பாடல்-46
கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி, - இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
நடக்க இயலாத குதிரையும், கட்டுத்தறியை முறித்து வீரனிருப்பதற்கேற்ற மேலிடம் தூய்மை இல்லாத பயன்படாத யானையும், மாணவர்கள் மேல் சீற்றம் கொண்டு உரைக்கும் கல்விச் சாலையும் அறிவுடையார் சேர மாட்டார்.
பாடல்-47
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும்
காப்பு இகழல் ஆகாப் பொருள்.
மெல்லிய சொல்லையும், பெரும் தோள்களையுமுடைய மகளிரும், பலவகை முயற்சியால் தேடிய செல்வமும், நாக்கில் நீர் ஊறும்படியாகச் சமைத்த உணவும், என்றும் இகழ்ந்து கூற முடியாத பொருள்கள் ஆகும்.
பாடல்-48
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய
கைப்பதனைக் கட்டி என்று உண்பானும், - இம் மூவர்
மெய்ப் பொருள் கண்டு வாழ்வார்.
வன்சொல்லை இனிய சொல்லாக கொள்கின்றவனும், நெய் ஊற்றிய சோறு எனக் கூழை மதிக்கின்றவனும், கைக்கின்ற (பழைய, சுவையற்ற) உணவை உண்கின்றவனும் மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் ஆவார்.
பாடல்-49
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத புதல்வனையும், தான் வாழும் வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.
பாடல்-50
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.
குடிமக்களை வருத்துகின்ற அரசனும், பொய் பேசுகின்ற மனிதரும், எல்லையைக் கடந்து நடக்கும் மனையாளும் இருக்குமிடத்தில் மழை பெய்யாது.
பாடல்-51
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;
சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;
ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,
தேர்ந்தக்கால், தோன்றும் பொருள்.
வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பாடல்-52
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்
குறியுடையோர்கண்ணே உள.
கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன.
பாடல்-53
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்
எண்ணின், தெரியாப் பொருள்.
குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.
பாடல்-54
தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்.
தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப் பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும்.
பாடல்-55
அரு மறை காவாத நட்பும், பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்
ஒன்றாள் எனப்படுவார்.
மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார்.
No comments:
Post a Comment