பாடல்-21
மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின்.
ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.
பாடல்-22
புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு.
பொய்யாமை புகழை ஏற்படுத்தும், அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும், கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும்.
பாடல்-23
மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்.
பாகன் தன்னைப் பொருதாலும் யானை அவனைச் சுமந்து செல்லும். தாய் தன்னை அடித்தாலும் குழந்தை அன்னையை நாடிச் செல்லும். தவறு கண்டு நண்பர் கடிந்துரைத்தாலும் நண்பர் நடுங்கும்படியான செயலைச் செய்யமாட்டார். ஆனால் பகைவரோ எப்போதும் ஒன்று பொருந்தி வாழ்வதில்லை.
பாடல்-24
நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும்.
முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும். அவைகளின் நன்மை அன்பினால் தோன்றும். விரைந்த செலவையுடைய தேரின் நன்மை அதைச் செலுத்தும் பாகனாற் பெருமை பெறும். ஊரின் நன்மை அரசனது நற்செயல்களால் மதிக்கப்படும்.
பாடல்-25
அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த
எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்
கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை,
நட்டார்கண் விட்ட வினை!
அஞ்சத் தகுந்த செயலைச் செய்ய அச்சப்பட வேண்டும். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும். கோடி பொருள் கொடுத்தாலும் மனமறிய நடுவு நிலைமையில் இருந்து மாறுபடக் கூடாது. நண்பர்களின் பொறுப்பில் விட்ட காரியங்களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது.
பாடல்-26
கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்
பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்
விளி நோக்கி இன்புறூஉம், கூற்று.
குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.
பாடல்-27
கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.
ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.
பாடல்-28
குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்
செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு.
பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்த போது கற்றறிவு துணை நிற்கும்.
பாடல்-29
திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.
பாடல்-30
புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த
நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்
இன்னா வித்து ஆகிவிடும்.
புகையின் காரணமாக நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மன மகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களால் பகைமை வெளிப்படும். பகைமையை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment