோமே என்று வருத்தப்படுவதும், மூடர்கள் செய்கைகளாகும்.

பாடல்-92

விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், என்றும்
இறந்துரை காமுறுவானும், - இம் மூவர்
பிறந்தும் பிறவாதவர்.


    சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும், மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.

பாடல்-93

இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்
பேதைமை, வாழும் உயிர்க்கு.


     அறிவில்லாதவர் இடமும், நன்மை, தீமை தெரியாது சொல்கின்ற கோப பேச்சுக்களும், நற்பொருள் அல்லாதவற்றில் விருப்பமும், அறியாமையைத் தருவதாகும்.

பாடல்-94

நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்
இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார்.


     நட்புக்குணம் இல்லாதவரிடத்து நண்பராக இருப்பதும், மனைவியை இகழ்ந்து பேசும் அறிவில்லாதவனும், குணமில்லாத சொற்களைச் சொல்பவனும், தம்முடைய ஒழுக்கத்தை உறுதியாக கடைப்பிடிக்காதவர் ஆவார்.

பாடல்-95

அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்
செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை.


     நல்லறிவு கெடும்படி வருத்துகின்ற பசியாகிய நோயும், நல்லோர் விலகும்படி தோன்றும் விருப்பமும், பகைவரின் கொடிய மொழிகளைப் பொறுக்காத கோபமும், ஆகிய இம்மூன்றும் அறமுறையை நீக்குகின்ற படைக்கருவிகளாகும்.

No comments:

Post a Comment