Sunday, September 21, 2014

நான்மணிக்கடிகை - 41 முதல் 50 வரை



பாடல்-41

போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த
வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய்
மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின்
மன்னர் சீர் வாடிவிடும்.

     போரில்லாவிடின் வீரர் சிறப்புக் கெடும். வேரற்றுவிடின் மரங்கள் பட்டுப் போகும். நீரற்றுவிடின் நெய்தல் உலரும். படை இல்லாவிடின் வேந்தனது புகழ் அழியும்.

பாடல்-42

ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை.


     ஒருவனுக்கு, நல்லியல்பு இல்லாதவர்கள் அயலார். பிறரைப் பாதுகாக்கும் நல்லியல்புடையோர் அன்பர். மேலான தந்தை எனப்படுபவன் ஆசிரியன். தாயெனப் படுபவள் முன் செய்த நல்வினையாகும்.


பாடல்-43


பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட
ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா
நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின்,
நண்பினார் நண்பு கெடும்.


     ஒருவனுக்கு நாணம் நீங்கினால் செல்வம் கெடும். ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் தீவினை கெடும். நீரற்றால் பசும்பயிர்களின் விளைவு கெடும். நண்பனின் நல்லியல்பு மாறினால் நட்புக் கெடும்.

பாடல்-44

நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற
விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின்
பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து.

     பிறர் செய்யும் நன்மையை அறியார் மாட்டுச் செய்ந்நன்றி கெடும். அன்பில்லாதவரிடத்துச் செல்லும் விருந்தினர் வாடுவர். இசையளியார் மாட்டு அரிய இசைப் பொருத்தங்களுடன் பாடும் பாட்டுப் பயனின்றிப் போகும். புலவியுணரார் மாட்டுப் புலத்தல் கெடும்.

பாடல்-45

நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய
மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின்,
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம்
முகம் போல முன் உரைப்பது இல். 45


     மலரிருக்கும் இடத்தை அதன் மணம் உணர்த்தும். ஒருவன் செயல்திறனை அவனது சொற்கள் உணர்த்திவிடும். ஆராய்ந்து பார்த்தால் மனதில் பொதிந்த தீமையை அவன் மனம் அறிவிக்கும் முன்பே முகம் அறிவிப்பது போல் வேறு எதுவும் அறிவிக்காது.

பாடல்-46

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல் வாழ்வார் இல்வழி இல்.

     மழையில்லா விட்டால் உலக மக்கட்கு நலமில்லை. அம் மழையும் தவமுடையவரில்லாதவிடத்துப் பெய்தலில்லை. அத்தவம் செய்தலும், முறையான அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை. அவ்வரசனும் குடிகளில்லாத இடத்தில் இருப்பதில்லை.


பாடல்-47

போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன்
தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல்
வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம்
நனையினான் நந்தும், நறா.


     மாலை பூவினால் விளங்கும். வண்டுகள் அப்பூவில் உள்ள தேனாற் பொலியும். நற்செயல்களால் மக்கள் பொலிவர். தேன் தாமிருக்கும் மலர் வகைக்கு ஏற்பப் பெருகி இனிக்கச் செய்யும்.

பாடல்-48

சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்;
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று
'இல்' என்றல் யார்க்கும் அரிது.


     சிறந்த நண்பர் தம்முள் ஒருவரையொருவர் சினந்து கொள்ளமாட்டார்கள். உயர் குடிப்பிறப்பினர் தன் இனத்தாரை நீங்கி வாழமாட்டார்கள். தமக்கே செலவு செய்து தன்னலம் கருதி வாழ்வோர் பிறர்க்குப் பகுத்துண்டு வாழும் பண்பறிய மாட்டார்கள். அருளுடையவர்கள் இரந்தவர்களுக்கு இல்லை என்று கூற மாட்டார்கள்.

பாடல்-49

இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்;
உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா
முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும்,
தன் அடைத்த சேனை சுடும்.


     பிணியுள்ள  உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும். அறிவில்லாரை அவர் வாய்ச் சொல்லே வருத்தும். முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும். நீதி வழியில் நடத்தப்படாத சேனைகள் அரசனையே கொல்வர்.

பாடல்-50

எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை
உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து
சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும்
தேர்தற்பொருள, பொருள்.

  பிறரை இகழுதல் என்பது இகழக்கூடிய செயலாகும். ஒருவனது உறுதியான சொல்லைக் கொண்டு அவனை நண்பனாகத் தேர்ந்தெடுக்கலாம். உண்மையறிந்து அறவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பல நூல்களையும் ஆராய்ந்து தேடுதற்குரிய பொருள்கள் மெய்ப் பொருள்களாம்.

No comments:

Post a Comment