பாடல்- 61
பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின்
நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான்,
போற்றாதார் போற்றப்படும்.
ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினால் பழிப்பிற்கு ஆளாவதில்லை. நட்பியல்பு உடையவனுக்குப் பொருள் கேடு ஏற்படாது. பொருள் வரவு அதிகரிக்க அவனுக்கு உயர்வு உண்டாகும். தான் பிறரால் போற்றப்படுவதால் அவன் பகைவராலும் வணங்கப்படும் தன்மையைப் பெறுவான்.
பாடல்-62
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி,
நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள.
கண்களிற்குள்ளும் விரும்பப்படும் கண்களும் உள்ளன. அழகில்லாத பெண்களுள்ளும் மாட்சிமைப்பட்ட நற்குணம் கொண்ட பெண்களும் இருக்கின்றனர். நாட்டினுள்ளும் ஒரு பகுதியில் வளமான ஊர்களும் உள்ளன. பாட்டுகளுள்ளும் சிறப்பான பாட்டுகள் உள்ளன.
பாடல்-63
திரி அழல் காணின், தொழுப; விறகின்
எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்
இளமை பாராட்டும், உலகு.
விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.
பாடல்-64
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின்
முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள்
துன்புறுவாள் ஆகின், கெடும்.
செல்வமுடையாருக்கு அவன் விரும்பிய பொருள் கிடைக்கும். நீருண்டானால் விதைகள் முளை கிளம்பும். திருமகள் கூடினால் செல்வம் பெருகும். அவள் நீங்கினால் செல்வம் அழியும்.
பாடல்-65
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப்
புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின்
அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம்
வரிசையான் இன்புறூஉம், மேல்.
புலி ஊன் உண்டு இன்புறும். பசு புல்லுண்டு இன்புறும். கீழோர் சோறுண்டு இன்புறுவர். மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர்.
பாடல்-66
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்
முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்
அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,
அவா இல்லார் செய்யும் வினை.
ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும். ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும். ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்குப் பொருளின் மீது மேலும் மேலும் அவா உண்டாகும். பற்றில்லாதவர்கள் செய்யும் அறச் செயல் ஒரு போதும் கெடாது.
பாடல்-87
கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;
வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து
வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்
நல்லர் சிதையாதவர்.
செல்வமிருந்தும் அச் செல்வத்தால் பயனடையாதவர்களை விட செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள். செல்வத்தைச் சேர்த்துவைத்து இழப்பவரை விட வறியவர் மிக நல்லவர். சினந்து வைபவர்களை விட அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர். பிறருக்கு உதவியவரை விட செய்ந்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.
பாடல்-68
மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்
முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு
வானம் உரைத்துவிடும்.
தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவனது மனவிருப்பத்தை அவனது முகக்குறிப்பே அறிவித்துவிடும். வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்துவிடுவான். நிலத்துமக்கள் இயல்பை அந்நிலத்தில் பெய்யும் மழையின் நிலை அறிவித்துவிடும்.
பாடல்-69
பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்
மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும், குடி.
பலரும் நிறைந்து ஒன்றுபட்டு வாழ்வாரானால் ஊர் நன்றாகும். ஐயந்திரிபறக் கற்பவனால் அவன் அறிவு நன்றாகும். ஆனிரைகள் (பசுக்கள்) கூர்மையான கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருத்தலால் சிறப்படையும். ஏழைகளுக்கு உணவளிப்பதால் ஒருவனது குடி மேலோங்கும்.
பாடல்-70
ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட
குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்
வளத்த அனைய, வாழ்வார் வழக்கு.
குதிரைகள் சவாரி செய்வானது திறத்துக்கு ஒத்தன. ஒருவனுடைய அறச்செயல்கள் அவனது ஆற்றலுக்கு ஏற்ப அமைவன. குளத்தின் அளவிற்கு ஏற்ப நீர்க்கால்கள் அமையும். அவரவர் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
No comments:
Post a Comment