பாடல்-96
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை. 96
கணவனுடைய குறிப்பறிந்து நடக்கும் மனைவியும், நோன்புகளை முறைப்படி செய்யும் தவசியும், நன்மைகளைச் செய்யும் அரசனும் பெய் என்று சொல்ல மழை பொழியும்.
பாடல்-97
ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த
கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்
நற் புடையிலாளர் தொழில்.
பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும், நண்பனிடம் பொய் பேசுதலும், கற்புடைய மனைவியைத் துறத்தலும், பாவச் செயல்கள் ஆகும்.
பாடல்-98
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து. 98
அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாது வாழ்தலும், அரசன் முறையாக ஆள்வதும், தன் கணவன் குறிப்பின் வழியில் நடத்தலும், மாதம் தோறும் பெய்ய வேண்டிய மழைக்குக் காரணங்களாகும்.
பாடல்-99
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்
நல் உலகம் சேராதவர்.
கற்றவன் கைவிட்டு வாழ்தலும், விரும்பியவற்றைச் செய்யும் அறிவில்லாதவனும், தீங்கு செய்து அவற்றைப் பேசுதலும் கொண்டவர்கள், நல் உலகம் சேர மாட்டார்கள்.
பாடல்-100
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.
அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.
மிகைப் பாடல்கள்
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள.
(புறத்திரட்டு. 1222)
மறைந்து வாழ்பவர்களைப் போல் பகலில் தோன்றலும், இரப்பவர்கள் போல் தேய்ந்து காணப்படுதலும், இரப்பவர்களுக்கு கொடுப்பவர்கள் போல் முகம் ஒளிருதலும், ஆகிய இம்மூன்றும் சந்திரனுக்கு உள்ள இயல்புகளாகும்.
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும்
பரிந்தாலும் செய்யா பயன்.
(புறத்திரட்டு. 1228)
பொருள் இல்லாதவனின் இளமையும், அருள் இல்லாதவனின் அறத்தன்மையும், தெளிவில்லாதவன் பெற்ற கல்வியும், ஆகிய இம்மூன்றினாலும் பயனில்லை.
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில்
மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை
உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா.
No comments:
Post a Comment